Friday, October 3, 2008

மதுரை--- பயோடேட்டா&விஜயகாந்த் + பிஜேபியின் நிலைமை


நன்றி. குமுதம்.காம்

இவ்வாரம் ஞாநியின் பார்வையில்-- குமுதம்




மாறன் பிரதர்சுக்கு:


உங்க சன்.டி.வி. தயாரிச்ச நாக்கமூக்கா நான்சென்ஸை மதுரையில ரிலீசாக வுடாம, உங்க பங்காளி அழகிரி மிரட்டித் தடுத்துட்டாருன்னு புலம்பிகிட்டே இருக்கீங்களே. அவுரு அப்பிடி செஞ்சிருந்தார்னா அது எப்பிடி தப்பாவும்? குடும்பக் கலாசாரத்தைத்தானே அவரும் பின்பற்றினதா அர்த்தம்?உங்கப்பா சொன்னதைக் கேக்காம, எம்.ஜி.ஆரை கட்சியை விட்டு உங்க தாத்தா துரத்தினாரே, அந்த 1972 சமயத்துல, `உலகம் சுற்றும் வாலிபன்'னு ஒரு படத்தை எம்.ஜி. ஆர் எடுத்து வுட்டாரு. அப்பலாம் நீங்க ஸ்கூல்ல இருந்திருப்பீங்க. ஸ்டாலின் மாணவர் அணியில இருந்தார். அழகிரி என்ன பண்ணிகிட்டிருந்தார்னு தெரியல. உங்க தாத்தாவோட பல கைத்தடிகள்ல ஒருத்தர் மதுரை முத்து. அவுரு மதுரையில படம் ரிலீசானா நான் புடவை கட்டி வளையல் போட்டுக்கறேன்னு சவால்லாம் விட்டாரு. தமிழ்நாடு பூரா படத்துக்கு போஸ்டர் ஒட்ட விடல; பல தியேட்டர்காரங்களையும் விநியோகஸ்தர்களையும் படத்தை ரிலீஸ் செய்யக் கூடாதுன்னு உங்க தாத்தா ஆளுங்க மிரட்டிக் கெடுபிடிசெய்யறாங்கனு, அவரோட 40 ஆண்டு கால நண்பர் எம்.ஜி.ஆர் அப்ப குற்றஞ்சாட்டினாரு. ஆனா அவர் படம் ரிலீசாகி ஓஹோன்னு எல்லா ஊர்லயும் ஓடிச்சு.அழகிரியும் மதுரை முத்து இல்ல; நீங்களும் எம்.ஜி.ஆர்.இல்ல. அதான் இப்ப உங்க பிரச்னை. தம்பி தயாநிதி மத்திய மந்திரியா இருந்தப்ப, ராஜ் டி.வி.யில செய்தி ஒளிபரப்பக் கூடாதுன்னு அவர் இலாகாதானே நிறுத்திச்சு? காரணம் கேட்டப்ப, சில லட்ச ரூபா பெறுமானம் உடைய லைசன்ஸ் தொகையை அந்த டி.வி. தாமதமா கட்டினாங்க; அதனால் லைசன்சே ரத்துன்னு சொல்லிட்டீங்க. அதே சமயத்துல அரசாங்கத்தை 500 கோடி ரூபாய் ஏமாத்தி, அதுக்காக கோர்ட்டுல 150 கோடி ரூபாய் அபராதம் கட்டற தண்டனை வாங்கின ரிலையன்ஸ் கம்பெனியோட செல்போன் லைசன்ஸை ரத்து பண்ணுவீங்களான்னு நிருபர்கள் கேட்டாங்க. இதுக்கெல்லாம் போய் லைசன்ஸை ரத்து செய்ய முடியாதுன்னு தம்பி சொன்னது ஞாபகம் இருக்குங்களா ?தேர்தல் முடிஞ்சப்பறமும் விஜய் டி.வி.யில `மக்கள் யார் பக்கம்` நிகழ்ச்சி வெற்றிகரமா நடந்துகிட்டிருந்தப்ப, ஸ்டார் டி.வி. அதிகாரிகளைக் கூப்பிட்டு, `ஒண்ணு இதை ஸ்டாப் பண்ணுங்க; இல்லாட்டி மொத்தமா ஸ்டாரையே மூடிடுவோம்னு' தம்பியோட அமைச்சகத்துலருந்து சொன்னதுயார்ன்னு ஞாபகம் இருக்குங்களா? அரசியல்ல இதெல்லாம் சகஜம் இல்லீங்களா? அதுவும் குடும்ப அரசியல்ல? அட்ஜஸ்ட் பண்ணிக்குங்க. ஒரு யோசனை சொல்றேன். மத்தவங்க எடுக்கற படத்தைலாம் சன் டி.வி. வாங்குது இல்லே? சன் டி.வி. எடுக்கற படத்தை மட்டும் ஜெயா டி.வி.க்கு வித்துடுங்க. அவங்க அதை, மதுரைக்கு மட்டும், இந்திய தொலைக்காட்சி வரலாற்றிலேயே முதல் முறையாக, திரைக்கு வரவே முடியாத படத்தை டி.வி.யில காட்டி சாதனை பண்ணிடுவாங்க. அழகிரியால அதை நிறுத்த முடியாது இல்லீங்களா?



தபால் மந்திரி ராஜாவுக்கு:

இந்தத் தபால் உங்களுக்குக் கிடைக்கும்னு நம்பறேன். ஏன்னா இதை தபால் பெட்டியில போடல. நீங்க தகவல் தொழில்நுட்ப மந்திரி மட்டும் இல்ல. தபால் மந்திரியும்தான்னு ஞாபகம் வெச்சிருப்பீங்கன்னு நினைக்கறேன்.தபால் துறைக்கு புதுசா ஏதோ சின்னம் வரைஞ்சு இருக்காங்க போலிருக்கு. இப்பலாம் அரசியல் கட்சிக்கே சின்னம் சொந்தம் கெடையாதுன்னு தேர்தல் கமிஷனும் கோர்ட்டும் சொல்லிட்டாங்க. அந்த மாதிரி தபால் துறைக்கும் சொல்லிடப் போறாங்க. சட்டத் துறையிலே ஆலோசனை கேட்டு வெச்சுக்குங்க.ஏன்னா, இந்த சின்னம் மாத்தறதை பொது மக்களுக்குச் சொல்றதுக்காக கோடிக்கணக்கான ரூபா செலவு பண்ணியிருக்கீங்க போலிருக்குது. ஒருஇங்கிலிஷ் பேப்பர்ல பார்த்தேன். முதல்ல ஒரு அரைப் பக்கம். அப்பறம் இன்னொரு அரைப் பக்கம். அதுக்கப்பறம் ஒரு முழுப் பக்கம். எல்லாம் ஒரே நாள்ல. சின்னம் மாறிடுச்சுன்னு மட்டும் சொல்றதுக்கு இத்தினி வௌம்பரம். ஒரே பேப்பருக்கு லட்சக் கணக்கான ரூபாய் வருமானம். இத்தினி செலவு பண்ணதுல, அதுல கலைஞர் போட்டோவை சேத்து போட்டிருக்கலாம். கூட மன்மோகன், சோனியா போட்டோவையும் குட்டியா வெச்சுட்டா யாரும் ஒண்ணும் சொல்ல மாட்டாங்களே. தம்பிக்குக் கடிதம் எழுதறதுக்காக, உங்க டிபார்ட்மெண்ட்டை நம்பாம, தனியே அதுக்குன்னே ஒரு பத்திரிகையே நடத்தினவராச்சே தலைவரு. திரும்பியும் தபால் சின்னத்தை மாத்தணும்னா, அதை எங்களுக்கெல்லாம் சொல்லறதுக்கு மறுபடியும் கோடிக்கணக்குல செலவாகும். இப்பவே செலவு பண்ணின காசை திரும்ப எடுக்கறதுக்காக, எங்களை மாதிரி பதிப்பாளர்கள் தலையில கையை வெச்சுட்டீங்க.
இன்னிக்கு தமிழ் நாட்டுல நல்ல புத்தகம் போடறவங்கள்லாம் யாரை நம்பிப் போடறாங்க தெரியுமா? இங்கே இருக்கறவங்கள நம்பி இல்ல. இங்கே இருக்கறவங்க காசெல்லாம் டாஸ்மாக்குக்குத்தான் போவுது. வெளி நாட்டுல இருக்கற தமிழருங்க, குறிப்பா ஈழத்தமிழருங்கதான் நம்ம ஊர் புத்தகத்தைலாம் நிறைய வாங்கறாங்க. இனிமே அதுவும் கஷ்டம்தான்.`சுண்டைக்காய் கால் பணம். சுமைக்கூலி முக்கால் பணம்'னு நீங்க ஆக்கிட்டதுதான் காரணம். இதுவரைக்கும் விமானத் தபால்ல, அஞ்சு கிலோ எடைக்கு புக் பார்சல் அனுப்பினா 1175 ரூபா இருந்த கட்டணத்தை இப்ப 2360 ஆக்கீட்டீங்க. கப்பல் வழியா அனுப்பலாம். பாலு அண்ணன் சேதுக் கால்வாய் வெட்டிட்டார்னா, கப்பல் சார்ஜ்லாம் இன்னும் கொறையும்னு நம்பிகிட்டிருந்தோம். கப்பல் தபால் சார்ஜை, அஞ்சு கிலோ 175 ரூபாயிலருந்து 1100 ரூபாய் ஆக்கிட்டீங்க. இனிமே ஒரு தமிழ் புக்கும் வெளிநாட்டுலயும் விக்காது. கொஞ்சம் பாத்து ஏதாவது குறைங்க. இல்லாட்டி தலைவர் புக், கனிமொழி புக்,தமிழச்சி புக், சல்மா, இமயம் எழுதின புக்குலாம் கூட கடல் தாண்டாது. கட்சிக்காரங்க மடியிலயே கை வெச்சுடாதீங்க.



வடிவேலு வக்கீல் ராஜா செந்தூர் பாண்டியனுக்கு:

வடிவேலு வீட்டுல தாக்குதல் செஞ்சவங்க விஜய்காந்த் ரசிகர்கள்னே வெச்சுகிட்டாலும், அதுக்காக விஜய்காந்த் மேல கொலை முயற்சி செஞ்சதா எப்பிடி எஃப்.ஐ.ஆர். போடமுடியும்னு கேட்டதுக்கு சூப்பரா ஒரு பதில் சொல்லியிருக்கீங்க.``தொண்டர்களின் செயல்பாடுகளைக் கட்டுப்படுத்தும் பொறுப்பு ஒரு தலைவருக்கு இருக்கிறது. இது அனைத்துக் கட்சிகளுக்கும் பொருந்தும்.கொள்கையே இல்லாத கட்சிகள் என்று எதுவுமே கிடையாது என்கிற நிலையில், தன் கட்சித் தொண்டர்களின் நடவடிக்கைக்கு நான் பொறுப்பில்லை என்று எந்தக் கட்சித்தலைவரும் நழுவமுடியாது'' அப்பிடின்னு நச்சுன்னு சொல்லியிருக்கீங்க.நிலப்பிரச்னையில அமைச்சர் என்.கே.பி.சாமி தன்னை போன்ல மிரட்டினாருன்னு ஒருத்தர் கோர்ட்டுல சொல்றாரு. அமைச்சர் வீட்டு போன்லருந்து கால் போனது நிஜம்தான். ஆன அப்ப அமைச்சர் வாக்கிங் போயிருந்தாருன்னு போலீஸ்ல பதில் சொல்றாங்க. உங்க வாதப்படி, தன் வீட்டு போன்லருந்து ஒருத்தருக்கு கால் போனா, அதுக்கு அமைச்சர்தானே பொறுப்பு ? அவர் மேல எஃப்.ஐ.ஆர். போடணும் இல்லீங்களா?மதுரை தினகரன் ஆபீஸ் முன்னால் போய் மறியல், கலாட்டா பண்ணவங்க எல்லாரும் தி.மு.க காரங்கதான். மறியலை நடத்தினவரு மேயர். அப்ப அவங்க செஞ்ச கலாட்டாவுல மூணு பேர் செத்துப் போனதுக்கு, எஃப்.ஐ.ஆர்ல தி.மு.க. தலைவர் கலைஞர் பேரைச் சேர்க்கணும் இல்லீங்களா, செந்தூர் பாண்டியன்? எதிர்ப்பு தெரிவிச்சவங்க என்னத்தை எதிர்த்தாங்க ? அழகிரியை அவமானப்படுத்தற மாதிரி ஒரு கருத்துக் கணிப்பு பேப்பர்ல போட்டதைத்தானே? அவங்க எல்லாரும் அழகிரி ரசிகர்கள்தானே, சாரி, தொண்டர்கள்தானே? அப்ப, அவங்க செஞ்ச போராட்டத்துல என்ன நடந்திருந்தாலும், அந்த எஃப்.ஐ.ஆர்ல அழகிரி பேரையும் சேக்கணும் இல்லீங்களா?உங்களை மாதிரி நாலு வக்கீல், இல்லீங்க நீர் ஒருவரே போதும்.. இப்பிடிசேம் சைட் கோல் அடிக்கறதுக்கு... (தருமி நாகேஷ் குரல்ல வாசிச்சுக்குங்க..) என்ன சொல்றீங்க?



தோழர்கள் வரதராஜன், தா.பாண்டியன் ஆகியோருக்கு:

ஒரு வழியா தமிழ்நாட்டுலயும் மூன்றாவது அணி தேவைப்படுதுன்னு நீங்க ஏத்துகிட்டது ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு........ன்னு சொல்லலாம்னு பார்த்தா, நீங்க சொல்ற மூணாவது அணி வேற ஏதோ போல இருக்குது.டெல்லியில காங்கிரஸ் ஒரு அணி. பி.ஜே.பி ஒரு அணி.ரெண்டு பேர் கொள்கையும் வேணாம்னு சொல்றவங்கள்லாம் சேர்ந்து மூணாவது அணின்னு சொல்றீங்க. அது புரியுது. தமிழ் நாட்டுல தி.மு.க. ஒரு அணி. அ.தி.மு.க. ஒரு அணி. ரெண்டு பேரும் ஒ.கு.ஊ.மட்டைன்னு சொல்றவங்கள்லாம் சேர்ந்து மூணாவது அணின்னு நான் நினைச்சுகிட்டிருந்தேன்.அதைத்தான் தாலாட்டி, சோறு ஊட்டி, வளர்த்து, ஆளாக்கற பெரும்பொறுப்பை இந்த வயசான காலத்துல நீங்க ரெண்டு பேரும் எடுத்துசுமக்கப் போறீங்கன்னு நினைச்சேன்.ஆனா, அப்பிடி இல்ல போலிருக்குதே. பா.ம.க., தே.மு.தி.க., அ.தி.மு.க., ம.தி.மு.க. எல்லாரும் உங்க கூட ஓரணியில வரணும்னு தா.பா. சொல்லியிருக்காரே. அதாவது காங்கிரஸ், பி.ஜே.பி.க்கு மட்டும் தாழ்ப்பா. மீதி பேர் திறந்த வூட்டுல யார் வேணாலும் நுழையலாம்கற மாதிரி அர்த்தம் இல்லீங்களா காம்ரேட்ஸ்?அதாவது டெல்லியில இருக்கற மாதிரியே இங்கேயும் மூன்றாவது அணி - காங்கிரஸ், பி.ஜே.பி. இல்லாத அணி. தி.மு.க., அ.தி.மு.க. இல்லாத அணின்னு நான்தான் தப்பா அர்த்தம் எடுத்துட்டேன் போல... அந்த அணியை தோழர் விஜய்காந்த்துதான் உருவாக்க முயற்சிக்கிறார் போல.. நீங்க இல்ல.அப்பிடியே இருக்கட்டும். எனக்கு ஒரே ஒரு சந்தேகம்.காங்கிரசை வுட்டு நீங்க ஏன் வந்தீங்க? அமெரிக்காகூட அணு ஒப்பந்தம் போட்டு தேசத்தையே அடகு வெக்கறாங்கன்னுதானே? அந்த ஒப்பந்தத்தை ஆதரிக்கறவங்கதானே பா.ம.க.? விஜய்காந்த்.? அவங்க கூட மட்டும் எப்பிடி சேருவீங்க? அதுக்கு பேசாம காங்கிரஸ் கூடவே இருந்துட்டுப் போயிடலாமே? அணு ஒப்பந்தத்தை காங்கிரஸ் ஆதரிக்கறதும், அதைக் கொண்டு வர்ற காங்கிரஸ் ஆட்சி கவிழாம காங்கிரசை பா.ம.க. ஆதரிக்கறதும் வெவ்வேறான இயங்கியல் முரண் தன்மையுள்ளவைங்கறதைப் பத்தி மார்க்ஸ் ஏதாவது சொல்லியிருக்காரா?.


இந்த வாரப் பூச்செண்டு

தங்கள் துக்கத்தை ஒதுக்கி வைத்துவிட்டு இறந்த உறவினரின் உடல் உறுப்புகளை உயிரோடு இருக்கும் பலருக்குப் பயன்படும் வகையில் அளித்த திருக்கழுக்குன்றம் ஹிதேந்திரனின் பெற்றோருக்கும், கார்ட்டூனிஸ்ட் மதனுடைய சகோதரர் முரளியின் குடும்பத்தினருக்கும், அறுவை சிகிச்சைக்காக உறுப்புகளை விரைந்து சென்று அளிக்க உதவிய தமிழக காவல் துறை அதிகாரிகள், ஊழியர்கள் அனைவருக்கும் இ.வா.பூ.



இந்த வாரக் குட்டு

எனக்கும் வாசகர்களுக்கும். சென்ற இதழ் கட்டுரையில் டாலர்களை ரூபாய்க் கணக்கில் எழுதும்போது, மில்லியன் டாலர் கணக்கிலேயே பில்லியன்களையும் தவறாக மாற்றி எழுதியதற்காக எனக்கும், இந்தத் தவறைக் கண்டித்து எழுதத் தவறியதற்காக வாசகர்களுக்கும் இ.வா.குட்டு. மில்லியன் என்பது 10 லட்சம். பில்லியன் என்பது 1000 மில்லியன் அதாவது 100 கோடி.


இந்த வாரச் சிரிப்பு

"இந்திய மக்கள் எல்லாரும் உங்களை மிகவும் நேசிக்கிறார்கள்." - அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ்ஷிடம் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்.



குடும்பத்தினருக்கு அறிவுரை ?

"அளவுக்கு மிஞ்சி செல்வம் சேர்ப்பது அழிவைத்தான் ஏற்படுத்தும்." - கலைஞர் கருணாநிதி.

குடிமகன்களின் ஏக்கம்--குமுதம் கார்ட்டூன்





குமுதம் .காம்