திமுகவும் அதிமுகவும் ஒன்றா???
சொத்துக்குவிப்பு வழக்கிலும், டான்சி நில ஊழல் வழக்கிலும் தண்டிக்கப்பட்டவர் ஜெயா என்ற போதும், இந்த இரண்டு வழக்குகளிலும் அவர் விடுதலையை வாங்கியது சட்டத்திற்குப் புறம்பானது என்ற போதும், அவற்றையெல்லாம் பின்னுக்குத் தள்ளி, 2ஜி வழக்கு விசாரணை முடிவதற்கு முன்பே தி.மு.க.வையும் கருணாநிதியையும் மன்னிக்கவே முடியாத குற்றவாளியென மக்களின் மனதில் பதிய வைப்பதில் ஜெயா, துக்ளக் சோ, பா.ஜ.க., உள்ளிட்ட பார்ப்பனக் கும்பல் வெற்றி பெற்றுவிட்டது.
2ஜி விற்பனையில் அரசுக்கு 1,76,000 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டதாகக் கூறப்படுவது தணிக்கைத் துறையின் அனுமானம்தான். அந்த இழப்பு குறித்து இந்தத் தொகையைவிடக் குறைவான அனுமானங்களையும் முன்வைத்திருக்கிறது தணிக்கைத் துறை. அவ்விற்பனையில் விதிமுறையை மீறி நடந்துகொண்டு, சில நிறுவனங்களுக்குச் சாதகமாகச் செயல்பட்டிருக்கிறார் என்பதுதான் ஆ.ராசா மீதான வழக்கு; அதற்காக, கலைஞர் டி.வி.க்கு இருநூறு கோடி ரூபாய் இலஞ்சமாக அளிக்கப்பட்டிருக்கிறது என்பதுதான் குற்றச்சாட்டு. ஆனால், கடந்த ஐந்தாண்டுகளில் மட்டும் ஜெயா-சசி கும்பல் அடித்திருக்கும் கொள்ளையோ தி.மு.க. மீது சுமத்தப்பட்டுள்ள 2ஜி ஊழலைக் காட்டிலும் பன்மடங்கு அதிகமானது.
சமச்சீர் கல்வி போராட்டம்
பதவியேற்றவுடனேயே சமச்சீர் கல்வித் திட்டத்தை ரத்து செய்த பார்ப்பன ஜெயா அரசைக் கண்டித்து மாணவர்களின் கல்வி உரிமைக்கான பெற்றோர் சங்கம் விருத்தாசலம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகளை அணிதிரட்டி நடத்திய சாலை மறியல் போராட்டம் (கோப்புப் படம்)
பதவியேற்றவுடனேயே சமச்சீர் கல்வித் திட்டத்தை ரத்து செய்த பார்ப்பன ஜெயா அரசைக் கண்டித்து மாணவர்களின் கல்வி உரிமைக்கான பெற்றோர் சங்கம் விருத்தாசலம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகளை அணிதிரட்டி நடத்திய சாலை மறியல் போராட்டம் (கோப்புப் படம்)
2ஜி ஊழல் ஊடகங்களிலும் பொதுவெளியிலும் விவாதிக்கப்பட்ட அளவிற்கு அம்மா அடித்திருக்கும் இந்தக் கொள்ளை பேசப்படவில்லை. அப்படி விவாதிக்க வேண்டிய சூழல் ஏற்படும்போதெல்லாம், “தி.மு.க.வும் அ.தி.மு.க.வும் ஊழலில் ஊறிய கட்சிகள், ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள், இந்த இரண்டு திராவிடக் கட்சிகளை வீழ்த்தினால்தான் தமிழகம் உருப்படும்” என சோ உள்ளிட்ட பார்ப்பனக் கும்பல் ஒரு நரித்தனமான வாதத்தைக் கிளப்பி அதற்குள் புகுந்து கொண்டு, பார்ப்பன ஜெயாவைப் பாதுகாக்கிறது. பார்ப்பனக் கும்பலின் இந்தக் கிரிமினல்தனத்தை ம.தி.மு.க., பா.ம.க., வி.சி.க., நாம் தமிழர் கட்சிகள் மட்டுமின்றி, போலி கம்யூனிஸ்டுகளும் இந்தத் தேர்தலில் வழிமொழிந்து வருகின்றனர்.
சமச்சீர் கல்விச் சட்டத்தைக் கொண்டு வந்த தி.மு.க.வையும், அக்கல்வித் திட்டத்தைப் பதவியேற்றவுடனேயே குழிதோண்டிப் புதைக்க முயற்சி செய்த ஜெயாவின் அ.தி.மு.க.வையும்; அனைத்துச் சாதியினரும் அரச்சகராகும் சட்டத்தைக் கொண்டுவந்த தி.மு.க.வையும், அரசியல் தரகன் பார்ப்பன சு.சாமியோடு கைகோர்த்துக்கொண்டு அச்சட்டத்தை வேரறுத்த அ.தி.மு.க.வையும்; மோடி அரசின் இந்தி, சம்ஸ்கிருத திணிப்புகளை எதிர்த்துக் குரல் கொடுத்து வரும் தி.மு.க.வையும், அத்திணிப்புகளை மௌனமாக இருந்து அங்கீகரித்து வரும் அ.தி.மு.க.வையும்; ஆர்.எஸ்.எஸ்.-பா.ஜ.க.-மோடியின் இயற்கை கூட்டாளியான ஜெயாவையும்; பதவி, அதிகாரம் என்ற பிழைப்புவாத நோக்கில் பா.ஜ.க.வோடு தேர்தல் கூட்டணி வைத்துக்கொண்ட தி.மு.க.வையும் ஒன்று என சாதிப்பதும், ஊழலைச் சாக்காக வைத்துக் கொண்டு அவ்விரண்டு கட்சிகளுக்கு இடையே வேறுபாடே கிடையாது என வாதிடுவதும் நரித்தனமானது.
நன்றி: #வினவு