Sunday, September 14, 2008

தமிழகத்தின் உண்மை நிலை உலக வங்கியின் அறிக்கை

ஏழைகளுக்கு கிலோ அரிசி ரூபாய் ஒன்று.


இப்ப்டி வரிசையாக சலுகைகளை அறிவித்து

தமிழ் நாட்டில் எல்லோரும் வசதியாக இருக்கிறார்கள்

என்பது ஆட்சியில் இருப்பவர்களின் கூச்சல்.

குமுதம் ரிப்போர்ட்டரில் உலக வங்கி

சொன்னதை படிப்பார்களா ? இந்த அரசியல்வாதிகள்.
 
தமிழ்நாட்டில் ஏதோ பாலும், தேனும் ஓடுவதுபோல ஒரு நினைப்பில் நாம் இருக்கும் நிலையில் `தமிழகம் ஒரு பஞ்சைப் பராரி மாநிலம்' என்ற தகவலை வெளியிட்டு ஓர் உலுக்கு உலுக்கியிருக்கிறது உலக வங்கி.




உலக வங்கியால் எடுக்கப்பட்ட வறுமை குறித்த புள்ளிவிவரம், இந்திய அரசியல் அரங்கில் பெரும் விவாதப் பொருளாகியிருக்கிறது. குறிப்பாக, தமிழகத்தில் பாதிப்பேர் ஏழைகள் என அதில் கூறியிருப்பது எதிர்காலம் குறித்த அச்சத்தை சாமானியர்கள் மத்தியில் ஏற்படுத்தியிருக்கிறது.



இது தொடர்பாக நாம் கல்பாக்கம் மருத்துவர் டாக்டர் வீ.புகழேந்தியைச் சந்தித்தபோது இதுபற்றி புதுப்புதுத் தகவல்களைப் புட்டுப்புட்டு வைத்தார் அவர். குறிப்பாக, ``தமிழகத்தில் இரண்டு பேரில் ஒருவர் வறுமைக் கோட்டுக்குக்கீழ் வாழும் ஏழை. இங்கே அரசால் கொண்டு வரப்பட்ட மக்கள் நலத்திட்டங்கள் எதுவும் முழுமையாக மக்களைச் சென்று சேராததுதான் தமிழகத்தில் ஏழைகள் பெருக்கெடுக்கக் காரணம். தமிழகத்தில் மட்டும் ஆண்டுதோறும் சுமார் நாற்பதாயிரம் குழந்தைகள் சத்துக்குறைவால் இறக்கின்றன'' என்று உலக வங்கி சர்வே தகவல்களை முத்தாய்ப்பாகக் கூறிவிட்டுத் தொடர்ந்தார் அவர்.



``இந்தியர்களில் 82 கோடியே எண்பது லட்சம் பேரின் (அதாவது 75.6 சதவிகிதம் பேரின்) தினசரி வருமானம் 80 ரூபாய்க்கும் குறைவாகத்தான் இருக்கிறது. நமது மக்கள் தொகையில் 45 கோடியே 60 லட்சம் பேர் வறுமைக் கோட்டுக்குக்கீழ் உள்ளனர். இவர்களது தினசரி வருமானம் ரூபாய் ஐம்பதுக்கும் கீழேதான்.



80_90_ம் ஆண்டுவரை வறுமைக் கோட்டுக்குக்கீழ் வாழ்பவர்களின் எண்ணிக்கை மளமளவெனக் குறைந்து வந்தது. 1991_முதல் 2005 ஆண்டுக்கு இடைப்பட்ட காலகட்டத்தில் `புதிய பொருளாதாரக் கொள்கைகள்' அறிவிக்கப்பட்ட பிறகுதான் வறுமை ஒழிப்பின் வேகம் குறைந்து போனது. முன்பெல்லாம், ஒருவர் நாளொன்றுக்கு 44 ரூபாய்க்குக் குறைவாகச் சம்பளம் வாங்கினால் அவர் வறுமைக் கோட்டுக்குக் கீழே இருக்கிறார் என்றார்கள். இப்போது 55 ரூபாய் சம்பளம் வாங்கினால்தான் வறுமைக்கோடு என்கின்றனர். அதன்படி பார்த்தால், தமிழகத்தில் இரண்டு பேருக்கு ஒருவர் பரம ஏழையாக இருக்கிறார் என சர்வே விவரம் தெரிவிக்கிறது.



வறுமை காரணமாக தமிழகத்தில் மூன்றில் இரண்டு குழந்தைகளுக்குக் குறைந்தபட்ச வசதிகள் கூட கிடைப்பதில்லை. ஆனால், கட்சி வித்தியாசம் இல்லாமல், எல்லா அரசியல்வாதிகளும் வறுமை ஒழிப்பைப் பற்றிப் பேசி வருவதுதான் வேடிக்கையாக இருக்கிறது.



`இந்தியாவில் 60 சதவிகித குழந்தைகள் வறுமையின் வெளிப்பாடான சத்துக்குறைவால் இறப்பதாக' யுனிசெஃப் அமைப்பு கூறியுள்ளது. அந்த அமைப்பின் அதிகாரி ஜார்ஜ் தாமஸ் என்பவர், தமிழகத்தில் வயதுக்கேற்ற எடை இல்லாமல் 33 சதவிகித குழந்தைகளும், மூன்று வயதிற்குட்பட்ட 73 சதவிகித குழந்தைகளும் ரத்த சோகையால் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறுகிறார். அப்படியானால், இரும்புச் சத்து மாத்திரைகள், சத்துணவு, கர்ப்பிணிகளுக்கு சத்துணவுத் திட்டம், மகப்பேறு நிதியுதவி, குழந்தைகளுக்கு வாரம் மூன்று முட்டைத் திட்டம், வாழைப்பழம் வழங்குதல் போன்ற பல ஆயிரம் கோடி ரூபாய்த் திட்டங்களால் எந்தவித மாற்றமும் வரவில்லை என்றுதானே அர்த்தம்? பல வருடங்களாகக் குழந்தைகளின் சத்துக்குறைவைப் போக்க இவற்றைச் செய்வதாக அரசு கூறினாலும், ஆண்டுதோறும் சுமார் 40 ஆயிரம் குழந்தைகள் சத்துக் குறைபாட்டால் இறப்பதற்கு என்ன காரணம்?



அண்மையில் தமிழக திட்டக்குழுத் துணைத் தலைவர் நாகநாதன் ஒரு பேட்டியில், `இந்தியாவில் 150 ரூபாய்க்கு வாங்கும் செருப்பு அமெரிக்காவில் 750 ரூபாய். அங்கே நாற்பத்து நான்கு ரூபாய்க்கு வாங்கப்படும் உணவுப் பொருட்களை இங்கே 17 ரூபாய்க்கு வாங்கலாம்' என்று கூறியிருக்கிறார். ஆனால், நிஜ நிலவரம் என்னவென்றால், அமெரிக்காவில் ஒரு கையளவு கோழிக்கறி இரண்டு டாலருக்கு விற்கப்படுகிறது. ஒரு கைப்பிடி வெண்டைக்காய் அங்கே நான்கு டாலர். ஆனால், நம்மூரில் வெண்டையின் விலைக்கும், கோழிக்கறியின் விலைக்கும் உள்ள வித்தியாசம் மலைக்கும், மடுவுக்கும் உள்ள வித்தியாசம். அமெரிக்காவில் சத்துள்ள ஆகாரங்கள் மிகக் குறைந்த விலையில் கிடைக்கின்றன. இங்கோ விலைவாசி விஷம் போல் ஏறிக்கிடக்கிறது.



`தமிழகத்தில் விவசாயக் கடன் ஏழாயிரம் கோடியைத் தள்ளுபடி செய்திருக்கிறோம். விவசாயக் கடனுக்கான வட்டியை ஏழு சதவிகிதத்திலிருந்து நான்கு சதவிகிதமாகக் குறைத்திருக்கிறோம்' என்று திட்டக்குழு நிபுணர்கள் கூறியிருக்கிறார்கள். ஆனால், இந்தக் கடன் தள்ளுபடி எல்லாம் பணக்கார விவசாயிகளுக்குத்தான் பலனளித்திருக்கிறது. தமிழகத்தின் நெற்களஞ்சியமான தஞ்சையில் ஒரு ஹெக்டேருக்கு 13 டன்னாக இருந்த நெல் உற்பத்தி, தற்போது மூன்று டன்னாகக் குறைந்து விட்டது. நிலம் கெட்டுப்போய், விளைநிலங்களின் பரப்பு குறைந்ததே இதற்குக் காரணம். தமிழக, மத்திய பட்ஜெட்டுகளில் இயற்கை வேளாண்மையை அதிகரிப்பது பற்றி ஒரு வார்த்தைகூட இல்லாதது ஏமாற்றமளிக்கிறது.



1947_ம் ஆண்டில் 60 சதவிகிதமாக இருந்த இந்தியாவின் விவசாய உற்பத்தி, நடப்பு ஆண்டில் வெறும் 18 சதவிகிதமாகக் குறைந்து விட்டது. பெரும் தொழில் நிறுவனங்களுக்காக விவசாய நிலங்கள் கையகப்படுத்தப்பட்டதும், சிறப்புப் பொருளாதார மண்டலங்களின் ஆக்கிரமிப்பு போன்றவையும்தான் இதற்குக் காரணம். இதற்கிடையே இதைப்பற்றி எந்தக் கவலையும் இல்லாமல் நாகநாதன் போன்றவர்கள் அமெரிக்காவில் செருப்பு நிலவரம் பற்றிப் பேசுகிறார்கள்.



90_ம் ஆண்டில் நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சியில் முதலிடத்தில் இருந்த விவசாயம், இன்று ஐந்தாவது இடத்திற்குப் போய்விட்டது. பசுமைப்புரட்சியின் தந்தை எம்.எஸ்.சுவாமிநாதன், `நம் நாட்டில் உற்பத்தியாகும் உணவுப் பொருட்களை அனைத்து மக்களுக்கும் கொடுத்துவிட முடியும். ஆனால், சமமான பங்கீடு என்பது இங்கில்லை' என்று கூறியிருக்கிறார். அந்த அளவுக்கு உற்பத்தி, சந்தை வியாபாரிகளிடம் முடங்கிக் கிடக்கிறது. அரசின் திட்டங்கள் ஊழல், சுரண்டல் இல்லாமல் மக்களிடம் சென்று சேர்ந்தால் அறக்கட்டளைகள், இலவசங்கள் என்ற வார்த்தைகளே இல்லாமல் போய்விடும். இல்லாவிட்டால், அடுத்த இரண்டு ஆண்டுகளில் உலக வங்கி வெளியிடப் போகும் சர்வே விவரத்தில், உலக ஏழைகளில் நாம் கணிசமான அளவு இன்னும் முன்னேறியிருப்போம்'' என ஆதங்கத்தோடு கூறி முடித்தார் டாக்டர் புகழேந்தி.



இதுபற்றி திட்டக்குழு அதிகாரிகளிடம் நாம் பேசியபோது, "உலக வங்கியின் இந்த சர்வே இரண்டு ஆண்டுகளுக்கு முன்னால் எடுக்கப்பட்ட சர்வே. ஆந்திரா, பீகார் போன்ற மாநிலங்களுடன் ஒப்பிடும்போது, தமிழ்நாட்டில் வறுமை ஒழிப்பின் வேகம்



அதிகரித்துக் கொண்டிருக்கிறது. ஒரு ரூபாய்க்கு கிலோ அரிசி என்பது இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இல்லை. அதேபோல், விவசாயத்திலும், ஐந்து மில்லியன் டன்னாக இருந்த உணவு உற்பத்தி தற்போது பத்து மில்லியன் டன்னாக அதிகரித்துவிட்டது. தமிழகத்தில் 29 மாவட்டங்களில் செயல்படுத்தப்படும் வேலை உறுதித் திட்டத்தால் பெருமளவு பலன் கிடைத்திருக்கிறது. தமிழகத்தின் வளர்ச்சியும் ஆறு சதவிகிதத்தைத் தாண்டிக் கொண்டிருக்கிறது. இதையெல்லாம் விட்டுவிட்டு, தமிழகத்தை ஏழைகள் மாநிலம் என்றெல்லாம் சொல்வது தேவையற்றது'' என நீண்ட விளக்கம் கொடுத்தனர் அவர்கள்.



`சத்துக்குறைபாட்டால் குழந்தைகள் இறப்பு அதிகரித்திருக்கிறதாமே?' என்ற கேள்வியை சமூக நல வாரியத் தலைவி சல்மா முன்பு வைத்தோம். "சத்துணவில் மூன்று முட்டை உள்ளிட்ட திட்டங்கள் தற்போதுதான் தொடங்கப்பட்டு செயல்படுத்தப்படுகின்றன. இதன் பலன் தெரிய கொஞ்சம் காலதாமதமாகும். அரசின் முட்டைத் திட்டத்தால் வகுப்பறைக்கு வரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது. எங்கள் வாரியத்தின் மூலம் 1200 காப்பகங்கள் செயல்படுகின்றன. இதில் படிக்க வரும் மாணவர்களைவிட, மாநில அரசின் அங்கன்வாடிக்குச் செல்லும் சிறார்கள் அதிகம். காரணம், இலவசத் திட்டங்கள்தான். வெகு விரைவிலேயே, சத்துக்குறைபாடு என்ற நோயை விரட்ட அனைத்து முயற்சிகளையும் தீவிரமாக எடுத்து வருகிறோம்'' என்றார் சல்மா தெளிவாக.



இப்போதைய தமிழகத்தின் உண்மை நிலை இன்னும் இரண்டாண்டுகளுக்குப் பிறகுதான் தெரியவரும் என்கிறார்கள் நிபுணர்கள். தமிழகம் பற்றி ஓர் இனிப்பான செய்தி வர நாம் இன்னும் இரண்டாண்டுகள் காத்திருக்க வேண்டும் போலிருக்கிறது.


நன்றி குமுதம் ரிப்போர்ட்டர்

0 comments: