Friday, September 19, 2008

மாறன் பிரதஸின் புதிய பாதை

சுவாமி, தேனியில் ஜெயலலிதாவின் பொதுக்கூட்டத்தையும் பேச்சையும் `லைவ்'வாக சன் நியூஸ் சேனலில் பார்த்தீர்களா, இல்லையா?''


``சேனலை மாற்றிக் கொண்டிருந்தபோது தற்செயலாகத்தான் பார்த்தேன். நேரடி ஒளிபரப்பு. நம்பவே முடியவில்லை. ஏன் இந்த மாற்றம்? என்ன பின்னணியாம்?''

``விரிவாகவே சொல்கிறேன்... அறிவாலயத்தில் சன் டி.வி. இருந்தபோது, தமிழகத்தில் எந்த இடத்திலிருந்தும் நிகழ்ச்சிகளை நேரடி ஒளிபரப்புச் செய்வதற்காக 14 ஓ.பி. வேன்கள் வாங்கியிருந்தனர். இடமாற்றத்தின்போது இவையனைத்தும் மாவட்ட நிருபர்கள் வசம் ஒப்படைக்கப்பட்டன. ஆனால், குறிப்பிடும்படியாக எந்த ஒளிபரப்பும் இல்லை. உள்ளபடியே ஜெயலலிதாவின் தேனி கூட்டத்தை ஜெயா டி.வி.தான் நேரடியாக ஒளிபரப்பவுள்ளதாகக் கூறிக்கொண்டிருந்தார்கள். திடீரென்றுதான் `நாம் ஒளிபரப்பினால் என்ன?' என்ற யோசனை சன் நெட்வொர்க்கில் உதித்ததாம். உபயம் முரசொலி செல்வம்தானாம். இதைத் தொடர்ந்து, அ.தி.மு.க.வில் முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்தைத் தொடர்புகொண்டு, உரிய வகையில் ஒப்புதல் பெற்றார்களாம்.''

``இது ஜெயலிதாவுக்குத் தெரியுமா?''

``அவருக்குத் தெரியாமல் அங்கே அணுவும் அசையுமா? ஆக, கலைஞரை வாங்கு வாங்கென வாங்கிய ஜெயலலிதாவின் உரை, சன் நியூஸ் உதவியுடன் உடனுக்குடன் ஒளிபரப்பானது. இரவே இது மிகப் பெரிய சர்ச்சையாக மாறிவிட்டிருக்கிறது. உடனடியாக, இதை ஈடு செய்யும் வகையில் திங்கள்கிழமை ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி திட்டத்தைக் கலைஞர் தொடங்கி வைத்த நிகழ்ச்சியையும் சன் நியூஸ் நேரடியாக ஒளிபரப்பியது.''

``எதனால் இப்படியெல்லாம் நடக்கிறதாம் பெண்ணே?''

``இதுபற்றி விசாரித்தபோது, நாங்கள் தொழிலைத் தொழிலாக நடத்துகிறோம். எங்களுக்கு கலைஞர், ஜெயலலிதா, விஜயகாந்த், வைகோ எல்லாரும் ஒன்றுதான். சென்னையில் நடைபெறவுள்ள தே.மு.தி.க.வின் இளைஞரணி மாநாட்டை ஒளிபரப்புவது பற்றிக்கூட பேசிக்கொண்டிருக்கிறோம். ஒரு நல்ல எதிர்க்கட்சிக்குரிய வகையில் செயல்படுவோம் என்று கூறுகிறதாம் சன் நெட்வொர்க் வட்டாரம்.''

``அப்புறம் ஏன் மதுரையிலிருந்து நேரடியாக ஒளிபரப்பப்பட்ட வைகோவின் பேச்சு திடீரென்று நிறுத்தப்பட்டதாம்?''

``அது மிகவும் கடுமையாக இருந்த நிலையில், இந்த அளவுக்கு தி.மு.க.வை எதிர்க்க வேண்டுமா என்கிற தடுமாற்றம் வந்துவிட்டதாம். அதனால்தான் பாதியில் நிறுத்தப்பட்டதாம்.''

``இதனிடையே, தி.மு.க.விலிருந்து தயாநிதிமாறன் நீக்கப்பட்டுவிட்டதாகவும் ஒரு வதந்தி பரவியதே?''

``ஆமாம் சுவாமி. `லைவ்' ஒளிபரப்பு `கட்'டான சிறிது நேரத்தில் தான் இந்த வதந்தி. எனினும் பின்னர் `இல்லை' என்று உறுதியானது. ஆனாலும் இதுபற்றிய சர்ச்சை தொடரும் என்றுதான் நினைக்கிறேன்...''

``ஆக, ஒரு புதிய பாதையில்தான் மாறன் பிரதர்ஸ் பயணிக்கிறார்களா?''

``ஆமாம். மேலும், அரசின் அலட்சியம், செயல்படாத் தன்மை, ஊழல் போன்ற செய்திகளைத் தருவதற்காக அவர்களுடைய நாளிதழில் தனி டீமே ஏற்படுத்தப்பட்டிருக்கிறதாம். சன் நெட்வொர்க்கிலும் இவ்வாறு உருவாக்கப்படுகிறதாம். வலுவான செய்தி தருவோருக்கு பரிசெல்லாம்கூட உண்டாம்.

``கலைஞர் மிகுந்த கோபத்தில் இருப்பாரே?''

``அப்படித்தான் சொல்கிறார்கள். அந்தத் தொலைக்காட்சியிலுள்ள மன்னரான நபர் மீதுதான் கலைஞருக்குக் கடுங்கோபமாம். ஏற்கெனவே, பத்தாண்டுகளுக்கு முன், நீண்ட இடைவேளைக்குப் பிறகு கட்சித் தலைமை அலுவலகத்துக்கு ஜெயலலிதா வந்ததை விலாவாரியாக ஒளிபரப்பியதற்காக இவரைக் கலைஞர் கடிந்துகொண்டிருக்கிறாராம். தேர்தல் நேரத்தில் ராமதாஸ் செய்திகளுக்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுப்பதாகவும் கடிந்திருக்கிறாராம். உறவு சுமுகமாக இருந்தபோதே நிலைமை அவ்வாறெனில், இப்போது கேட்கவா வேண்டும்?''


``ஏற்கெனவே, இவர்களுக்கு எதிராகப் புகார் கொடுக்கப்பட்டிருந்ததே?'இதுதொடர்பாக, சன் டி.வி. நெட்வொர்க்கின் தலைமை நிர்வாக ஆசிரியர் என்ற முறையில் முரசொலி செல்வம் எழுதிய விளக்கக் கடிதமொன்றை காவல்துறையினரிடம் திங்கள்கிழமை அவர் சார்பில் வந்த சுமார் 30 வழக்கறிஞர்கள் ஒப்படைத்திருக்கின்றனர். இதனிடையே, இந்தப் பிரச்னைகள் பற்றியெல்லாம் மத்திய அமைச்சர்கள் டி.ஆர். பாலு, ஆ. ராசா மூலமாக சோனியா காந்தி, பிரதமர் மன்மோகன் சிங்கிற்குத் தெரிவிக்கப்பட்டு, தொழில்ரீதியிலான உதவிகளைத் தவிர்க்குமாறு தி.மு.க. தரப்பில் கேட்டுக்கொள்ளப்பட்டதாம்.''

``என்ன சொன்னார்களாம்?''

`சோனியாவே முதல்வரிடம் பேசி, `உங்களை மீறி எதுவும் நடைபெறாது' என்று உறுதியளித்திருக்கிறாராம். இவற்றுக்கு நடுவே மற்றொன்றையும் தெரிந்துகொள்ளுங்கள். கலைஞர் டி.வி.யிலும் நேரடி ஒளிபரப்புக்கான ஓ.பி. வேன்கள் வாங்குவது பற்றிப் பேசத் தொடங்கியிருக்கிறார்களாம்

நன்றி குமுத்ம் ரிப்போர்ட்டர்
 
இதே மாதிரி சன் நெட்வொர்க் நடுனிலையோடு செயல்பட்டால் கலைஞர் இனி அரசு டி.டி.எச்ஆரம்பித்து பொதுமக்களுக்கு சேவை செய்வார். மற்ற சேவையெல்லாவற்றையும் மறந்து விடுவார்

0 comments: