Saturday, October 4, 2008

சன் டிவியால் கோடம்பாக்கத்துக்கு பிரச்சினை?

காதலில் விழுந்தேன்' படத்தைப் பார்த்து கலங்கிப் போயிருக்கிறது, தமிழ்த் திரையுலகம். `சின்ன பட்ஜெட்டில் ஒரு படத்தைத் தயாரித்து, வெறும் விளம்பர ஜிகினாவை மட்டுமே வைத்து அதை பிரமாண்டமாய்க் காட்ட முடியும்' என்று சன் டி.வி. `புதுவழி' காட்டியிருப்பதால், சிறிய தயாரிப்பாளர்கள் மட்டுமல்ல, பெரிய தயாரிப்பாளர்களும் பீதியில் மிரண்டு போயிருக்கிறார்கள்.




`காதலில் விழுந்தேன்' படத்தில் பிரபலமான ஹீரோ, ஹீரோயின் கிடையாது, பிரபல டைரக்டர், மியூசிக் டைரக்டர், கேமராமேன் என்று யாரும் கிடையாது. அதனால் அவர்களுக்குப் பெரிய சம்பளமும் கிடையாது. ஆனால் தொடர்ச்சியாக `சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறன் வழங்கும்... காதலில் விழுந்தேன்' என்று அந்தப் படத்தின் விளம்பரத்தை சன் டி.வி.யில் திரும்பத் திரும்ப போட்டுப் போட்டு மக்களிடம் அதை ஏதோ பிரமாண்டமான படமாகச் சித்திரித்து விட்டது சன் பிக்சர்ஸ் நிறுவனம்.



``கைவசம் சேனல் இருப்பதால் இவர்கள் இந்தக் கலக்கு கலக்குகிறார்கள். சின்ன பட்ஜெட் படத்தை விளம்பர விளையாட்டால் ஊதிப் பெரிதாக்குகிறார்கள். இதுபோன்ற அதீத விளம்பரம் மற்ற படங்களின் வசூலை கண்டிப்பாக பாதிக்கும்'' என்று திரைப்படத் தயாரிப்பாளர்கள் `உச்' கொட்டினாலும், பூனைக்கு மணி கட்ட யாரும் தயாரில்லை என்பதுதான் ஆச்சரியம்.இதுகுறித்து நாம் தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகள் சிலரிடம் பேச முயன்றபோது, `கருத்துச் சொல்கிறோம். ஆனால் பெயர் வேண்டாமே' என்று பயந்தனர் அவர்கள். இன்னொரு தரப்பினரோ `அப்படியா?' என்ற கேள்வியுடன் நம்மிடம் இருந்து நழுவிக் கொண்டனர்.



இந்நிலையில், தயாரிப்பாளர் சங்கப் பொறுப்பில் இருந்து, தற்போது ஒதுங்கியிருக்கும் ஒரு தயாரிப்பாளர் இதுபற்றி நம்மிடம் வாயைத் திறந்தார்.

``விளம்பரங்களால் மட்டுமே ஒரு படம் ஓடி விடாது. கடந்த காலத்தில் மிகப்பெரிய விளம்பரங்கள் செய்து தோல்வியடைந்த பெரிய படங்களும் உண்டு. உதாரணம் `ஆளவந்தான்', `பாபா' போன்ற படங்கள். என்றாலும் சிறிய பட்ஜெட் படங்களுக்கு `பெரிய' அளவில் விளம்பரம் தந்தால், அது மற்ற படங்களின் வசூலைக் கண்டிப்பாகப் பாதிக்கும்.`எத்தனை பெரிய படமாக இருந்தாலும் இவ்வளவுதான் விளம்பரம் செய்யலாம்' என்று தயாரிப்பாளர் சங்கத்தில் ஒரு விதிமுறையே இருக்கிறது. அந்த விதியை மீறுபவர்கள் மீது தயாரிப்பாளர் சங்கம் நடவடிக்கை எடுக்க முடியும். அப்படி நடவடிக்கை எடுத்தால், எந்தத் தியேட்டரிலும் அந்தப் படத்தை ரிலீஸ் செய்ய முடியாமல் போகும். ஆனால் `காதலில் விழுந்தேன்' படத்துக்காக இப்போது அதீத விளம்பரங்களை சன் பிக்சர்ஸ் நிறுவனம் ஒளிபரப்புகிறது. அதற்காக அந்தப் படத்தின் மீதோ, சன் பிக்சர்ஸ் மீதோ இங்கே நடவடிக்கை எடுக்க மாட்டார்கள்.

காரணம், கலைஞர் டி.வி.யுடன் உறவு வைத்திருக்கும் தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகள் பலருக்கு சன் டி.வி.யுடன் கள்ள உறவு உண்டு. அதை வைத்துக் கொண்டு அவர்கள் பிழைப்பு நடத்துகிறார்கள்'' என்றார் அவர்.சின்ன பட்ஜெட் தயாரிப்பாளர்கள் சிலரிடம் இதுபற்றி நாம் பேசினோம். ``ஒவ்வொரு தொழிலுக்கும் ஒரு தர்மம் இருக்கு. ஆனால் அதை மீறி இந்தப் படம் அவர்களின் தயாரிப்பு என்பதால், ரசிகர்கள் இந்தப் படத்தை `ஆஹா ஓஹோ!' என்று கொண்டாடுவதாக சன் நியூஸிலும், தினகரன் பத்திரிகையிலும் செய்தி போடுகிறார்கள். `காதலில் விழுந்தேன்' படத்தைவிட அமர்க்களமாக எதிர்பார்க்கப்பட்டு முதல்நாள் நள்ளிரவிலேயே ரிலீஸ் செய்யப்பட்ட `சிவாஜி' படத்துக்கும், `தசாவதாரம்' படத்துக்கும் இவர்கள் இதே ஆர்வத்துடன் செய்தி போடவில்லையே? அது ஏன்?



ஆந்திராவில் இன்னும் சினிமாதான் பெரியண்ணன்; சின்னத்திரை அங்கே தம்பி. அங்கே சினிமாவின் கட்டுப்பாட்டில்தான் சின்னத்திரை இருக்கிறது. ஆனால் இங்கோ சின்னத்திரையின் கட்டுப்பாட்டுக்குள் சினிமா போய்விட்டது. ஆந்திராவில் சாட்டிலைட் டி.வி.க்கு தயாரிப்பாளர் சங்கம்தான் டிரெயிலர்களைக் கொடுக்கிறது. அந்த டிரெயிலர்களைக் கூட `டிரெயிலர் டைம்' என்று குறிப்பிட்ட ஒரு நேரத்தில் மட்டும்தான் ஒளிபரப்ப முடியும். அதில் சின்ன பட்ஜெட் படம், பெரிய பட்ஜெட் படம், சின்ன ஹீரோ படம், பெரிய ஹீரோ படம் என்றெல்லாம் இல்லை. எல்லோருக்கும் ஒரே மாதிரி வாய்ப்புதான். ஆரம்ப காலத்தில் பத்திரிகைகளில் போட்டி போட்டுக் கொண்டு சினிமா விளம்பரம் தந்தே தயாரிப்பாளர்கள் பலர் அழிந்து போனார்கள். `நீ கால் பக்கம் விளம்பரம் தருகிறாயா? நான் அரைப்பக்கம் தருவேன்; நீ அரைப் பக்கமா? நான் முழுப்பக்கம்' என்று முட்டிமோதி தயாரிப்பாளர்கள் பலர் வீணாய்ப் போனதை அடுத்து, இதற்கென இங்கேயும் சட்ட திட்டங்கள் உருவாக்கப்பட்டன. ஒரு படம் ரிலீஸாவதற்கு முன் எந்த சைஸில் விளம்பரம் கொடுக்கலாம் என்றும், ரிலீஸானபின் எந்த சைஸுக்கு விளம்பரம் கொடுக்க வேண்டும் என்றும் விதி உண்டு. அதை மீறுபவர்கள் மீது நடவடிக்கையும் எடுக்கப்பட்டது. அது அந்தக் காலம்.



ஆனால் இப்போதோ டி.வி.சேனல்களில் அசுரத்தனமாக விளம்பரம் செய்யும் புதிய போக்கை சன் பிக்சர்ஸ் நிறுவனம் ஆரம்பித்து வைத்திருக்கிறது. ஆனால், அந்த நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்கும் தைரியம் இங்கே யாருக்கும் இல்லை. காரணம், இங்கேயுள்ள டி.வி. சேனல்கள் அனைத்தும் அரசியல் சார்புடன் இயங்குகின்றன. அது மட்டுமல்ல, தயாரிப்பாளர் சங்கத்தில் பொறுப்பாளர்களாக இருப்பவர்கள் தங்களது அடுத்த படத்தை அதே சேனல்களிடம் விற்க வேண்டிய நிலை இருக்கிறது. அது மட்டுமல்ல. இங்குள்ள தயாரிப்பாளர்கள் சிலரும் `இப்படி சின்ன பட்ஜெட் படம் எடுத்து விளம்பரத்தை வைத்தே படத்தை ஓட்டி விடலாம்' என்ற கனவில் இருக்கிறார்கள்.உதாரணமாக, தயாரிப்பாளர் சங்கத் தலைவராக இருக்கும் ராம நாராயணன், `ராஜநாகம்', `பச்சைமனிதன்' ஆகிய இரண்டு படங்களை சின்ன பட்ஜெட்டில் தயாரித்து, இதேபோல் விளம்பரத்தை நம்பி பிஸினஸ் செய்தார். அவர் எப்படி சன் நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுப்பார் என்று நாம் எதிர்பார்க்க முடியும்?'' என்று நம்மிடம் கொஞ்சம் காட்டமாகவே கேட்டார்கள் அவர்கள்.இதுபற்றி ராம நாராயணனிடம் நாம் கருத்துக் கேட்டபோது அவர், ``இந்தப் பிரச்னை குறித்து இதுவரை தயாரிப்பாளர்கள் யாரும் என்னிடம் புகார் தரவில்லை. அப்படித் தந்தால் செயற்குழுவைக் கூட்டி பேசி முடிவெடுப்போம். தமிழ்த்திரையுலகுக்கு சமீபத்தில் ஏற்பட்டுள்ள சீரியஸான பிரச்னை இது. உங்கள் செய்தி நிச்சயம் ஒரு திருப்பத்தை ஏற்படுத்தும். அதோடு இதில் ஒரு நல்ல முடிவு ஏற்படும் என்றும் நம்புகிறேன்'' என்றார் சுருக்கமாக.



இதையடுத்து இந்தப் பிரச்னை குறித்து சன் நிர்வாகத்திடம் நாம் விளக்கம் கேட்டோம். அதற்கு அவர்கள், ``இங்கே சினிமாப் படங்களுக்கு பத்திரிகைகளில் தரும் விளம்பரத்திற்கு மட்டுமே சில கட்டுப்பாடுகள் உள்ளன. சேனல்களில் விளம்பரம் தருவது தொடர்பாக தயாரிப்பாளர்கள் சங்கம் எந்தவிதமான விதிமுறைகளையும் வகுக்கவில்லை. இருந்தும்கூட எங்கள் நிறுவனம் தயாரித்துள்ள ஒரு சினிமாவுக்கு எங்கள் சேனல்களில் ஒரு குறிப்பிட்ட வரைமுறைகளைக் கடைப்பிடித்துத்தான் விளம்பரம் செய்கிறோம். மேலும், இதே படத்தைப் பற்றி மற்ற சேனல்களில் விளம்பரம் வராத நிலையில் எங்கள் சேனல்களில் வரும் விளம்பரம் சிலரது கண்ணுக்கு உறுத்தலைத் தந்தால் அது எங்கள் பொறுப்பல்ல'' என்றனர் அவர்கள்.நாய் வாலை ஆட்டிய காலம் போய், வால் இப்போது நாயை ஆட்ட ஆரம்பித்த கதையாக, சின்னத்திரை சினிமாத்திரை மீது குதிரையேறி விடக்கூடாது என்பதுதான் கோடம்பாக்கத்தினரின் இப்போதைய குமுறல். கூடவே பம்மாத்து விளம்பரங்களைக் காட்டி பலவீனமான படங்கைளக் கூட வெற்றிப்படங்களாகச் சித்திரித்து மற்ற படங்களை யாரும் மண் கவ்வ வைத்துவிடக் கூடாது' என்கிறார்கள் அவர்கள். நியாயம்தானே? ஸீ



தகிடுதத்த தரவரிசை!

அந்த `இரண்டெழுத்து' டி.வி. ஒரு விஷயத்தில் மிகவும் தெளிவாக இருக்கிறது. ஒரு படத்தின் ஒளிபரப்பு உரிமை அந்த டி.வி. நிறுவனத்துக்குக் கிடைத்து விட்டால், அதன் தரவரிசைப் பட்டியலில் அந்தப்படம் தாறுமாறாக மேலேறி வந்துவிடும். படத்தின் ஒளிபரப்பு உரிமை கிடைக்கவில்லையா? அதலபாதாளத்துக்கு அந்தப் படம் போய்ச் சேர்ந்து விடும்.அண்மையில் `தாம் தூம்' படத்தை அந்த டி.வி.சேனல் அடிமாட்டு விலைக்கு வாங்க முயன்றது. பேரம் படியவில்லை. இடைப்பட்ட நேரத்தில் இன்னொரு டி.வி. `தாம் தூம்' படத்தைத் தட்டிச் சென்று விட்டது. எரிச்சலின் உச்சத்துக்குப்போன அந்த இரண்டெழுத்து டி.வி. அதன் தரவரிசைப் பட்டியலில் `தாம் தூமை' பின்னுக்குத் தள்ளியது. அந்தப் படத்தின் பாடல்களை தன் மியூசிக் சேனலில் போட மறுத்தது. இதன் அர்த்தம் என்ன தெரியுமா? `நான் நினைத்தால் எவ்வளவு பெரிய படமாக இருந்தாலும் ஒழித்துக் கட்டி விடுவேன். நான் குறைந்த விலைக்குப் படத்தைக் கேட்டால் நீ கொடுக்க வேண்டும்' என்பதுதான்! தயாரிப்பாளர்களுக்கு அந்த டி.வி.சேனல் இப்படியொரு மறைமுக மிரட்டல் விடுத்தும் கூட அதையெல்லாம் மீறி `தாம் தூம்' படம் பேசப்பட்டது ஓர் ஆச்சரியம்.
அதுபோல அந்த டி.வி.சேனல் எந்த அடிப்படையில் படங்கள் வரிசைப்படுத்தப்படுகிறது என்பது பற்றி இதுவரை எந்த விளக்கமும் தந்தது இல்லை. அதைப் பற்றிக் கேள்வி கேட்கவும் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்துக்கு `தில்' இல்லை. காரணம், தாங்கள் தயாரிக்கும் படங்களுக்கு `தரவரிசையில்' ஆப்பு வைத்துவிடுவார்கள் என்ற பயம்தான்

நன்றி குமுதம் ரிப்போர்ட்டர்

3 comments:

கோவி.கண்ணன் said...

:)

குடும்ப பிரச்சனையை கோடம் பாக்க பிரச்சனையாக்குறாங்க !

டிவி 2 ஆனது போல் கோடம்பாக்கத்தையும் 2 ஆக்க முயற்சிக்கிறாங்க !

சுரேகா.. said...

சிறப்பா சொல்லியிருக்கீங்க!

வாழ்த்துக்கள்

அத்திரி said...

2007 மற்றும் 2008ல் வெளி வந்த ஹிட் ஆன படங்கள் அனைத்தும் கலைஞர் டிவி கையில்.
இதுதான் சன் டிவியின் போராட்டத்திற்கு காரணம்

நன்றி கோவி கண்ணன். அண்ணாச்சி எப்ப்டி இருக்கார்?

நன்றி சுரேகா.