Thursday, September 25, 2008

லயோலா கல்லூரியின் கருத்துக்கணிப்பு--திமுக ஆதரவு சரிவு

சென்னை லயோலா கல்லூரி நடத்திய கருத்துக் கணிப்பில், தற்போதைய சூழ்நிலையில் அதிமுகவுக்கே பொதுமக்களிடம் அதிக ஆதரவு இருப்பது தெரியவந்துள்ளது.


தமிழக அரசியலில் தற்போது பல்வேறு பிரச்சனைகள் நிலவிவரும் நிலையில், லயோலா கல்லூரியின் ஊடகவியல் துறை சார்பில் கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டது.

அதிமுகவுக்கு ஆதரவு:

இதில், "தற்போது தேர்தல் வந்தால் யாருக்கு வாக்களிப்பீர்கள்?" என்ற கேள்விக்கு, 38.3 சதவீதம் பேர் அதிமுகவுக்கே வாக்களிப்போம் என்று தெரிவித்துள்ளனர்.

திமுகவுக்கு வாக்களிப்போம் என்று 25.8 சதவீதம் பேரும், மேற்படி இரு கட்சிகளுக்கும் மாற்றாக தேமுதிகவுக்கு வாக்களிப்போம் என்று 19.5சதவீதம் பேரும் தெரிவித்துள்ளனர்.தமிழகத்தில் தற்போது மிக முக்கிய பிரச்சனையாக கருதப்படுவது மின்வெட்டுதான். இது மக்கள் மத்தியில் பெரும் அதிருதியை ஏற்படுத்தியுள்ளது.வரும் தேர்தலில் இந்த பிரச்சனை எதிரொலிக்கும் என்று தெரிகிறது.தமிழக அரசு சமீபத்தில் அறிவித்த, ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசித் திட்டத்திற்கு மக்களிடம் பெரிய அளவில் ஆதரவு இல்லை. இந்த திட்டம் ஏழை மக்களுக்கு பயன்படும் என்று 22 சதவீதம் பேரும், இது தேவையில்லாதது என்று 52 சதவீதம் பேரும் தெரிவித்துள்ளனர்.எனினும், தமிழக அரசு அறிவித்த இலவசத் திட்டங்களுக்கு 84 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் தற்போதுள்ள எம்.பிக்கள் மீதும் மக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர். இந்த எம்பிக்கள் மீண்டும் போட்டியிட்டால் வாக்களிக்க மாட்டோம் என 63 சதவீதம் பேர் கூறியுள்ளனர்.


அரசு துறை அதிகாரிகள் மிக மோசமாக செயல்படுவதாக 87 சதவீதம் பேர் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.



நடிகர்களின் கட்சிகளின் நிலை:

நடிகர்களின் கட்சிகளை பொருத்தவரை, விஜயகாந்தின் தேமுதிகவுக்கு ஆதரவு பெருகி வருவது தெரியவந்துள்ளது. நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் தேமுதிக மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என 43.4 சதவீதம் பேர் கருத்து தெரிவித்துள்ளனர். ஓரிரு இடங்களில் தாக்கத்தை ஏற்படுத்தும் என 32.8 சதவீதம் பேரும், எந்த தாக்கமும் ஏற்படாது என்று 23.8 சதவீதம் பேரும் கூறியுள்ளனர்.
சரத்குமாரின் சமத்துவ மக்கள் கட்சி ஓரிரு இடங்களில் மட்டும் தாக்கத்தை ஏற்படுத்தலாம் என 14.8 சதவீதம் பேர் கூறியுள்ளனர். எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்தாது என்று கூறியவர்கள் 82.7 சதவீதம் பேர்.

தேர்தலில் விஜய டி.ராஜேந்தின் லட்சிய திமுக எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது என்று 94.7 சதவீதம் பேரும், கார்த்திக்கின் அகில இந்திய நாடாளும் மக்கள் கட்சியால் எந்த தாக்கமும் இருக்காது என 96.2 சதவீதம் கூறியுள்ளனர்.



ரஜினிக்கு ஆதரவு இல்லை:

இந்த கருத்து கணிப்பில் நடிகர் ரஜினி அரசியலுக்கு வரலாமா என்பது குறித்தும் கேள்விகள் கேட்கப்பட்டன. ஆனால், அவர் அரசியலுக்கு வருவதை பெரும்பாலானோர் விரும்பவில்லை என்பது கருத்துக் கணிப்பில் தெரியவந்துள்ளது.இந்த கேள்விக்கு, ரஜினி அரசியலுக்கு வரலாம் என்று கூறியவர்கள் 4.3 சதவீதம் மட்டுமே. நடிப்பில் மட்டுமே ரஜினி கவனம் செலுத்தினால் போதும் என 45.8 சதவீதம் பேரும், அவர் இனி ஓய்வெடுக்கலாம் என்று 32.5 சதவீதம் பேரும் கூறியுள்ளனர். ஆன்மீகத்தில் அவர் ஈடுபடலாம் என 10.7 சதவீதம் விருப்பம் தெரிவித்துள்ளனர்.

புலிகள் கவர்ந்து சென்ற பொருள் என்ன??? --ரிப்போர்ட்டர்

ஹாட் டாபிக்

எங்கிருந்து வந்தார்கள்? எப்படி ஊடுருவினார்கள்? தாக்குதல் நடத்தினார்கள்?'' - வவுனியா விமானப்படை தளம் மீது கடந்த 9-ம்தேதி புலிகள் நடத்திய அந்த அதிர்ச்சித் தாக்குதலில் இருந்து இன்னும் மீளமுடியாமல் தவிக்கிறது இலங்கை அரசு. இதுபற்றி விசாரிக்க இரண்டு நாட்களுக்கு முன் ஒரு விசாரணைக்குழு அமைக்கப்பட்டிருக்கிறது.

ஏழு டிவிஷன் ராணுவத்தினர், ஒரு விசேஷ படைப்பிரிவு, கமாண்டோ பிரிகேட் போன்றவை உள்ள கட்டுக்காவல் நிறைந்த இடம்தான் வவுனியா ராணுவ முகாம். அந்தப் பக்கம் விமானப்படைத் தளம். அங்கே 2 பட்டாலியன் அணிகள், ஒரு விசேஷ படைப்பிரிவு. இந்த 2 தளங்களுக்கும் இடையில் ஒரே ஒரு தெரு. இவ்வளவு கட்டுக்காவல் உள்ள இடத்துக்குள்தான் புகுந்து இலங்கை ராணுவத்தின் கண்ணில் விரலை விட்டு ஆட்டியிருக்கிறார்கள் புலிகள்.

இந்தத் தாக்குதல் எப்படி நடந்தேறியது என புலிகளின் ஆவணக் காப்பகத் தலைமையகம் தற்போது தகவல் வெளியிட்டிருக்கிறது. அந்தத் தகவல்கள் அனைத்தும் அதிர்ச்சி ரகம்.முன்பு கட்டுநாயகா விமானதளம், அனுராதபுரம் விமானதளங்கள் மீது புலிகள் வெற்றிகரமாகத் தாக்குதல் தொடுக்கக் காரணமாக இருந்தவர் கர்னல் சார்லஸ். புலிகளின் புலனாய்வுப் பிரிவு தளபதியான இவர், பள்ளமடுவில் நடந்த ஒரு கண்ணிவெடித் தாக்குதலில் உயிரிழந்து விட மகிழ்ச்சிக் கூத்தாடியது இலங்கை ராணுவம். அந்த நேரத்தில் சார்லஸ் இடத்துக்கு வந்தார் ரத்தினம் மாஸ்டர். `சார்லஸ் போனால் என்ன? நாங்கள் இருக்கிறோமே?' என்று உணர்த்த அவர் திட்டமிட்டு நடத்திய தாக்குதல்தான் வவுனியா விமானதளம் மீது விழுந்த அந்த பேயறை!

வவுனியா விமானதளத்திலுள்ள இரண்டு ரேடார்கள் புலிகளுக்கு பலவகையிலும் இடைஞ்சலாக இருந்ததால், அவற்றைத் `தூக்க' முடிவு செய்தார் ரத்தினம் மாஸ்டர். அதற்காகப் புலிகளின் தலைமையிடம் பேசி ஒப்புதல் வாங்கினார். அதையடுத்து 5 ஆண் கரும்புலிகளும், 5 பெண் கரும்புலிகளுமாக பத்துப் பேர் அவரிடம் வந்து சேர்ந்தார்கள். ரகசிய இடத்தில் நடந்த ஓர் ஒத்திகைக்குப் பின் அந்த பத்துப் பேர் படை இலங்கை ராணுவச் சீருடையுடன் வவுனியாவின் வடக்குப் பகுதிக்கு ஊடுருவியது. நெடுங்கேணி வெடிவைத்த கல்லு வழியாக, மணலாறு வந்து, அங்குள்ள சிங்கள கிராமங்களைக் கடந்து ஆசிக்குளம், சமனங்குளம் காட்டுப்பகுதிக்கு வந்து இரண்டு நாட்கள் தங்கியிருந்தது.

இன்னொருபுறம் `கிட்டு பீரங்கிப் படையணியின்' ஒரு பிரிவு, வவுனியா விமானதளம் மீது குண்டுமழை பொழிய வசதியாக, ஆர்டிலரி பீரங்கிகள் சகிதம் புளியங்குளம் பகுதியில் நிலைகொண்டிருந்தது. `ம்' என்றால் போதும், விமானதளத்தை நீண்டதொலைவில் இருந்தே பொரித்துவிடத் தயாராக இருந்தார்கள் அவர்கள்.

8-ம்தேதி நள்ளிரவு தாண்டி நிலா மறைந்த நேரம், ரத்தினம் மாஸ்டரின் உத்தரவு, வானலை வழியே மிதந்து வர, லெப். கர்னல் வினோதன், லெப். கர்னல் மதியழகி ஆகியோர் தலைமையில் தற்கொலைப்படையினர் பத்துப் பேரும் வவுனியா விமானதளத்தை நோக்கிப் பாய்ந்தார்கள். அவர்கள் கையில் டி-56, ஆர்.பி,ஜி., எம்.பி.எம்.ஜி., கிரனேட், ராக்கெட் லாஞ்சர்கள். கூடவே டொபி டோக், சார்ஜர் எனப்படும் தற்கொலைத் தாக்குதலுக்கான அங்கி.

இவர்களுடன் புலிகளின் சிறப்பு உளவுப்பிரிவைச் சேர்ந்த வழிகாட்டிகள், கண்ணிவெடி கண்டுபிடிப்பவர்கள் என நான்கு பேர். போதாக்குறைக்கு புலிகளின் வீடியோ படப்பிடிப்பாளர்கள் வேறு இவர்களுடன் சென்று கடைசிவரை அந்தத் தாக்குதலைப் படம் பிடித்திருக்கிறார்கள்(!).
விமானநிலையத்தைச் சுற்றியிருந்த முட்கம்பி வேலியை வெட்டி அகற்றிவிட்டு இவர்கள் உட்புகுந்தனர். இன்னும் 200 மீட்டா் தூரம் கடந்தால் விமானதளம். அந்த நேரம் பார்த்து எதிரே வந்த ஓர் இலங்கை ராணுவ வீரன் புலிகளின் அன்றைய சங்கேத வார்த்தையைக் கேட்டிருக்கிறான். ஆயிரக்கணக்கான வீரர்களைக் கொண்ட ராணுவ விமானப்படை முகாம்களில் வெளியாள் ஊடுருவி விடக்கூடாது என்பதற்காக தினமும் ஒரு சங்கேத வார்த்தையைப் பயன்படுத்துவது வழக்கம்.
சங்கேத வார்த்தை தெரியாத நிலையில் புலிகள் அந்த சிங்கள வீரனுக்கு துப்பாக்கிமூலம் பதில் சொல்லிவிட, அதிகாலை 3.05 மணியளவில் திட்டமிட்டதற்கு முன்பாகவே ஆரம்பமாகி விட்டது சண்டை. வழிமறித்த ஒரு தடையரண் மீது ஆர்.பி.ஜி. தாக்குதல் நடத்தினர் புலிகள். மறுபுறம் கட்டுப்பாட்டு கோபுரத்தைக் குறி வைத்தும் ராக்கெட்டுகள் பறந்தன. சிங்கள ராணுவம் சுற்றி வளைத்த நிலையில், தடையரணைத் தகர்ப்பதும் கடினமென்ற நிலையில் நவீன `ஐகாம்' வயர்லஸ் மூலம் தகவல் தந்தனர் புலிகள். அடுத்தநிமிடம் காற்றைக் கிழித்துக் கொண்டு வந்த ஷெல்கள் படைத்தளத்தை அதிர வைத்தன.

புளியங்குளத்தில் இருந்த கிட்டு பீரங்கிப்படை தந்த பரிசளிப்பு அது. அதில் விமான எதிர்ப்பு பீரங்கிகள் முடங்கிக்கொள்ள, சிங்கள ராணுவமும் பதுங்கிக் கொண்டது.

விமானப்படை தளத்தின் உள்ளே ஒரு பாறை மீதிருந்த ரேடார்களைக் குறிவைத்து முன்னேறினர் புலிகள். இன்னும் 75 மீட்டர் தூரம்தான். இந்தநேரத்தில் ரேடார் திரையில் ஒரு மர்மப்புள்ளி தெரிவதைக் கண்டு அதிர்ந்து போனார்கள் இலங்கை அதிகாரிகள். அது புலிகளின் விமானம்! உடனே கட்டுநாயகா விமானதளத்தில் இருந்த விங் கமாண்டர் சஞ்சயாவுக்குத் தகவல் பறந்தது. ஏர் வைஸ் மார்ஷல் ஷெரான் குணதிலகாவின் உத்தரவின்பேரில் `முதலை மூக்கு' எனப்படும் மிக்-27 விமானம், இரண்டு எப்-7 விமானங்கள் கட்டுநாயகாவிலிருந்து வவுனியாவை நோக்கி விரைந்தன. அப்போது அதிகாலை 3.34.

இதற்குள் 3.26-க்கு வந்த புலிகளின் முதல் விமானம் 3.31-க்கு 2 குண்டுகளை வீசியது. அடுத்த 2-வது நிமிடம் புலிகளின் 2-வது விமானமும் வந்து இரண்டு குண்டுகளை வீசிவிட்டுப் பறந்தது. பிறகு மீண்டும் வட்டமடித்து வந்து குண்டுவீசியது. புலிகளின் விமானங்கள் வீசிய மொத்த குண்டுகள் எட்டு. அந்த குண்டுகளில் ஒன்று விசேஷ படைப்பிரிவின் தளபதி கர்னல் நிர்மல் தர்மரத்னாவின் தங்குமிடம் அருகில் விழுந்தது. அன்று அவர் விடுமுறையில் போயிருந்ததால் தப்பினார்.தாக்குதல் முடிந்து புலிகளின் ஒரு விமானம் இரணைமடுவை நோக்கித் திரும்ப, மற்றொரு விமானம் புதுக்குடியிருப்பு நோக்கிப் பறக்கத் தொடங்கியது. அந்த விமானத்தை இலங்கை விமானப்படையின் எப்-7ஜி விமானம் ஒன்று, ஒன்றரை கி.மீ. தொலைவில் பின் தொடர்ந்தது. `சுட்டுவீழ்த்தவா?' என்று இலங்கை விமானி அனுமதி கேட்க, `சுடு!' என்ற அனுமதி தளபதியிடம் இருந்து வந்தது. இதன்பிறகு புலிகளின் விமானத்தை சுட்டு வீழ்த்தியதாகவும் அது முள்ளியவளை காட்டுப் பகுதியில் விழுந்ததாகவும் பீற்றிக் கொண்டது இலங்கை விமானப்படை.

ஆனால் நடந்ததோ வேறு. இலங்கைப் போர் விமானம் நெருங்குவதை உணர்ந்து கொண்டதும் புலிகளின் விமானம் ஆகாயத்தில் ஓர் அந்தர்பல்டி அடித்து பலநூறு அடிகள் கீழே இறங்கி, பிறகு அதே வேகத்தில் வேறு திசையில் மேலெழுந்து `சுடுஎல்லையில்' இருந்து தப்பிவிட்டது என்பதே நிஜம் என்கிறார்கள் புலிகள்.

வவுனியா தாக்குதலில் இன்னும் சில மர்மங்களும் இருக்கின்றன. பிரபாகரனோடு சேர்ந்து படமெடுத்துக் கொண்டது பத்து கரும்புலிகள் மட்டும்தான். ஆனால் விமானப்படை தளத்தில் பதினோராவதாக ஒரு போராளியின் சடலம் ஒன்றை ராணுவத்தினர் கண்டெடுத்திருக்கிறார்கள். அவர் யார்? இந்தக் கேள்வி ஒருபக்கம் பரபரப்பை ஏற்படுத்த, மறுபக்கம், சண்டை நடந்த இடத்திலிருந்து ஒரு பிஸ்டலின் 16 ரவைகளை எடுத்திருக்கிறது ராணுவம். அந்த பிஸ்டலைப் பயன்படுத்திய போராளி, தாக்குதலுக்குப் பிறகு தப்பிச் சென்றிருக்கலாம் எனக் கருதப்படுகிறது.

இதன்மூலம் புலிகளின் குறி வவுனியா படைத்தள ரேடார்கள் மட்டுமல்ல ஏதோ ஒரு முக்கிய ஆவணம் அல்லது பொருள்தான் என்பது தெளிவாகத் தெரிகிறது. அதை வெற்றிகரமாகக் கவர்ந்து கொண்டு புலிகளில் சிலர் தப்பிவிட்டதும் தெரிகிறது. புலிகள் கவர்ந்து சென்ற அந்தப் `பொருள்' என்ன? புலிகளின் அடுத்த தாக்குதலின் போது அது தெரிய வரலாம்.


நன்றி குமுதம் ரிப்போர்ட்டர்.