Monday, 5 January, 2009

இவ்வாரம் ஞாநியின் பார்வையில்--- மனம் விரும்புதே...

ஒவ்வொரு புது வருடத்தின்போதும் தீர்மானங்கள் எடுப்பதும் அவற்றை நிறைவேற்றாமல் இருப்பதும் நம் வழக்கம்.வயதுக்கேற்ப தீர்மானங்கள் மாறும். இந்த வருடம் தவறாமல் டைரி எழுதவேண்டும்; இந்த வருடத்திலிருந்து குடிப்பதை விட்டு விட வேண்டும். இனிமேல் அசைவம் சாப்பிடுவதில்லை. இனிமேல் வீட்டில் எரிந்து விழுவதில்லை... இப்படி ஒவ்வொரு நபரிடமும் தீர்மானங்களைத் திரட்டினால், அது பெரும் ஆராய்ச்சிக்குரிய சுவையான தொகுப்பாகக் கூட அமையும்.


இந்தத் தீர்மானங்கள் அத்தனைக்கும் பின்னால் ஓர் எளிமையான உண்மை இருக்கிறது. அது என்ன? ஒவ்வொரு மனிதனும் இந்த வருடம் தனக்கு தீங்காக இருந்த பழக்கங்களை விட்டுவிட்டு, நல்ல பழக்கங்களை அடுத்த வருடத்தில் தொடங்க வேண்டும் என்று விரும்புகிறான்.அதாவது சாதாரண மனிதன் தன்னைத் திருத்திக் கொண்டு மேம்பட விரும்புகிறான். தன்னைத்தானே ஏதோ ஒரு வடிவத்தில் சுயவிமர்சனம் செய்து கொள்கிறான்.


ஆனால் நினைத்தபடி எல்லாவற்றையும் மாற்றிக் கொள்ள முடியாமற் போய்விடுகிறது. பைபிளில் எனக்குப் பிடித்த ஒரு வாசகம், இதைப்பற்றிச் சொல்கிறது. The spirit is willing but the flesh is weak. மறு தினம் தான் காட்டிக் கொடுக்கப்பட்டு கைதாகி சித்ரவதைக்குள்ளாவோம் என்பது ஏசுவுக்குத் தெரிந்திருக்கிறது. அந்த நிலையில் முன்னிரவு முழுவதும் இறைவனைத் தொழுவோம் என்று சீடர்களை அழைத்துக் கொண்டு கெத்சமனே தோட்டத்துக்கு செல்கிறார். இரவு வளர, வளர, ஒவ்வொரு சீடராக தூங்கிவிடுகிறார்கள். அவர்களுக்கு விழித்திருந்து தொழ மனதில் விருப்பம்தான்; ஆனால் உடல் ஒத்துழைக்கவில்லை என்ற பொருளில் ஏசு சொன்னதாக இந்த வாக்கியம் விளக்கப்படுகிறது. எனக்கென்னவோ ஏசு அதைத் தன்னைப் பற்றியே சொல்லிக் கொண்டதாகத்தான் தோன்றுகிறது. மறு நாள் சந்திக்கப்போகும் சிலுவை சித்ரவதைக்கு அவர் சித்தம் தயாராக இருக்கிறது. உடல் இன்னமும் அஞ்சுகிறது. தன்னைத் தயார்படுத்திக் கொள்ளவே அவர் அன்றிரவு முழுவதும் இறைவனுடன் பிரார்த்தனை வழியே உரையாடுகிறார்

தான் சரி என்று நம்பும் உண்மைக்காக எந்த துன்பத்தையும் சந்திக்க ஒருவர் மனதில் தயாராக இருக்கலாம். அவர் உடலும் தயாராக இருக்க வேண்டும் என்பது அடுத்த கட்ட சுய தயாரிப்பு. கொள்கையில் பிடிப்பு இருக்கும் ஒவ்வொருவரும் ஏதோ ஒரு கட்டத்தில் வாழ்க்கையில் சந்திக்கும் சவால் இது. பெரும்பாலான மக்கள் இதற்குத் தயாராக இல்லாத நிலையில் தான் வாழ்க்கையில் சமரசங்களைச் செய்கிறார்கள். ரயிலில், தெருவில், ஓட்டலில், டீக்கடையில் என்னை சந்திக்கும் பல வாசகர்கள் `எப்பிடி தைரியமா எழுதறீங்க ?' என்று ரகசியக் குரலில் கேட்கும்போது, அதன் பின்னே இருப்பது, விமர்சனங்களின் விளைவாக ஏற்படக்கூடிய துன்பங்களை எப்படி சந்திப்பது என்பது பற்றிய பொதுக் கவலைதான். அந்தக் கவலை இல்லையென்றால் அவர்களும் விமர்சிக்கத் தயாராகத்தான் இருக்கிறார்கள். The spirit is willing but the flesh is weak.


ஒவ்வொரு புது வருடத்திலும் தசையின் பலவீனத்தைக் கடக்கும் முயற்சியில், சாமான்ய மக்கள் இந்த வருடம் இதைச் செய்வேன் என்று சுயத் தீர்மானங்கள் போடுகிறர்கள்.


ஆனால் நம் சமூகத்தின் மிக பலமான சக்திகளாக இருக்கிற அரசியல், அரசாங்கம், சினிமா, ஊடகங்கள், பத்திரிகைகள், தொழில்கள் இவற்றில் இருக்கிற முக்கியமான புள்ளிகள் யாரும் இப்படி புது வருடத் தீர்மானம் போடுவதே இல்லை. போன வருடம் ரொம்ப அராஜகம் செய்துவிட்டேன். இந்த வருடம் கொஞ்சம் குறைத்துக் கொள்வேன்; போன வருடம் ஓவராக லஞ்சம் வாங்கினேன். இந்த வருடம் கம்மியாக வாங்குவேன்; போன வருடம் ஆபாசமாகவும் அபத்தமாகவும் படங்கள் செய்தேன். இந்த வருடம் கொஞ்சம் நல்ல படங்கள் செய்வேன்; போன வருடம் நம் பத்திரிகை முழுக்க ஆபாசக் களஞ்சியமாக இருந்தது; இந்த வருடம் கொஞ்சம் அடக்கி வாசிப்பேன்; போன வருடம் அபத்தமான சீரியலும் குலுக்கல் டான்சுமாக சேனலை ஓட்டிவிட்டேன். இந்த வருடம் கொஞ்சம் நல்ல ப்ரொகிராம் செய்வேன்.......என்றெல்லாம் துளிக் கூட சுயவிமர்சனப் புது வருடத் தீர்மானங்கள் இந்த அயோக்கியர்கள் செய்வதே இல்லை.


இரண்டு வருடங்களாக நானும் ஒவ்வொரு புத்தாண்டின்போதும் ஒரு தீர்மானத்தை யோசிக்கிறேன். இது என்னைத் திருத்திக் கொண்டு மேம்படுவது சம்பந்தப்பட்டது அல்ல. முழுக்க முழுக்க விரக்தியால் எடுக்கும் தீர்மானம். இனி அரசியல் விமர்சனமே எழுதுவதில்லை என்று சென்ற டிசம்பரில் யோசிக்கத் தொடங்கினேன். அதற்குக் காரணம் என் கட்டுரைகளை எல்லாம் தொகுத்து புத்தகங்களாக வெளியிடுவதற்காக, முந்தைய நான்கு வருடக் கட்டுரைகளையும் ஒரே மூச்சில் படித்ததுதான். அவற்றைப் படிக்கப் படிக்க, தமிழகத்தின் பிரதான அரசியல்வாதிகளைப் பற்றிப் புதிதாக சொல்ல எதுவும் மீதியில்லை என்று தோன்றியது. இவர்களுடைய அயோக்கியத்தனங்களின் அந்தந்த வாரத்து நிகழ்ச்சிகளின் பரிமாணங்களை மட்டுமே தொடர்ந்து எழுத முடியுமே தவிர, அடிப்படையாக இவர்களைப் பற்றிப் புதிதாக சொல்ல எதுவும் இல்லை.


விரக்தியை அதிகப்படுத்திய இன்னொரு காரணம், இப்படி தொடர்ந்து எழுதியும், இவர்கள் எதையும் திருத்திக் கொள்வதாக இல்லை என்பதும் என் கட்டுரைகளிலிருந்தே தெரிய வருகிறது. பழைய தவறுகளையே இன்னும் பெரிசு பெரிசாக தொடர்ந்து செய்கிறார்களே ஒழிய துளியும் வெட்கம், கூச்சம், சூடு, சுரணை போன்ற அடிப்படை மனிதப் பண்புகள் எதுவும் இவர்களிடம் காணப்படவில்லை. எரிகிற கொள்ளியில் எந்தக் கொள்ளி நல்ல கொள்ளி என்ற ஆராய்ச்சியை நோக்கித்தான் நாம் தள்ளப்படுகிறோம். உடனடி உதாரணங்களாகவே சிலவற்றைச் சொல்லலாம். மின்வெட்டால் சிறு தொழில்கள் எல்லாம் மூடப்படும் வேளையில் திருச்சி உறையூரில் ஸ்டாலின் கூட்டத்துக்காக பல கிலோமீட்டர் தூரத்துக்கு அருவருப்பாக மின் அலங்காரங்கள் செய்திருந்ததைக் குறிப்பிட்டு திருந்தவே மாட்டிங்களா என்று ஒரு வாரம் முன்னால் ஓ பக்கங்களில் கேட்டிருந்தேன். இந்த வாரம் சென்னை வேளச்சேரியில், முதலமைச்சர் அடுத்த வாரம் வரப்போகும் நிகழ்ச்சிக்காக சாலைகளில் செய்துவரும் வரவேற்பு ஏற்பாடுகள் போக்குவரத்தையே நிலைகுலைய வைத்து, அந்தப் பகுதி மக்கள் குமுறிக் கொண்டிருக்கிறார்கள். இதற்கு அர்த்தம் என்ன? திருந்த மாட்டோம், போங்கடா என்பதுதானே?


முதலமைச்சரின் புது வருடக் கனவு, கூவத்தின் பளிங்கு போன்ற நீரில் அவர் வீட்டுப் பிள்ளைகள் குளிப்பது என்று மேம்பாலத் திறப்பு விழாவில் சொல்லியிருக்கிறார். இதே கனவை அவர் 1972ல் நான் கல்லூரியில் படிக்கும்போதும் சொன்னார். அப்போது அவருடைய ஆட்சியில் அதற்கு பணம் ஒதுக்கிச் செலவும் செய்தார்கள். இப்போது என் மகனும் கல்லூரிப் படிப்பை முடித்துவிட்டான். முதலமைச்சர் கலைஞரும் ஐந்து முறை முதலமைச்சராக இருந்து சாதனை செய்துவிட்டார். கூவம் இன்னும் நாறிக் கொண்டிருக்கிறது. 37 வருடங்களுக்கு முன்னால் கூவம் சீரமைப்பு திட்டத்தைப் போட்டவர் ஏன் அதை அப்போதே சரியாக நிறைவேற்றவில்லை என்ற காரணத்தை, இப்போது இன்னொரு திட்டம் போடும்போது சொல்ல வேண்டாமா? சொல்ல மாட்டார். நம் மக்களின் மறதி, அலட்சியம், விமர்சிப்பதற்கான பயம் இவையெல்லாம்தான் அரசியல்வாதிகளின் முதலீடுகள்.


கலைஞருக்கு மாற்றாக தன்னை முன் நிறுத்தும் எதிர்க் கட்சித்தலைவர் ஜெயலலிதாவின் உச்சகட்ட அரசியல் சாணக்யத்தனம் என்ன தெரியுமா? திருமங்கலம் தொகுதியின் தி.மு.க. வேட்பாளரின் மாமியார், மாமனார், கொழுந்தன் எல்லாரையும் அ.தி.மு.க.வில் சேரச் செய்வதுதான். இதுவா அரசியல்?தமிழ்நாட்டில் தி.மு.க.வும் அ.தி.மு.க.வும் மாறி மாறி நடத்தி வந்திருப்பதே இந்தக் குடும்ப அரசியல்தான். அரசியலில் இருக்கும் பல குடும்பங்களில் சிலர் தி.மு.க.விலும் சிலர் அ.தி.மு.க.விலும் இருக்கிறார்கள். எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் குடும்பத்துக்கு லாபம். இரு கட்சிகளும் மேல் மட்டத்திலிருந்து கீழ் வரை, குடும்பங்களின் வாரிசு அரசியல்தான் நடக்கிறது.


ஒரு ஆர்.டி.ஓ. லஞ்ச வழக்கில் கைதானால் அவரிடம் கோடிக்கணக்கில் சொத்து, பிடிபடுகிற ஒரு போலீஸ் இன்ஸ்பெக்டரிடம் கோடிக்கணக்கில் சொத்து. அரசாங்கத்தின் கீழ்மட்ட, நடுமட்ட ஊழியர்களிடமே இவ்வளவு சொத்து குவிகிறதென்றால், அரசியல்வாதிகள், அமைச்சர்கள் எவ்வளவு கொள்ளையடித்திருப்பார்கள் என்று யூகிக்கலாம்.
இன்று தமிழ்நாட்டின் எந்தப் பிரச்னையை எடுத்துக் கொண்டாலும் அதற்கு வேராக இருப்பது லஞ்சம் ஊழல் அராஜகம்தான். நில ஆக்கிரமிப்பு, மணல் கொள்ளை, ஆற்று நீர் மாசுபடுதல், சுற்றுச் சூழல் பாதிப்பு எல்லாவற்றுக்கும் பின்னால் இருப்பது லஞ்சம் ஊழல் அராஜக அரசியல். இதை 1969 முதல் 2009 வரை செய்துவந்திருப்பவர்கள் தி.மு.க., அ.இ.அ.தி.மு.க. இரு கட்சிகளும்தான். கருணாநிதி, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா மூவரும்தான் இதற்காக குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப்பட வேண்டியவர்கள். புதிதாக உருவாகி வந்த கட்சிகள் இயக்கங்கள் எதுவுமே தங்களுக்கு மாற்றாக உருவாகாதபடி, அவற்றையும் தங்கள் வழியில் அழைத்துச் சென்ற குற்றமும் இவர்களுடையதே.


இப்படிப்பட்ட சூழ்நிலையில் எதற்காக நான் தொடர்ந்து அரசியல் விமர்சனம் எழுத வேண்டும் என்ற விரக்தியில் சென்ற ஜனவரியில் எழுதுவதை நிறுத்த முடிவு செய்தேன். அப்போதுதான், எனக்கெதிரான அவதூறுப் பிரசாரங்கள். கண்டனக் கூட்டங்கள். அரசியல் நிர்ப்பந்தங்கள் எல்லாம் நிகழ்ந்தன. விகடனில் என் தொடர் நிறுத்தப்பட்டது. நானாக நிறுத்துவேனே தவிர, இன்னொருவர் நிர்ப்பந்தத்தால் என் குரல் ஒலிப்பது நிற்காது என்று நிரூபிப்பதற்காகவே தொடர்ந்து குமுதத்தில் எழுதத் தொடங்கினேன். ஆனால் என் விரக்திக்கான காரணங்கள் அப்படியே உள்ளன.2009_ல் தமிழக அரசியலில் தி.மு.க.வும் அ.தி.மு.க.வும் திருக்குவளை குடும்பமும் மன்னார்குடி குடும்பமும் பலவீனப்படுத்தப்பட்டு அவற்றை அண்டிப் பிழைக்கும் அரசியல் கட்சிகளும் பலவீனப்படுத்தப்பட்டு, முற்றிலும் புதிய நேர்மையான அரசியல் சக்திகள் இளைய தலைமுறையிலிருந்து முகிழ்த்தெழ வேண்டும் என்பதுதான் என் கனவு. இதை நிறைவேற்றப் போகிற பொதுமக்கள், வாசகர்கள், இளைஞர்கள் எங்கே இருக்கிறீர்கள்? தயவுசெய்து வெளியே வந்து என் மனச் சோர்வை நீக்குங்கள். அதுவே நீங்கள் எனக்குத் தரும் புத்தாண்டுப் பரிசு. The spirit must be willing and the flesh should not be weak..இந்த வருட பூச்செண்டு

மும்பையில் பயங்கரவாதி கசாபை, தன்வசம் எந்த ஆயுதமும் இல்லாதபோதும் துணிச்சலாகப் பிடித்து தன் உயிரையே கடமைக்காகக் கொடுத்த காவலர் துக்காராமுக்கு இந்த வருடப் பூச்செண்டு.


இந்த வருட குட்டு.

பொறுப்புள்ள எதிர்க்கட்சித் தலைவராக எதுவுமே செய்யாமல் அரசியல் நடத்திய ஜெயலலிதாவுக்கு இந்த வருடக் குட்டு.


இந்த வருட பரிதாப விருது.

சன் டி.வி.யிலிருந்து கலைஞர் டி.வி.க்கு சென்ற ஊழியர்கள் அனைவருக்கும் இ.வ.பரிதாப விருது.