Sunday, November 30, 2008

இது என்னோட 75 வது பதிவு மழை, மும்பை,என் சந்தேகங்கள்.... இன்னும் பல

மறந்திடிச்சிப்பா இது என்னோட 75 வது பதிவு


போன வாரம் மழை, மும்பையின்னு ரொம்ப சூடாவே இருந்தது.

மும்பை தீவிரவாதம் பற்றி நமது பதிவர்கள் கொதித்து எழுதியிருந்தார்கள். அதில் பதிவர் அருவை பாஸ்கர் சொல்லியிருந்த கருத்து சற்று வித்தியாசமா இருந்துச்சி. கீழே படியுங்க

//மேலும் பல வெளிநாட்டு வெள்ளைக்காரர்களும் கொல்ல பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன .இனிமேல் எங்கள் நாட்டு அரசியல் வாதிகளை வெள்ளைக்காரர்கள் சும்மா விட மாட்டார்கள் . அதற்க்காகவாது எங்கள் நாட்டு அரசாங்கம் நிச்சயம் உங்களை ஒடுக்க பார்க்கும் .
நாங்களும் கொஞ்சம் நிம்மதி பெருமூச்சு விடுவோம் .வெள்ளைக்காரர்கள் உயிர் என்ன இந்தியனின் உயிரை போல கேட்பார் இல்லாதது என்று நினைத்தீர்களா ?//

இந்நேரத்தில் தேசியாபாதுகாப்பு படைவீரர்கள், ராணுவ வீரர்கள், மும்பை பொலீஸ்க்கு ஸ்பெஷலா வணக்கம் வைங்கப்பா.

இந்த விசயத்திலையும் அரசியல் பண்ணும் அரசியல்வியாதிகளை தூக்கிப்போட்டு மிதிக்கவும்.

மழையிலும் கட்டிங் பார்த்த பள்ளிக்கரணை பேரூராட்சி.

இந்த வாரம் ரொம்பவே படுத்திடிச்சிப்பா நிஷா.வியாழக்கிழமை காலையில் 27.11.08 பாலாஜி பல் மருத்துவமனை தாண்டி தண்ணீர் அதிகமாக தேங்கியிருந்தது.பஸ் எல்லாம் போய்ட்டுதான் இருந்தது.பக்கத்துல இருக்க பெட்ரோல் பல்க் சொல்லிச்சின்னு பேரூராட்சி நிர்வாகம் நல்லா இருந்த ரோட்டுல பள்ளம் தொண்டி குழாய பதிச்சு நாசம் பண்ணிட்டாங்க. அப்படியே விட்டிருந்தா கூட அன்னைக்கு நைட்டே தண்ணி வடிந்திருக்கும்.கட்டிங்க்கு ஆசைப்பட்டு,ரோட்டை நாசம் செஞ்சு இப்ப 3 நாளா பஸ் போக்குவரத்தே கிடையாது. ஆட்டோ, ஷேர் ஆட்டோ காட்டுல அடைமழை.வேளச்சேரி போகனும்னா மேடவாக்கம் கூட்ரோடுவரவேண்டியிருக்குப்பா. மாநகர போக்குவரத்து கழகமாவது பள்ளிக்கரணைக்கு ஒரு கட் சர்வீசாவது விடலாம்.அட போங்கப்பு

இந்தபதிவு எழுதிக்கிட்டேயிருக்கும் போது ஷிவ்ராஜ் பாட்டீல் ராஜிநாமானு நியுஸ்ல சொன்னாங்க. இப்பவாவது மனுசருக்கு ரோஷம் வந்துதே...

கேள்விக்கு பதில் சொல்லுங்கடே

1.அம்மாவை பற்றி நல்லா தெரிஞ்சும் கம்யுனிஸ்ட்காரவுக ஏன் இப்படி பண்றாக.
2.காடு வெட்டி குரு வுக்கு ஜாமீன் கிடைச்சிருச்சே எப்படிடே?
3.விசயகாந்து எங்கே இருக்கார்?

இந்த வார காமெடி

சுப்பிரமணிய சாமி சொன்னது
" கருணாநிதியை நீங்களெல்லாம் தமிழர் என்று தானே நினைத்துக்கொண்டிருக்கிறீகள்?அவருடைய அப்பா முத்து வேலருடைய மூதாதையர்கள் ஆந்திராவை பூர்வீகமாக கொண்டவர்கள்.""

பதிவை படிச்சிட்டு பிடிக்குதோ இல்லையோ கருத்தை சொல்லிட்டு போங்கப்பா.

அப்படியே ஓட்டையும் குத்திட்டு போங்க.

இவ்வாரம் ஞாநியின் பார்வையில்

பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவல கால வகையினானே' என்றார் நன்னூல் ஆசிரியர் பவணந்தி. கால மாற்றத்துக்கேற்ப வாழ்க்கை முறை மாற்றங்களும் தவிர்க்கமுடியாதவை என்று பழந்தமிழருக்கு இருந்த அறிவு கூட இன்றைக்கு நமக்கு இல்லை. சில மாற்றங்களை துளியும் முணுமுணுப்பு இல்லாமல் ஏற்கிறோம். சிலவற்றைக் கடுமையாக எதிர்க்கிறோம். சிலவற்றை வெளியிலே எதிர்த்து ரகசியமாக ஆதரிக்கிறோம். சிலவற்றை பகிரங்கமாக ஆதரித்துவிட்டு ரகசியமாக எதிர்க்கிறோம்.

தமிழர்கள், இந்தியர்கள் வாழ்க்கையில் குடும்பம் என்ற அமைப்பின் பங்கு மிகவும் பெரிதாக எப்போதும் பேசப்படுகிறது. ஏதோ இந்தியாவுக்கு வெளியே யாருமே குடும்பம் என்ற அமைப்பே இல்லாமல் தாறுமாறாக வாழ்வது போலவும் இங்கே மட்டும்தான் குடும்பம் என்ற அமைப்பு அதன் முழுப் புனிதத்துடனும் முழு வீச்சுடனும் நம் சமூகத்தையே காப்பாற்றிக் கொண்டிருப்பது போலவும், பல கலாசாரக் காவலர்கள் முழங்குவது உண்டு.

மூன்று செய்திகளை இந்த வாரம் படித்தேன். மூன்றும் ஒவ்வொரு விதத்தில் குடும்பம் என்ற அமைப்பு, ஆண்-பெண் உறவு எல்லாவற்றைப் பற்றியும் கேள்விகளை நம் மனதில் எழுப்பக்கூடியவை.

முதல் செய்தி மீரட்டிலிருந்து.

பிரியங்கா என்ற பாலிடெக்னிக் மாணவி தன் சிநேகிதி பிரியங்காவின் உதவியுடன், தன் அப்பா, அம்மா இருவரையும் கொலை செய்ததாகக் கைதாகியிருக்கிறாள். அம்மாவைக் கழுத்தை நெரித்தும் தடுக்க வந்த அப்பாவை கத்தியால் குத்தியும் கொன்றிருக்கிறார்கள். கைதான பெண்கள் குற்றத்தை ஒப்புக் கொண்டு தெரிவித்ததாக சில காரணங்களை போலீஸ் பட்டியலிட்டிருக்கிறது.

பிரியங்காவும் அஞ்சுவும் இண்டீரியர் டிசைன் படிக்கும் மாணவிகள். பிரியங்கா மீரட்டில் முன்னர் அழகிப் போட்டியில் கலந்துகொண்டு ஜெயித்தவள். இப்போது இருவரின் எதிர்காலமும் பெரும் கேள்விக்குறி. போலீசிடம் கொடுத்த ஒப்புதல் வாக்குமூலத்தை இப்போது அவர்களுடையவழக்கறிஞர் மறுக்கிறார்.
ஒப்புதல் வாக்குமூலத்தில் சொல்லப்பட்ட காரணங்கள் என்ன? இருவர் வீட்டிலும் இருவரையும் கொடுமைப்படுத்தியிருக்கிறார்கள். பிரியங்காவின் அப்பா அவளைத் தனக்குப் பிறந்த குழந்தை இல்லை என்று தொடர்ந்து அவமானப்படுத்தியிருக்கிறார். தன் மனைவிக்குக் கள்ளக்காதலில் பிறந்த குழந்தை என்று சொல்லிவந்த அவர் ஓர் இன்ஜினீயர். அஞ்சுவின் வீட்டில் அவளுடைய மாமாவும் மறுசகோதரனும் அவளை அடித்து உதைத்து வந்திருக்கிறார்கள். பிரியங்கா, அஞ்சு இருவரையும் அடைத்து வைத்தும், குண்டர்களைக் கொண்டு தாக்கியும், பாலியல் வன்முறைக்கு உட்படுத்தியும் வந்ததாக ஆகஸ்ட் மாதத்திலேயே இரு பெண்களும் தேசிய மகளிர் ஆணையத்திடம் புகார் செய்திருக்கிறார்கள். பாதுகாப்புக்காக தங்கவைக்கப்பட்ட விடுதியிலிருந்து இருவரும் சில நாட்களில் சென்று விட்டனர். டெல்லியில் அறை எடுத்துத் தங்கியிருந்தனர். மீரட் திரும்பி வந்து பிரியங்கா வீட்டுக்குப் போய் பணம் கேட்டபோது தாய் தர மறுத்தார். அஞ்சுவுடன் பிரியங்காவுக்கு இருக்கும் சிநேகம் பற்றி அவர் கடுமையாக விமர்சனம் செய்து வந்திருக்கிறார். கோபத்தில் பிரியங்கா தாயைக் கழுத்தை நெரித்தாள். சத்தம் கேட்டு வந்த அப்பாவை அவளும் அஞ்சுவுமாக கத்தியால் குத்தினார்கள். வீட்டிலிருந்த பணம், நகைகள், அப்பாவின் உயில் எல்லாவற்றையும் எடுத்துக் கொண்டு டெல்லிக்குப் போய்விட்டார்கள். சில தினங்களிலேயே போலீஸ் மோப்பம் பிடித்து வந்து கைது செய்துவிட்டது.

சிறுமிகளாக இருந்த நாட்களிலிருந்து அவரவர் குடும்ப ஆண்களால் சீண்டப்பட்டும் உபயோகிக்கப்பட்டும் மிரட்டப்பட்டும் வந்த இரு பெண்களுக்கும் பரஸ்பர நட்பு ஒன்றுதான் ஆறுதலாக இருந்திருக்கிறது. ஆனால் அவர்களிடையே இருந்த உறவே மற்றவர்களால் மேலும் இழிவுபடுத்தப்பட்டது. பெண்-பெண், ஆண்-ஆண் உறவை எந்தக் குடும்பத்தாலும் சகித்துக் கொள்ள முடிவதில்லை. போலீசிடம் இரு பெண்களின் உறவினர்களும் இப்போது `ரெண்டு பேரும் கெட்ட பெண்கள்', `தப்பான உறவுடைய பெண்கள்' என்று சொல்லுகிறார்கள்.

ஆண்-பெண் உறவானாலும் சரி, மாற்று உறவுமுறைகளானாலும் சரி, எதையும் ஆரோக்கியமாக அணுகும் மன நிலையில் நம் சமூகம் இல்லை. இங்கே ஆண்-பெண் உறவும் சிக்கலானதாகவே இருக்கிறது. மாற்று வாழ்க்கை முறையைத் தேர்வு செய்யும் பெண்கள், ஆண்கள் நிலை இன்னும் சிக்கலானது. பகிரங்கமாகக் கெட்டவை என்று சொல்வதையெல்லாம் ரகசியமாகச் செய்வதில் எந்தத் தயக்கமும் இல்லை. அதை குடும்பம், பண்பாடு என்ற போர்வையில் போர்த்தி மறைப்பதிலும் துளியும் வெட்கம் இல்லை. ஆனால் குடும்ப உறவுகள், மனித உறவுகள் பற்றிய எந்தப் பிரச்னையையும் பகிரங்கமாகப் பேசவும் விவாதிக்கவும் மட்டும் தயக்கமும் எதிர்ப்பும் இங்கிருக்கின்றன. தமிழ்நாட்டில் அதிகம் விற்பனையாகும் தினசரி செய்தித்தாளில் ஒரு வாரத்தில் குறைந்தது மூன்று கள்ளக் காதல்கள், அதனால் ஏற்பட்ட கொலைகள் பற்றிய செய்திகளைப் பார்க்கிறேன். எல்லாம் குடும்பப் பெண்கள்; குடும்ப ஆண்கள்.

இப்படிப்பட்ட சூழலில் நேபாளத்திலிருந்து ஒரு செய்தியைப் படித்தேன். அதுதான் இந்த வாரத்தின் இரண்டாவது செய்தி. உலகத்திலே ஒரே இந்து நாடாக தன்னை அறிவித்துக் கொண்டு இருந்து வந்த நாடு நேபாளம் என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். அங்கே மன்னராட்சி கவிழ்க்கப்பட்டு, மாவோயிஸ்ட்டுகள் ஆயுதப்போராட்டம் நடத்தி மதச் சார்பற்ற பல கட்சி ஜனநாயகக் குடியரசை ஏற்படுத்தியதில் பயனடைந்திருப்பவர்களில் முக்கியமானவர்கள் சிறுபான்மையினரான ஓரின உறவாளர்கள். முதல்முறையாக அங்கே ஒரு ஹோமோசெக்ஸுவல் எனப்படும் ஆண்-ஆண்உறவாளர், தேர்தலில் நின்று ஜெயித்து எம்.பி.யாகியிருக்கிறார். தகவல் தொழில்நுட்பத் துறை இன்ஜினீயரான சுனில் பாபு பந்த் பல வருடங்களாக சுயபால் உறவாளர்களின் உரிமைகளுக்காகப் போராடி வருபவர். நேபாளத்தின் ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் அவர் தேர்தலில் நின்று ஜெயித்திருக்கிறார். (இங்கே இடதுசாரிக் கட்சிகள் செக்ஸுவாலிட்டி பற்றிய விவாதங்களில் கூட பகிரங்கமாகக் கலந்துகொள்வதில்லை. 1917ல் ருஷ்யப் புரட்சி நடந்தபிறகு லெனின் ஆட்சிக் காலத்தில், உலகத்திலேயே சுயபால் உறவை சட்டப்படி செல்லத்தக்கதாக ஆக்கிய முதல் நாடு சோவியத் யூனியன்தான்.)

நேபாளத்திலும் இந்தியாவைப் போலவே சுயபால் உறவு என்பது செயற்கையான செக்ஸ் உறவாகக் கருதப்படுகிறது. அதனால் அது சட்டப்படி குற்றம். மூன்றாம்பாலினர் 13 பேரை நேபாளம் நாடுகடத்தியிருக்கிறது. இருவர் அடித்துக் கொல்லப்பட்டார்கள்.

இப்போது அந்த நாட்டின் உச்ச நீதி மன்றம் ஓரின உறவாளர்கள் மற்ற குடிமக்களைப் போல திருமணம் செய்துகொள்வது முதல் சொத்து, கல்வி, என்று எல்லாவற்றிலும் சம உரிமை உடையவர்கள் என்று அறிவித்திருக்கிறது. இதற்கேற்ப அரசியல் சட்டத்தைத் திருத்தும்படி அரசுக்கு உத்தரவிட்டிருக்கிறது. இந்தியாவில் ஹோமோசெக்ஸுவாலிட்டியைக் குற்றமாகக் கருதும் 377ம் பிரிவை நீக்கிவிடலாம் என்று அமைச்சர் அன்புமணியும், நீக்கக்கூடாது என்று அமைச்சர் சிவராஜ் பாட்டீலும் ஒரே அரசின் சார்பில் நீதி மன்றத்தில் தெரிவித்துக் கொண்டிருக்கிறார்கள்.

மூன்றாவது செய்தி ஆண்-ஆண் உறவாளர்கள் திருமணம் செய்துகொண்டு குழந்தை பெற்றுக் கொள்வது பற்றியது. நேபாளத்தைப் போலவே இன்னொரு பழமைவாத நாடு இஸ்ரேல். அங்கே ஓரின உறவாளர்கள் திருமணம் செய்ய உரிமையில்லை. ஆனால் குழந்தை பெற்றுக் கொண்டால், அதை இஸ்ரேல் பிரஜையாகப் பதிவு செய்யவும் சம உரிமை பெறவும் பாஸ்போர்ட் வாங்கவும் சட்டத்தில் இடம் இருக்கிறது. இஸ்ரேலைச் சேர்ந்த யோநாதன் உலகம் முழுவதும் சுற்றுச்சூழல் பாதுகாப்புக்காகப் போராடும் கிரீன்பீஸ் இயக்கத்தின் பொதுஜனத்தொடர்பாளர். அவரும் ஓமர் என்ற ஓரின உறவாளர் உரிமை இயக்கப் போராளியும் தம்பதிகள். ஏழாண்டுகளாக ஒன்றாகக் குடும்பம் நடத்தி வரும் இருவருக்கும் குழந்தை பெற ஆசை வந்தது.

அதற்கு உதவியது நம் இந்தியாதான்!
யோநாதனின் விந்துவிலிருந்து உயிரணுவை மும்பையில் இருக்கும் மருத்துவமனை மூலம் ஒரு இந்திய வாடகைத் தாய்க்குக் கொடுத்து அவர் கருவுற்றுக் குழந்தையைப் பெற்றெடுத்துக் கொடுத்திருக்கிறார். குழந்தையின் பெயர் ஏவ்யதார். யூத மொழியில் `நிறைய அப்பாக்கள்' என்று அர்த்தமாம்.

இந்தியாவில் ஓரின உறவுதான் சட்ட விரோதமானது. வாடகைத் தாயாக குழந்தை பெற்றுக் கொடுப்பது சட்டப்பூர்வமானது. உலகத்திலேயே அமெரிக்காவுக்கு அடுத்து இந்தியாதான் வணிகரீதியிலான வாடகைத் தாய் முறையை அங்கீகரித்திருக்கிறது. அமெரிக்காவில் இதற்கு ஒரு லட்சம் டாலர் செலவாகும், இந்தியாவில் மொத்த செலவு 25 ஆயிரம் டாலர்கள்தான். உயிரணுவைத் தருவதற்கும், பின்னர் குழந்தையை வாங்கிச் செல்லவும் இரு முறை இந்தியாவுக்கு வந்து செல்ல விமான டிக்கெட், மருத்துவச் செலவு எல்லாமாக 17,500 டாலர். 7500 டாலர் வாடகைத் தாய்க்கு. தங்கள் குடும்ப வறுமையைப் போக்கிக் கொள்ளவும் குழந்தைகளின் படிப்பு, மருத்துவச் செலவுக்காகவும் ஏழைப் பெண்களே வாடகைத் தாயாகிறார்கள். நூற்றுக்கணக்கான குழந்தைகள் ஆண்டு தோறும் இப்படி மேட்டு ஆர்டர் தயாரிப்பாக இந்தியாவிலிருந்து ஏற்றுமதியாகின்றன. குழந்தையின் எந்த ரிக்கார்டிலும் வாடகைத் தாயின் பெயர் இடம் பெறாது. அவரும், குழந்தைக்கு ஆர்டர் கொடுத்தவர்களும் ஒருவரையொருவர் அறியவும் முடியாது.

யோநாதன்_ ஓமர் தம்பதி அடுத்த வருடமும் இந்தியாவுக்கு இரண்டாவது குழந்தைக்காக வர இருக்கிறார்கள். இம்முறை ஓமரின் உயிரணுவிலிருந்து. ஓரின உறவுத் தம்பதிகளால் குழந்தை வளர்க்க முடியாது; குடும்பம் நடத்த முடியாது என்று சொல்வதெல்லாம் உளறல். எங்களைப் போல பலர் அதைப் பொய்யாக்கிக் கொண்டிருக்கிறோம் என்கிறார்கள் யோநாதன் - ஓமர் ஜோடி. எது குடும்பம்? குடும்பத்தின் அமைப்பு என்ன? அதன் மதிப்பீடுகள் என்ன? குடும்பத்தின் பெயரால் ரகசியமாக நடக்கும் வன்முறைகள் என்ன? மனித உறவுகளின் அர்த்தம் என்ன? என்று பல முக்கியமான கேள்விகளை இந்த மூன்று செய்திகளும் எழுப்புகின்றன. நாமோ பதில்களைத் தேடாமல் ஜாதிச் சேற்றில் தலை புதைத்துக் கொண்டிருக்கிறோம். எந்த ஜாதிப் பெண் தங்கள் குழந்தையைப் பெற்றுத் தருகிறாள் என்பதைப் பற்றிக் கவலைப்படாத யோநாதனும் ஓமரும் தலை நிமிர்ந்து நடக்கத் தகுதியானவர்கள். கத்தியும் கம்புமாக நம் பிள்ளைகளைத் திரிய விட்டிருக்கிற நாம்?.

நன்றி குமுதம்