Friday, October 17, 2008

தேர்தல் கூட்டணி ???? + மின்வெட்டு புதிய முயற்சி.

தலைப்பு மட்டும் தான் என்னோடது, குமுதம் ரிப்போர்ட்டரிலிருந்து சோலை எழுதியது

தமிழகத்தில் புதிய அரசியல் கூட்டணி உருவாவதற்கான சூழ்நிலைகள் உருவாகி வருகின்றன.


பாட்டாளி மக்கள் கட்சியை தமது கூட்டணியிலிருந்து தி.மு.கழகம் வெளியேற்றியது. `காங்கிரஸ் உறவை தி.மு.கழகம் கத்தரித்துக் கொள்ளாததால் அந்த அணியிலிருந்து வெளியேறுகிறோம்' என்று இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகளும் அறிவித்தன.தமிழகத்தில் மார்க்சிஸ்ட் கட்சியின் நிலை என்ன என்று டெல்லியில் செயலாளர் பிரகாஷ்காரத்தை நிருபர்கள் கேட்டனர். `காங்கிரஸ் -பி.ஜே.பி. கூட்டணிகளில் அங்கம் பெறும் கட்சிகளுடன் உடன்பாடு இல்லை என்று தமிழ் மாநிலக் குழு முடிவு செய்திருக்கிறது. அதுதான் கட்சியின் நிலைப்பாடு' என்று அவர் சொன்னார்.`பி.ஜே.பி.யோடு உறவு இல்லை என்று அ.தி.மு.க. உறுதி அளித்தால் அதனோடு உடன்பாடு காண்பது பற்றி சிந்திப்போம்' என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழகத் தலைவர்கள் தொடர்ந்து கூறி வருகிறார்கள். அய்யா நல்லகண்ணு அவர்கள் கூட இதே கருத்தை நெல்லைச் சீமையில் எதிரொலித்தார்.



ஆனால், மார்க்சிஸ்ட் கட்சி இப்படிக் கூறவில்லை. எங்கள் நிலையைத் தெளிவுபடுத்தி விட்டோம். பிற கட்சிகள்தான் தங்கள் நிலையைத் தெரிவிக்க வேண்டும் என்ற அளவில் நின்று கொண்டது. விண்ணப்பம் போடவோ, வேண்டுகோள் விடுவிக்கவோ அந்தக் கட்சி தயாராக இல்லை.அ.தி.மு.க. பொதுச் செயலாளர் செல்வி ஜெயலலிதாவும் தமது நிலையைத் தெரிவித்துவிட்டார். அவருடைய நிலைப்பாடு தெளிவானது. உறுதியானது.கோடநாட்டில் ஓய்விலிருந்த அவர் சென்னை திரும்பினார். தலைமைக் கழகம் வந்தார். நிருபர்களைச் சந்தித்தார். அதன் முழு விவரம் பிரதான ஏடுகளில் வெளியாகி இருக்கிறது.பி.ஜே.பி.யோடு அ.தி.மு.க. கூட்டணி காணுமா என்பது கேள்வி. `இப்போதைக்கு இந்தக் கேள்வி எழத் தேவையில்லை' என்றார் செல்வி ஜெயலலிதா.இதன் பொருள் என்ன என்பதனை நாம் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு விளக்கத் தேவையில்லை. அவை அரசியல் புரிந்தவைகள். ஆனால், பாமர மக்களுக்கு அர்த்தம் புரிய வேண்டாமா?



பி.ஜே.பி. தீண்டத்தகாத கட்சி அல்ல. அவசியப்பட்டால் அந்தக் கட்சியோடும் அ.தி.மு.க. கூட்டணி காணும். ஏற்கெனவே குடியரசுத் தலைவர் தேர்தல் வரை பி.ஜே.பி.யோடு ஒன்றுபட்டு நின்றிருக்கிறது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி எழுப்பும் கேள்விக்கு இதுதான் சரியான பதிலாகும்.எனவே, பி.ஜே.பி.யோடு எப்போதும் அ.தி.மு.க. உறவு கொள்ளக் கூடாது என்று எந்தக் கட்சியும் அ.தி.மு.க. தலைமையை நிர்ப்பந்திக்க முடியாது. அதே போல் அந்த மடத்தை விட்டு இந்த மடத்திற்கு வருகிற கட்சிகளுக்கு அ.தி.மு.க.வும் நிபந்தனை விதிக்காது. ஏனெனில், இப்போது துணை தேவை.கம்யூனிஸ்ட் கட்சிகளுடன் எப்படி அ.தி.மு.க. உடன்பாடு காண முடியும் என்ற கேள்வி எழுந்தது. அதற்கும் செல்வி ஜெயலலிதா அழகாக பதில் அளித்தார்.`இப்போது அ.தி.மு.க. தனி அணி. அதனால் எந்தக் கட்சியுடனும் கூட்டணி காணத் தயார். எங்கள் கழக கதவுகள் திறந்தே இருக்கின்றன' என்று அவர் பளிச்செனப் பதில் அளித்தார்.அவருடைய கருத்துக்களைத் தொகுத்துப் பார்த்தால் அ.தி.மு.க.வின் நிலை தெளிவாகத் தெரியும்.தனி அணியாக இருக்கின்ற அ.தி.மு.க., எந்தக் கட்சியுடனும் கூட்டணி காணத் தயார்.



கம்யூனிஸ்ட் கட்சிகள் வந்தாலும் வரவேற்கும். பா.ம.க. வந்தாலும் வரவேற்கும். அந்தக் கூட்டணியும் நாடாளுமன்றத் தேர்தலுக்கு மட்டும்தான்.தேர்தலுக்குப் பின்னர் டெல்லியில் என்ன நிலை எடுப்பது என்பதனை அ.தி.மு.க. பின்னர் தீர்மானிக்கும்.பி.ஜே.பி.யோடு உறவு உண்டா இல்லையா என்பதெல்லாம் இப்போது எழுகின்ற பிரச்னை அல்ல.தமிழகத்தைப் பொறுத்தவரையில் செல்வி ஜெயலலிதாதான் கூட்டணி பற்றி இவ்வளவு வெளிப்படையாக இருக்கிறார். ஆனால், அ.தி.மு.க.வோடுஉறவு கொள்வதைத் தவிர வேறு வழியில்லாத கட்சிகள் கூட, இன்னும் காலம் வரவில்லை என்று கணக்குச் சொல்லிக் கொண்டிருக்கின்றன. காரணம், அந்தக் கட்சிகள் இப்போது டெல்லியில் காங்கிரஸ் கூட்டணி அரசில் அங்கம் பெற்றிருக்கின்றன. எனவே, கடைசி நிமிடம் வரை அங்கே காரியங்களைச் சாதித்துக் கொண்டுதான் அந்தக் கட்சிகள் வரும். அதனை செல்வி ஜெயலலிதாவும் அறிவார்.எந்தக் கட்சியின் கதவுகளையும் இடதுசாரிக் கட்சிகள் தட்ட வேண்டிய அவசியமில்லை. சீட்டையும் ஓட்டையும் மட்டுமே நம்பி அவை அரசியல் நடத்துவதும் இல்லை. தேர்தலையே கட்சி வளர்ச்சிக்கான ஒரு கருவியாகத்தான் கருதும்.



நாடாளுமன்றத் தேர்தலுக்கு இன்னும் நிறைய நேரம் இருக்கிறது. ஒரே ஒரு நிகழ்வு அரசியலை புரட்டிப் போட்டுவிடும்.



குடியரசுத் தலைவர் தேர்தலுக்கு முன்னர் அகில இந்திய அளவில் மூன்றாவது அணி அமைக்க செல்வி ஜெயலலிதாவும் முலாயம் சிங் யாதவும் முயன்றனர். அதே சமயத்தில் செல்வி ஜெயலலிதாவின் தலைமையை ஏற்க அவர்கள் தயாராக இல்லை. எனவே மூன்றாவது அணி மொட்டிலேயே கருகியது.`இந்த மூன்றாவது அணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இடம் பெறுமா' என்று பிரகாஷ் காரத்தை நிருபர்கள் கேட்டனர்.`நாங்கள் அமைக்க விரும்பும் மூன்றாவது அணிக்கும் அவர்களுடைய அணிக்கும் நிரம்ப வேறுபாடுகள் உண்டு. அந்த அணியில் இடம் பெற்றுள்ள முலாயம் சிங்கின் சமாஜ்வாதிக் கட்சி போன்ற சில கட்சிகளுடன் கூட்டு இயக்கம் நடத்த வழி உண்டு (இன்றைய நிலையில் அதுவும் சாத்தியமில்லை) ஆனால் அ.தி.மு.க.வுடனோ, அரியானா சவுதாலோ கட்சியுடனோ எந்த உறவும் வைத்துக் கொள்ள இயலாது' என்று பிரகாஷ்காரத் தெளிவுபடுத்தினார்.அவர் சந்தேகப்பட்டது போலவே அதன் பின்னரும் பி.ஜே.பி.க்கு ஆதரவான நிலையையே அ.தி.மு.கழகம் எடுத்து வருகிறது. இந்திய வரலாறு சோதனைகளைச் சந்திக்கும்போதெல்லாம் பி.ஜே.பி. அணியில்தான் அ.தி.மு.க. நின்றிருக்கிறது. அதுவே அந்தக் கழகத்தின் வெளிப்படையான நிலைப்பாடாகும்.இதனை ஏற்றுக் கொள்கின்ற கட்சிகள் அ.தி.மு.க.வுடன் அரசியல் உறவு கொள்ளலாம். அதில் தவறில்லை. இப்போது தனி அணியாக இருக்கின்ற அந்தக் கழகம் அவசியம் கருதி பி.ஜே.பி. உறவை சற்றுத் தள்ளி வைக்கலாம். ஆனால் நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பின்னர்...? அந்தக் கழகத்திற்கு எவரும் கடிவாளம் போட முடியாது. முரட்டுக்காளை - தூக்கி எறிந்துவிடும்.



எனவே, இன்றைய நிலையில் தங்கள் கோட்பாடுகளின் அடிப்படையில் இடதுசாரி இயக்கங்கள் எந்தக் கட்சிகளுடன் கூட்டணி காண முடியும்?



கொள்கைரீதியாகவோ கோட்பாடு ரீதியாகவோ அ.தி.மு.க.வுடன் உறவு கொள்ள இயலாது.



பா.ம.க.வுடன் உறவு கொள்ள முடியுமா? அந்தக் கட்சி மையத்தில் ஆளும் கட்சி வரிசையில் அமர்ந்து அதிகாரத்தில் பங்கு பெற விரும்புகிற இயக்கம். குறைந்தபட்சம் இரண்டு அமைச்சர் பதவிகளாவது அதற்குத் தேவை. எனவே எதிர்க்கட்சி வரிசையில் அமரும் இடதுசாரிக் கட்சிகளுடன் அந்தக் கட்சி அணிசேர விரும்பாது.மேலும் காங்கிரஸ் தலைமையில் புதிய கூட்டணி என்பதனை பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். எனவே இடதுசாரிக் கட்சிகளுடன் அந்தக் கட்சி உடன்பாடு காண விரும்பாது.எனவே, இன்றைய நிலையில் இடதுசாரிக் கட்சிகளின் கோட்பாடுகளுக்கு ஏற்ப தே.மு.தி.க._ மார்க்சிஸ்ட்_ இந்திய கம்யூனிஸ்ட் கூட்டணிதான் அமைய முடியும்.



இந்த அணி தமிழக மக்களுக்கு புதிய அணியாக, புதுமை அணியாக இருக்க முடியும்.லயோலா கல்லூரி கருத்துக் கணிப்பிற்குப் பின்னரும் தேனி பொதுக்கூட்டத்திற்குப் பின்னரும் தனித்து நின்றாலும் வெற்றி உறுதி என்று அ.தி.மு.க. தலைமைக்கு நம்பிக்கை ஏற்பட்டிருக்கக் கூடும். பல முனைப் போட்டி தங்களுக்குச் சாதகமானதாக இருக்கும் என்று அந்தக் கழகம் எதிர்பார்க்கலாம்.