Saturday, January 24, 2009

மாநகரப்பேருந்துகளும்-- மாதாந்திர பயணச்சீட்டும்-- நானும்

சென்னை நகரில் மிக முக்கியமான தவிர்க்க முடியாத ஒன்று மாநகரப்பேருந்துகள் தான். அப்படிப்பட்ட மாநகரப்போக்குவரத்துக்கழகம் இன்றைக்கு அடித்தட்டு, நடுத்தர வர்க்கத்தினரின் பாக்கெட்களை சுலபமாக காலியாக்கும் கழகமாக மாறிவிட்டதுதான் வேதனை... இதற்கு அச்சாரம் போட்டவர் அம்மையார்... அதிலேயே ரோடு போட்டுக்கொண்டிருப்பவர் கலைஞர் அய்யா.... ஆறு வகை வழித்தடப்பேருந்துகள் சென்னையில் ஓடிக்கொண்டிருக்கிறது...


1. சாதாரண பேருந்துகள்( வெள்ளை போர்டு)-- மினிமம் டிக்கெட் 2ரூபாய்
2."M" வகைப்பேருந்துகள்---மினிமம் டிக்கெட் 3ரூபாய்
3. விரைவுபேருந்துகள்---மினிமம் டிக்கெட் 3ரூபாய்
4.சொகுசுப்பேருந்துகள் --- மினிமம் டிக்கெட் 5ரூபாய்
5.குளிர்சாதனப்பேருந்துகள்---மினிமம் டிக்கெட் 10ரூபாய்.
6.எல் எஸ் எஸ் பேருந்துகள்---மினிமம் டிக்கெட் 2.50ரூபாய்.


சென்னையில் வேலைக்கு சேர்ந்த புதிதில் ஈக்காட்டுத்தாங்கலில் இருந்து கோடம்பாக்கம் செல்வதற்கு ஒரு வாரம் எம்டிசிலதான் பயணித்தேன்..அசோக் பில்லர்ல இருந்து லிபர்டிக்கு பஸ் ஏறுவது சவாலான விசயம் என்பதால் மின்சார ரயிலில் பயணிக்க ஆரம்பித்தேன்...ஈக்காட்டுத்தாங்கல் டூ கிண்டி 20 நிமிட நடை அப்புறம் 10 நிமிடத்தில் கோடம்பாக்கம் ... நல்லாத்தான் போய்க்கிட்டு இருந்தது ராமாபுரத்திற்கு ரூமை மாற்றும் வரையில்.... இதுவரைக்கும் கண்ணில் எப்போதாவதுதான் விரைவு பேருந்து கண்ணில் தென்படும்.. இந்த நேரத்துல தான் மாதாந்திரப்பயணச்சீட்டு--மாநகரப்பேருந்து-- மின்சார ரயில்...பிரச்சினை இல்லாம நல்லா இருந்திச்சி.


2002ன்னு நினைக்கிறேன்..அப்போ முதல்வரா இருந்த நம்ம அம்மையார் ."M" வகைப்பேருந்துகளை அறிமுகப்படுத்தினார்... இந்த வகை பேருந்துகளில் மினிமம் கட்டணம் 3ரூபாய்..மாதாந்திரப்பயணச்சீட்டு செல்லாது...அந்த நேரத்தில் M49 இந்த வண்டிய பாத்தாலே கடுப்பா இருக்கும்..பீக் அவர்ல இந்த வண்டிதான் அதிகமா இருக்கும்... ராமச்சந்திரா டூ திருவான்மியூர் வழித்தடம்.........இருந்தாலும் அம்மையார் ஆட்சிக்காலத்தில் இந்த வகைப்பேருந்துகள் குறைவான எண்ணிக்கையில் இயக்கப்பட்டு வந்தன,,


2006ல் நம்ம கலைஞர் ஆட்சிக்கு வந்ததும் அந்த ஜூன் மாதத்தில் இருந்து ."M" வகைப்பேருந்துகளில் மாதாந்திரப்பயணச்சீட்டு செல்லும் என்று அறிவிக்கப்பட்டது. இங்கேயிருந்துதான் எல்லா பிரச்சினையும் ஆரம்பமாச்சு.. வழைப்பழத்தில ஊசிய குத்துற மாதிரி சாதாரண வெள்ளை போர்டு பேருந்துகளின் வழித்தடம் குறைக்கப்பட்டு அதே வழித்தடத்தில்"M" வகைப்பேருந்துகள் ஓட ஆரம்பித்தன..அம்மா ஆட்சியில் எப்போதாவது கண்ணில் தென்பட்ட விரைவுப்பேருந்துகள் நெரிசல் மிகுந்த நேரங்களில் அதிமாக தென்பட ஆரம்பித்தது.இதனால் மாதாந்திர பயணசீட்டு வைத்திருப்போருக்கு செலவு கொஞ்சம் அதிகமாகியது.இந்த நேரத்தில்தான் சொகுசுப்பேருந்துகள் அறிமுகமாகியது..முதலில் புறநகர்களுக்கு இயக்கப்பட்ட இவ்வகைப்பேருந்துகள் கொஞ்ச நாள் கழிச்சி நகருக்குள்ளும் இயங்க ஆரம்பித்தன...நெரிசல் மிகுந்த நேரங்களில் சாதாணப்பேருதுகளின் வழித்தடங்கள் குறைக்கப்பட்டு அதே நேரத்தில் விரைவுப்பேருந்துகளும்,சொகுசுப்பேருந்துகளும் அதிகமாக இயக்கப்பட்டு மாதாந்திரப்பயனச்சீட்டு வைத்திருப்போரின் பாக்கெட்டுகளை இரு மடங்காக காலி செய்யும் பணியை இன்று வரை செவ்வனே செய்கின்றன...


சொகுசுப்பேருந்துகள் மற்றும் விரைவுப்பேருதுகள் சாதாரணப்பேருந்துகளின் வழித்தடங்களை குறைத்துதான் இயக்கப்படுகின்றன. இங்கதான் பிரச்சினை ஆரம்பமாகுது. உதாரணத்துக்கு பள்ளிக்கரணையில் இருந்து நீங்க வேளச்சேரிக்கு மாநகரப்பேருந்தில் போகனும்னா காலையில் 7:25மணிக்கு முன்னால் பஸ் ஸ்டாப்புக்கு வந்தீங்கன்னா சுலபமா பஸ் ஏறிவிடலாம்.. ஆனால் 7:30 மணிக்கு வந்தீங்கன்னா நீங்க பஸ் ஏறுவதற்கு மினிமம் அரைமணி நேரமாகும்..7:30மணியில் இருந்து 8:00மணி வரை 11 மாநகரப்பேருந்துகள் வரும்ம்ம்ம்ம்ம்.......ஆனா ஏறமுடியாது..


வருகிற 11 பேருந்துகளில் 4 சொகுசுப்பேருந்துகள்,4 விரைவுப்பேருந்துகள்,2சாதாரணப்பேருந்துகள், 1 குளிர்சாதனப்பேருந்துகள்.


குளிர்சாதன பேருந்துக்கும் நமக்கும் ரொம்ப தூரம்.தினசரி சொகுசுப்பேருந்துகளில் போவது இயலாத காரியம்... விரைவுப்பேருந்துகளில் எக்ஸ்ட்ரா காசு கொடுத்தும் அழமுடியாது.. அவசரம்னா ஓகே. அந்த ரெண்டு சாதாரணப்பேருந்துகளுக்கும் அந்த நேரத்துல பஸ் நிறுத்தமே மறந்து போகும்....


மேலும் நெரிசல் மிகுந்த நேரம் என்பதை இன்னும் பழைய நேரத்தையே மாநகரப்பேருந்து நிர்வாகம் பயன்படுத்துகிறது... இப்பவெல்லாம் காலை 7 மணிக்கே நெரிசல் நேரம் ஆரம்பமாவுது... ஆனா இந்த நேரங்களில் இயக்கப்படும் வழித்தடங்கள் மிகக்குறைவு. மாநகரப்பேருந்து நிர்வாகம் இதை கவனிக்குமா?..இந்த புலம்பல்கள் போக்குவரத்து அமைச்சருக்கு கேக்குமா??

Thursday, January 22, 2009

அபி ஜெயிச்சாச்சு-- கலைஞர் பயந்தாச்சு--- தொங்கபாலு பேரு நியுஸ்ல வந்தாச்சு...

ஏஹே அபி ஜெயிச்சாச்சுப்பா.. எத்தனை வருசமா போரடிக்கிட்டு இருக்கா தெரியுமா?.. எங்க போனாலும், எந்த வேலை ஆரம்பிச்சாலும் அபிக்குத்தான் எத்தனை கஷ்டம்?. அந்த அளவுக்கு அவளுக்கு வாழ்க்கையில ஏகப்பட்ட வில்லனுங்க... முதல் முறையா நேத்துதான் அவ வாழ்க்கையில ஒரு விடிவு காலமே பொறந்திருக்கு.... தேர்தல்ல ஜெயிச்சுட்டாப்பா... தேர்தல்ல அவளோட எதிரிய மண்ண கவ்வ வச்சிட்டாள்ல... அது சரி எத்தனை நாளைக்குத்தான் அபி தோக்குற மாதிரியே காட்ட முடியும் டைரக்டருக்கு.... அதனாலதான் நேற்று ஒரு மாற்றத்துக்கு அபிய ரொம்பக்கஷ்டப்பட்டு ஜெயிக்கவச்சிட்டாரு... அபியோட தொல்லை எப்ப முடியும்?????

கலைஞருக்கு ஏன் இந்த திடீர் பயம் வந்துச்சின்னெ தெரியல... இலங்கை பிரச்சினையை திசை திருப்பி திமுக ஆட்சியை கவிழ்க்க சதி அப்படின்னு அறிக்கை மூலமா அழுகிறார்... ஏன அழுகிறது இந்த கிழச்சிங்கம்... ஈழப்பிரச்சினையில் கலைஞர்தான் சரியான் முடிவு எடுப்பார் என்று உலத்தமிழர்களெல்லாம் நம்புனாங்க... ஆனா அவரு இன்னா பண்ணினார்... அறிக்கை வுட்டாரு... கூட்ட்டத்த கூட்டினார், டில்லிக்கு காவடி தூக்கினார்... ஒன்னும் முடியல... ஆட்சியா? ஈழப்பிரச்சினையா?? அப்படினா ஆட்சிதான் அப்படின்னு சொல்லாம சொல்லிட்டார் கலைஞர்... திருமா உண்ணவிரதம்-- ராமதாசு-திருமா சந்திப்பு--- அதிமுக காங்கிரசு இதுல ஏதாவது ஒன்னுதான் அவர் இப்படி அறிக்கை விட வச்சிருச்சி....



யப்பா கலைஞருக்கு இன்னும் ஏகப்பட்ட குடும்ப கடமைகள் இருக்கு... அதுவரைக்கும் அவர் ஆட்சியை ஒன்னும் கவுத்திடாதிங்க....ஒரு தொகுதிக்கு 60,70 கோடி செலவு செய்யலாம்.. 234தொகுதிக்கும் செலவு செய்ய முடியுமா?
 
நம்ம தொங்கபாலுவோட நியூஸ் தலைப்புல வரணும்னு ரொம்ப யோசிச்சு நேத்து ஒரு உண்ணவிரத போராட்டம் நடத்துனாரு மது விலக்கை அமல்படுத்தக்கோரி..அவருக்குத் தெரியல இப்போதைக்கு ஈழப்பிரச்சினைக்கு குரல் கொடுத்தத்தான் தலைப்புல வரும்னு...இந்த போராட்டத்துல எத்தனை காங்கிரசு கோஷ்டிகள் கலந்துகிச்சின்னு யாருக்காவது தெரியுமா?? அய்யா தொங்க பாலு முதல்ல தமிழனுக்காக போராடுறதுக்கு யோசிங்க... பேசாம உங்க போரட்டத்தை பாண்டிச்சேரில வச்சிருக்கலாம்...... அங்கதான் அளவில்லாம கரை புரண்டு ஓடிக்கிட்டு இருக்கு....உங்களுக்கு நீங்களே ஒரு ஆப்பு வச்சிக்கிட்டீங்களே அதப்பத்தி யாராவது சொன்னாங்களா??... தென் மாவட்டத்துல உங்க கட்சிக்கு கொஞ்சம் அதிகமா செல்வாக்கு உண்டு நேற்றைய உங்களோட போராட்டத்தால அதுலயும் மண்ண அள்ளி நீங்களே போட்டுட்டீங்க..உருப்படியா ஏதாவது யோசிங்க..தொங்கபாலுக்கிட்ட ஒரு கேள்வி: நீங்க திமுக காங்கிரசா? இல்ல அதிமுக காங்கிரசா?/



நேற்று என்னுடைய ரேஷன் அட்டை முகவரி மற்றத்திற்காக தி.நகர் அரசு அலுவலகத்துக்கு சென்றிருந்தேன்.. எங்க ஆட்சியில எல்லாத்தையும் கணிணி மயமாக்கிட்டோம் எனகூவும் அரசுக்கு இந்த துறை மட்டும் எப்படி கண்ணுல படாம போச்சின்னு தெரியல... இன்னும் அதே பழைய மெத்தடுதான்.... கொஞ்சம் கவனிங்க கலைஞரே... எப்பதான் மாறுமோ??


வில்லு-- லொள்ளு



கண்ணு கேட்ட பிறகு நமஸ்காரம் பண்ணி என்ன பிரயோஜனம்
"குருவி" செத்த பிறகு "வில்லு" விட்டு என்ன பிரயோஜனம்...


படிக்கிற பயபுள்ளைங்க ஓட்டு போடுங்கப்பா

Saturday, January 17, 2009

கில்லி- சிவசங்கர் மேனன் - கலைஞர்-திருமா--இலங்கை --அரசியலோ அரசியல்..

மாட்டு பொங்கல் அன்று உங்கள் சன் டிவியில் கில்லி படம் போட்டிருந்தாங்க... ம்ம்ம் நம்ம டாக்டர் விசய் இயல்பான நடிப்பு,அளவான வசனம்,நல்ல காமெடின்னு சும்மா கில்லி மாதிரி விர்ருன்னு நடிச்சிருந்தார்.... இந்த மாதிரி படம் இனிமே அவருக்கு கிடைக்குமா?. ஷாஜகான் படம் கொடுத்த படிப்பினைக்கு அப்புறம் விசய் படத்த முதல் நாள் பார்க்கும் பழக்கத்தை மறந்தேன்.. வில்லு படத்துல பல இடத்துல போக்கிரி படத்துல வசனம் பேசுர மாதிரியே இதுலயும் தாங்க முடியல சாமீஈஈஈஇ.........



இலங்கை பிரச்சினை பற்றி பேச பிரணாப் முகர்ஜி இந்தியா சார்பில் இலங்கை செல்வதாக இருந்தது. இடையில என்ன உள்குத்து நடந்துதோ என்னவோ சிவசங்கர் மேனன் இலங்கை சென்றிருக்கிறார்.சிவசங்கர் மேனனின் திறமைய பற்றி நான் ஒன்றும் சொலவதற்கில்லை....அவர் இலங்கைக்கு சென்றிருப்பது போரில் புலம்பெயர்ந்த தமிழர்களின் பாதுகாப்பு மற்றும் நிவாரணப்பொருட்கள் வழங்குவது, சார்க் மாநாடு குறித்து பேசுவதற்காகவேன்னு ஒரு பேச்சு அடிபடுகிறது.போர்நிறுத்தம் பற்றி பேசுவது என்பது சந்தேகமே.. ஒருவேளை நம்ம கலைஞரின் தொல்லை தாங்காமல் வேற வழியில்லாம இவர அனுப்பியிருப்பாங்களோ என்னவோ. அப்ப பிரணாப்புக்கு விசா கிடைக்கலையா இல்ல விமான டிக்கெட் கிடைக்கலையா? பாவம் அவர் என்ன செய்வார் பாகிஸ்தான் தீவிரவாதிகளை ஓப்ப்டைக்கவேண்டும் என்ற ஒரு விசயத்துல எப்படி பேசனுமுனு அவருக்கு தெரியல....


நேற்று நம்ம கலைஞர் 1956ல் இருந்தே உன்னிப்பா கவனிச்சு தீர்மானம் போட்டதாக கூறியுள்ளார். மேலும் இலங்கைப்பிரச்சினைக்காக இன்னும் சில நாட்களாவது ( இல்ல இன்னும் சில காலமா)பொறுத்திருக்கலாம் என்று திருவாய் மலர்ந்திருக்கிறார்..திருமா தன்னிச்சையாக உண்ணாவிரதத்தை கையில் எடுத்துள்ளதாகவும் சொல்லி இருக்கிறார்.இதுல இருந்து ஒன்று மட்டும் தெளிவாக தெரியுது.ஈழப்பிரச்சினையில் யார் யாரையும் முந்திவிடக்கூடாது என்ற ராசதந்திரம் நல்லாவே தெரியுது. கலைஞருக்கு ஊதுகுழலாக ராமதாசு "கலைஞரின் சொல்படி திருமா உண்ணாவிரதத்தை முடித்துக்கொள்ளவேண்டும் என்கிறார்....கலைஞர் சொல்லியிருக்கும் சில காலம் என்பது எதுவரை... லட்சக்கணக்கில் இருக்கும் ஈழத்தமிழர்கள் ஆயிரக்கணக்கில் குறையும் வரைக்குமா... அப்படியே இன்னும் சில வருடங்கள் பொறுத்திருந்தால் ஈழத்தில் தமிழ் இனம் முற்றிலுமாக ஒழிக்கப்பட்டு தானகவே இந்த ஈழப்பிரச்சினை முடிவுக்கு வந்துவிடும்...ஒரு வேளை இதுதான் கலைஞரின் எண்ணமோ.................மீண்டும் மீண்டும் ஒரு விசயம் மிக மிகத் தெளிவா தெரியுது அடுத்த கண்துடைப்பு நாடகம் ஈழப்பிரச்சினையில் மிக தெளிவாக அரங்கேறிக்கொண்டிருக்கிறது.

Tuesday, January 13, 2009

தைப்பொங்கல் --சில நினைவுகள் --- வில்லு???(((((((

நாளைக்கு பொங்கல் பண்டிகை. சென்னை போன்ற பெரிய நகரங்களில் பொங்கல் பண்டிகை ஒரு குக்கர் விசில் சத்தத்தில் ஆரம்பித்து தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் முடிந்துவிடும். எனக்கும் அப்படித்தான் சென்னை வந்த பிறகு.

" ஏங்க பொங்கல் வரப்போவுது ஒரு கரும்பு கூட இன்னும் வாங்கலையே". எங்க வீட்ல இருக்கும்போது என் அண்ணன் ஒரு வாரத்துக்கு முன்னாடியே வாங்கி கொடுத்திடுவார்"
"எனக்கு கூடத்தான் சின்ன வயசுல எங்க வீட்டில எல்லாம் வாங்கி கொடுப்பாங்க"..
"நேத்து வரைக்கும் பள்ளிக்கரணையில ஒரு கடையில கூட கரும்பு இல்லப்பா..லாரி ஸ்ட்ரைக் முடிஞ்சிருச்சி.. இன்னைக்கு வாங்கிட்டு வாரேன்"..இப்படியேத்தான் போவுது.


பொதுவாக கிராமங்களில் பொங்கல் பண்டிகைக்கான ஏற்பாடுகள் அதாவது சுண்ணாம்பு அடித்தல், வீட்டிலுள்ள பொருட்கள் அனைத்தையும் சுத்தப்படுத்துதல் என பல வேலைகளில் மக்கள் அனைவரும் 15நாட்களுக்கு முன்னரே ரொம்ப பிசி ஆகிடுவாங்க. சென்னையில் இந்த மாதிரி வேலைகளை பொங்கலுக்கு பார்ப்பது மிகவும் அரிது.பொங்கலுக்கு முந்தைய நாள் இரவு வீடு முழுவதும் அம்மா சுண்ணாம்பினால் கோலமிடுவதை அருகில் உட்கார்ந்து பார்க்கும் அழகே தனி...பொங்கல் அன்றைக்கு அதிகாலை 5 மணிக்கு எழுந்து ரொம்பக் கஷ்டப்பட்டு அப்பாவிடம் திட்டு வாங்கிகொண்டே ஆற்றில் குளிப்பது தனி சுகம்.

பொங்கல் வைப்பதற்கு வயலில் அறுவடைக்கு தயாராக இருக்கும் நெல்மணிகளை கொஞ்சம் எடுத்து வருவோம்.. புது அரிசிதான் பொங்கலுக்கு.. ஆனா இப்போது அரசாங்கம் கொடுக்கும் இலவசத்துக்கு காத்திருக்கிறோம்.. பொங்கல் வைப்பதற்கு பனைமர ஓலை அல்லது தென்னை மர ஓலை தான் எரிக்க பயன் படுத்துவோம்.. அந்த காலை குளிருக்கு இந்த சூடு நல்ல இருக்கும்.
 
காலையில் வெறும் சக்கரைப்பொங்கலையும், கரும்பையும் முடித்து விட்டு எப்படா சாப்பாடு ரெடியாகும் என்று ஆகிவிடும்.. எல்லா வகை காய்கறியையும் போட்டு வைக்கும் சாம்பார் வாசம் தெரு முனை வரைக்கும் மூக்கை துளைக்கும். மாட்டுப்பொங்கல் அன்றைக்கு விளையாட்டுப்போட்டிகள்தான் ஹைலைட் கபடி போட்டியில் ஜெயித்தது... ஒட்டப்பந்தயத்தில் இரண்டாவதா வந்தது.( மொத்தம் 5 பேர் ஓட ஆரம்பித்தோம் நான் கடைசிக்கு முன்னதாக இருந்தேன். ஆனால் 3பேர் எல்லைக்கோட்டை தொடாமல் திரும்ப வந்ததால் அப்பீட்டு)...



ஆங்.... நேத்து நம்ம குடுகுடுப்பையார் வில்லு விமரசனம் நல்ல எழுதியிருந்தார்...என்னுடைய நண்பன் அஜித்,விசய் படம் ரெண்டையும் முதல் நாள்லயே பாத்திடுவான்.. கடைசியா ஏகன் பாத்திட்டு மறுநாள் பேயறைஞ்ச மாதிரி வந்தான். அந்த அளவுக்கு படம் தாக்கிரிச்சி போல. குடுகுடுப்பையார் விமசர்சனத்தை படிச்சும் சொல் பேச்சுக் கேக்காம நேத்து போய் பாத்துட்டான்.


" என்ன மாமா படம் எப்படிடா இருக்கு"
" டேய் தியேட்டர் பக்கமே போயிடாத... குருவி படமே பரவாயில்லடா...நயந்தாரா மட்டும் ஓகே... தாங்கலடா சாமீ" வில்லு தாக்குதல் ஒரு வாரம் இருக்கும் போல... அதனால மக்களே......பத்து சூதானமா நடந்துக்குங்க..


SMS ல் வந்த கவிதை

அழகு சிலைகள் அனைத்தும்
அசையாமல் இருக்க
ஒரு சிலை மட்டும் நகர கண்டேன்
"அவள்" கோவிலை சுற்றி வரும் போது

டிஸ்கி: என்னோட சிறந்த மொக்கை படங்கள் வரிசையில் முதல் இடத்தை பிடித்த நாயகன் படம் கலைஞர் தொலைக்காட்சியிலும், இரண்டாம் இடத்தை பிடித்த பழனி சன் தொலைக்காட்சியிலும் பார்த்து மகிழ்ந்து பொங்கலை கொண்டாடுங்கள்

அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு & பொங்கல் வாழ்த்துக்கள்

Monday, January 12, 2009

இவ்வாரம் ஞாநியின் பார்வையில்-- இது விளையாட்டல்ல..

பிறந்த நாள் கொண்டாடும் ஒரு வயதுக் குழந்தைக்கு பரிசு வாங்குவதற்காக நேற்று புரசைவாக்கத்தில் ஒரு பொம்மைக் கடைக்குச் சென்றிருந்தேன். என் குழந்தைப் பருவத்தில் இந்த பொம்மைகளில் கால் பங்கு கூட பார்த்ததில்லை. அத்தனை வகைவகையான பொம்மைகள். குறிப்பாக வகைவகையான மிருக பொம்மைகள். பஞ்சும், வெல்வெட்டும் பிளாஸ்டிக்குமாக வெவ்வேறு அளவுகளில் இருந்த அவற்றை எல்லாமே வாங்கிக் கொண்டு போய் வைத்துக் கொண்டு குழந்தைகளும் நானுமாக விளையாட வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டது. நான் தேடிய உடலைச் சுற்றி மாட்டிக் கொள்ளக்கூடிய பெரிய அளவு குரங்கு பொம்மை மட்டும் கிடைக்கவில்லை.கடையில் ஓர் இஸ்லாமியரும் பொம்மை வாங்கிக் கொண்டிருந்தார். அவருடன் சுமார் நான்கு வயது மதிக்கக்கூடிய இரு சிறுவர்கள் இருந்தனர். இருவருக்கும் ஒலி எழுப்பக்கூடிய துப்பாக்கி பொம்மைகளை அவர் வாங்கிக் கொடுத்துக் கொண்டிருந்தார்.


`துப்பாக்கி பொம்மைகளை குழந்தைகளுக்குப் பழக்கப்படுத்த வேண்டா'மென்று அவரிடம் சொன்னேன். `வன்முறை உணர்ச்சியைக் குழந்தைகளிடம் தூண்டிவிடவேண்டாம் என்று விளக்கினேன்.அவருடைய பதில் வித்தியாசமாகவும் வியப்பாகவும் இருந்தது. `துப்பாக்கி பொம்மையினால் வன்முறை உணர்ச்சி பரவிவிடாது' என்றார். `அதைப் பரப்பியிருப்பது புஷ்' என்றார். புஷ்ஷை எதிர்ப்பது வேறு. நம் குழந்தைகளுக்கு வன்முறை உணர்வைத் தூண்டும் பொம்மைகளை நாம் வாங்கித்தரவேண்டாம் என்று கருத்து சொல்வது சக மனிதனாக என் கடமை என்று அவரிடம் சொல்லிவிட்டு மேற்கொண்டு தொடர்ந்து விவாதிக்காமல் நான் புறப்பட்டேன்.


கடைக்காரர் தாமாகவே என்னுடன் பேசினார். அவரும் ஓர் இஸ்லாமியர். (இந்துக் கடைகளிலேயே வாங்குங்கள் என்ற விஷமத்தனமான பிரசாரத்தை நான் எப்போதும் ஞாபகமாகப் புறக்கணிப்பது வழக்கம்) `துப்பாக்கி பொம்மைகள்தான் அதிகம் விற்கின்றன' என்று கடைக்காரர் சொன்னார். குறிப்பாக, ஒரு பிரபல சர்வதேச பொம்மை நிறுவனம் வெளியிட்டுள்ள ஆயிரம் ரூபாய் விலையுள்ள துப்பாக்கி பொம்மைக்கு பெரும் கிராக்கி இருப்பதாகவும் தன்னால் போதுமான அளவு வரவழைத்து விற்க முடியாமல் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். துப்பாக்கி பொம்மையை பலரும் விரும்பி வாங்குவது பற்றிய வருத்தம் அவர் பேச்சில் இருந்தது.


உலக அளவிலும் இந்திய அளவிலும் குழந்தைகள் நலனில் அக்கறை காட்டும் அமைப்புகள் பல இருந்த போதும், விளையாட்டு பொம்மைகள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், திரைப்படங்கள் போன்றவற்றைத் தயாரிப்பவர்களை முறையாகக் கட்டுப்படுத்த போதுமான சட்டங்களும் வழிமுறைகளும் இன்னமும் இல்லை. துப்பாக்கி பொம்மைகள் மட்டுமல்ல, `டாம் அண்ட் ஜெர்ரி' காமிக்சின் வன்முறை பற்றியெல்லாம் நம் ஆட்சியாளர்களுக்கு எந்தக் கொள்கைப் பார்வையும் கிடையாது. புதிய அரசியல்வாதிகள் கூட இவற்றில் அக்கறை காட்டுவது இல்லை.


புஷ், அமெரிக்கா ஆகியோர் உலகில் வன்முறையைப் பரப்புவது, நான் என் வீட்டுக் குழந்தைகளிடம் வன்முறையைப் பரப்புவதற்கான நியாயமாக ஒருபோதும் ஆக முடியாது. இன்னும் சொல்லப்போனால், ஒவ்வொரு முறை அமெரிக்காவோ இஸ்ரேலோ வன்முறையை அவிழ்த்துவிட்டாலும், இந்தியாவிலும் பாகிஸ்தானிலும் இருக்கும் வெறியர்கள் யுத்தம் சீக்கிரமே வந்துவிடும் என்ற பீதியைக் கிளப்பும்போதும், இப்படிப்பட்ட வன்முறைகளை ஏற்க மறுக்கும் மன வலிமையை நம் குழந்தைகளுக்கு ஊட்டுவது எப்படி என்று அதிகம் யோசிக்க வேண்டியிருக்கிறது.


கல்வி, அத்துடன் சார்ந்த சந்தோஷமான விளையாட்டுகள் இவைதான் நம் குழந்தைகளை ஆரோக்கியமான மன நிலை உடையவர்களாக வளர்த்தெடுக்கக்கூடியவை என்பதில் சந்தேகம் இல்லை. நிறைய வாசிக்க வாசிக்க, நம் குழந்தைகள் படிப்பின் மகிழ்ச்சியில் திளைக்க முடியும். சுவையான கதைகளைத் தொடர்ந்து படிக்கும் மனம், மனித உறவுகளை ஆரோக்கியமானதாக ஆக்குவதற்கு ஏற்ற பக்குவத்தை அடையும்.


போர்களிலும் வன்முறையிலும் படிப்பறிவற்றவர்களை அதிகம் ஈடுபடுத்தி பலி கொடுக்கும் மூளைகள் மெத்தப் படித்த மூளைகள்தான். அதே சமயம் தேசபக்தி பொங்க, உயிர்த்தியாகம் செய்த ஜவான்களுக்காக மெழுகுவர்த்தி ஊர்வலத்தில் வரும் படித்த வர்க்கத்தினரிடம் ஊர்வல முடிவில் அவர்கள் வீட்டுப் பிள்ளைகளை ராணுவத்தில் சேர்ப்பதற்கான விண்ணப்ப பாரங்களை நீட்டினால் போதும்; ஊர்வலம் எந்த லத்தி சார்ஜும் இல்லாமல் கலைந்துவிடும். படிப்பின் ருசியை அறிய அறிய, அமைதியான வாழ்க்கைக்கான ஆவல் அதிகரிக்கும். படித்தவர்களை கடும் மூளைச்சலவை செய்யாமல் வன்முறையில் பயன்படுத்த முடியாது. எனவே மேலும் மேலும் சமூகத்தில் படிப்பை, வாசிப்பு ரசனையைத் தூண்டும் அத்தனையும் நம்மால் ஆதரிக்கப்பட வேண்டும்.


இந்த மாதம் 8 முதல் 18 வரை சென்னையில் நடக்க இருக்கும் 32வது புத்தகக் கண்காட்சி அப்படிப்பட்ட ஒரு நிகழ்ச்சி. இதுவரையிலும் ஒரு வருடம் கூடத் தவறாமல் அதில் கலந்து கொண்டிருக்கிறேன். ஒரு வருடம் என்னுடைய அனல் பறக்கும் வசனங்கள் நிறைந்த நாடக நூலைக் கண்காட்சியில் கொண்டு வந்து வைத்த சில மணி நேரங்களில், கண்காட்சி தீப்பிடித்துக் கொண்டு விட்டது. ஒவ்வொரு வருடமும் சென்னைக் கண்காட்சியில் கோடிக்கணக்கான ரூபாய்க்கு நூல்கள் விற்பனையாகின்றன. இந்திய புத்தகத்துறை வரலாற்றில் முதல்‌முறையாக இப்போதெல்லாம் சில தமிழ் எழுத்தாளர்கள் ஒரே நேரத்தில் பத்துப் பதினைந்து நூல்களை வெளியிடும் அதிசயம் நடக்கிறது.ஆனாலும் அதிகமாக விற்கும் புத்தகங்கள் சமையல், ஜோதிடம், வாஸ்து, சுய முன்னேற்றம் மட்டும்தான் என்பது ஆரோக்கியமான நிலை அல்ல.




நமக்கு வரலாறு தெரிய வேண்டும். அப்போதுதான் நிகழ்காலம் புரியும். போரில் சிக்கித் துயரத்தின் உச்சத்தில் தவிக்கும் இலங்கைத் தமிழருக்காக இங்கே உணர்ச்சிவசப்படும் ஏராளமானவர்களுக்கு அந்தத் துயரத்தின் 60 வருட கால அரசியல் வரலாறு தெரியாது. இட ஒதுக்கீட்டில் பயன் பெற்று கல்வியும் வேலையும் அடைய முடிந்த லட்சக் கணக்கான தமிழ் இளைஞர்களுக்கு, பெரியாரின் முழு வாழ்க்கைக் கதையே தெரியாது. அரசியல், சமூக நீதி மட்டுமல்ல, தமிழ் சினிமாவின் அசல் வரலாறு கூட தெரியாததால்தான், எதையெதையோ காவியம் என்று இன்று எழுதுகிறவர்கள் கூட சொல்லிவிடுகிறார்கள்.நம் இன்றைய வாழ்க்கையின் அரசியல், சினிமா, பொருளாதாரம் அவ்வளவு ஏன் நம் குடும்ப வாழ்க்கையைக் கூடப் புரிந்துகொள்ள, நாம் ஏராளமாகப் படிக்க வேண்டும். படிக்கப் படிக்கத் தீராத பக்கங்கள் நமக்காகக் காத்திருக்கின்றன.


மரணத்தை நோக்கி அவரை அழைத்துச் சென்ற புற்று நோய்க்காக அறுவை சிகிச்சைக்கு ஆபரேஷன் தியேட்டருக்கு அழைக்கப்பட்டபோது கூட, அண்ணா தன் கையில் இருந்த பாதி படித்த புத்தகத்தை முழுக்கப் படித்து முடித்துவிட்டு வந்துவிடுகிறேன் என்று டாக்டரிடம் அனுமதி கேட்டார். அதுதான் வாசிப்பின் ரசனை.துப்பாக்கி பொம்மைகள் ஒருபோதும் அதை ஈடு செய்ய முடியாது. நம் குழந்தைகள் கையில் எதைக் கொடுக்கப் போகிறோம்?

நன்றி குமுதம்.

Tuesday, January 6, 2009

ரிலையன்ஸ்பிரஷும் நானும்.........

ராமாபுரத்திலிருந்து பள்ளிக்கரணை வந்து 6 மாதம் ஆகிறது. ராமாபுரத்தில் இருந்த வரைக்கும் மளிகை சாமான் வாங்குவதில் எந்த பிரச்சினையும் இல்லை. அங்க திருவள்ளுவர் சாலையில் உள்ள அய்யனார் சூப்பர் மார்க்கெட்டில் எல்லா சாமான்களும் முக்கியமா மளிகை சாமான்கள் நல்ல குறைந்த விலையிலும் தரமானதாவும் இருக்கும். ஒன்னும் பிரச்சினையில்லாம இருந்தது. இன்னும் பள்ளிக்கரணையில ஒரு கடை கூட செட் ஆகல... எல்லா கடையிலுமே விலை ஜாஸ்தியா இருக்கு. மேடவாக்கம் பஸ் ஸ்டாப் அருகில் உள்ள முருகன் ஸ்டோரில் இரண்டு மாதங்கள் மளிகை வாங்கினேன். அதுலயும் பிரச்சினை வந்தது. லிஸ்ட் கொடுத்திட்டு வந்திடனும் டோர் டெலிவரி பண்ணிடுவாங்க. ஆனா ஒரு சில பொருட்கள் நாம கேட்ட கம்பெனி அயிட்டம் இருக்காது. பக்கத்துல புட் வேல்டு சூப்பர் மார்க்கெட் இருக்குதுன்னு ஒரு நாள் தெரியாத்தனமா உள்ள நுழைஞ்சிட்டேன்.உள்ள போனா மளிகை சாமான்களைவிட மற்ற பொருட்கள் தான் அதிகம் இருந்தது. சரி அப்படியே வாங்கலாம்னு பொருட்களை பாத்தா விலை இரண்டு மடங்கு ஜாஸ்தி.. அப்படியே ஒன் ஸ்டெப் பேக்..........




தி.நகர் சரவனாஸ்டோரில் மளிகை பொருட்கள் வாங்கலாம்னு போனால் அங்கேயும் புட் வேல்டு கதைதான்... ஆனா சரியான விலை. பொருட்கள் கம்மி. எதுக்கு தி.நகர் அலையனும் எங்க தெருவில் உள்ள  கடையில் 1 மாதம் சாமான் வாங்கினேன். அந்த மாசம் எனக்கு செலவு கிட்டதட்ட 500 ரூபாய் அதிகமாகியது... உதாரணத்துக்கு பள்ளிக்கரணை மெயின் ரோட்டில் உள்ள கடையில் ஒரு பினாயில் பாட்டில் விலை 15ரூபாய் என்றால் எங்க தெருவில் உள்ள  கடையில் அதே பினாயில் விலை 25ரூபாய்....இந்த ஒரு சாமானே இப்படினா மத்த விலையெல்லாம்!!!!!!!!!!!!!!


மீண்டும் தி.நகர் இந்த வாட்டி சரவணா மளிகை ஸ்டோரில் கடந்த 3 மாதங்களாக வாங்கிகொண்டிருக்கிறேன். இதுக்காக தி.நகர் போகும்பொழுது பிளஸ்டிக் சாமான் எடுக்கனும், அது எடுக்கனும், இது எடுக்கனும்னு சொல்லி என்னோட பட்ஜெட் மறுபடியும் எகிற ஆரம்பமாச்சு. என்னடா இது மதுரைக்கு வந்த சோதனை இருக்கு... என்னுடைய தம்பி சொன்னான்"ரிலையன்ஸ் பிரெஷில் எல்லாம் விலை கம்மியா இருக்குடான்னு.... என் வீட்டுலயும் ரிலையன்ஸ் பிரெஷ்க்கு போகனும் அப்படினு.....


கடந்த ஞாயிறு காலை ரிலையன்ஸ்க்கு போனேன்.. உள்ள நுழைவதற்கு முன்னால் தங்கமணியிடம் எல்லா பொருட்களின் விலையை பாத்துட்டுதான் வாங்கனும் சொல்லித்தான் உள்ள போனேன். காய்கறிகலையெல்லாம் நல்லாவே பேக் பண்ணி வச்சிருந்தாங்க. கூட்டத்துக்கும் குறைவில்லை...ஒரு ஆள் 2000ரூபாய்க்கு பொருட்கள் வாங்கினார் அப்படி என்ன வாங்கினார்னு பாத்தா கெலாக்ஸ்,லேய்ஸ், ஓட்ச் அப்படின்னு வாயில நுழையா பெயர் கொண்ட எல்லாத்தையும் வாங்கி போட்டிருந்தார்...... அங்க ஆப்பிள் மட்டும்தான் நல்லா இருந்திச்சி.. மத்ததெல்லாம்


உதாரணத்திற்கு 1லிட்டர் கோல்டுவின்னர் விலை ரூபாய் 71
இதே கோல்டுவின்னர் விலை சரவணா மளிகை ஸ்டோரில் விலை ரூபாய் 65..


நீங்களே சொல்லுங்க...............????????????????

டிஸ்கி: நான் பக்கா மிடில் கிளாஸ்ங்க......

Monday, January 5, 2009

இவ்வாரம் ஞாநியின் பார்வையில்--- மனம் விரும்புதே...

ஒவ்வொரு புது வருடத்தின்போதும் தீர்மானங்கள் எடுப்பதும் அவற்றை நிறைவேற்றாமல் இருப்பதும் நம் வழக்கம்.வயதுக்கேற்ப தீர்மானங்கள் மாறும். இந்த வருடம் தவறாமல் டைரி எழுதவேண்டும்; இந்த வருடத்திலிருந்து குடிப்பதை விட்டு விட வேண்டும். இனிமேல் அசைவம் சாப்பிடுவதில்லை. இனிமேல் வீட்டில் எரிந்து விழுவதில்லை... இப்படி ஒவ்வொரு நபரிடமும் தீர்மானங்களைத் திரட்டினால், அது பெரும் ஆராய்ச்சிக்குரிய சுவையான தொகுப்பாகக் கூட அமையும்.


இந்தத் தீர்மானங்கள் அத்தனைக்கும் பின்னால் ஓர் எளிமையான உண்மை இருக்கிறது. அது என்ன? ஒவ்வொரு மனிதனும் இந்த வருடம் தனக்கு தீங்காக இருந்த பழக்கங்களை விட்டுவிட்டு, நல்ல பழக்கங்களை அடுத்த வருடத்தில் தொடங்க வேண்டும் என்று விரும்புகிறான்.அதாவது சாதாரண மனிதன் தன்னைத் திருத்திக் கொண்டு மேம்பட விரும்புகிறான். தன்னைத்தானே ஏதோ ஒரு வடிவத்தில் சுயவிமர்சனம் செய்து கொள்கிறான்.


ஆனால் நினைத்தபடி எல்லாவற்றையும் மாற்றிக் கொள்ள முடியாமற் போய்விடுகிறது. பைபிளில் எனக்குப் பிடித்த ஒரு வாசகம், இதைப்பற்றிச் சொல்கிறது. The spirit is willing but the flesh is weak. மறு தினம் தான் காட்டிக் கொடுக்கப்பட்டு கைதாகி சித்ரவதைக்குள்ளாவோம் என்பது ஏசுவுக்குத் தெரிந்திருக்கிறது. அந்த நிலையில் முன்னிரவு முழுவதும் இறைவனைத் தொழுவோம் என்று சீடர்களை அழைத்துக் கொண்டு கெத்சமனே தோட்டத்துக்கு செல்கிறார். இரவு வளர, வளர, ஒவ்வொரு சீடராக தூங்கிவிடுகிறார்கள். அவர்களுக்கு விழித்திருந்து தொழ மனதில் விருப்பம்தான்; ஆனால் உடல் ஒத்துழைக்கவில்லை என்ற பொருளில் ஏசு சொன்னதாக இந்த வாக்கியம் விளக்கப்படுகிறது. எனக்கென்னவோ ஏசு அதைத் தன்னைப் பற்றியே சொல்லிக் கொண்டதாகத்தான் தோன்றுகிறது. மறு நாள் சந்திக்கப்போகும் சிலுவை சித்ரவதைக்கு அவர் சித்தம் தயாராக இருக்கிறது. உடல் இன்னமும் அஞ்சுகிறது. தன்னைத் தயார்படுத்திக் கொள்ளவே அவர் அன்றிரவு முழுவதும் இறைவனுடன் பிரார்த்தனை வழியே உரையாடுகிறார்

தான் சரி என்று நம்பும் உண்மைக்காக எந்த துன்பத்தையும் சந்திக்க ஒருவர் மனதில் தயாராக இருக்கலாம். அவர் உடலும் தயாராக இருக்க வேண்டும் என்பது அடுத்த கட்ட சுய தயாரிப்பு. கொள்கையில் பிடிப்பு இருக்கும் ஒவ்வொருவரும் ஏதோ ஒரு கட்டத்தில் வாழ்க்கையில் சந்திக்கும் சவால் இது. பெரும்பாலான மக்கள் இதற்குத் தயாராக இல்லாத நிலையில் தான் வாழ்க்கையில் சமரசங்களைச் செய்கிறார்கள். ரயிலில், தெருவில், ஓட்டலில், டீக்கடையில் என்னை சந்திக்கும் பல வாசகர்கள் `எப்பிடி தைரியமா எழுதறீங்க ?' என்று ரகசியக் குரலில் கேட்கும்போது, அதன் பின்னே இருப்பது, விமர்சனங்களின் விளைவாக ஏற்படக்கூடிய துன்பங்களை எப்படி சந்திப்பது என்பது பற்றிய பொதுக் கவலைதான். அந்தக் கவலை இல்லையென்றால் அவர்களும் விமர்சிக்கத் தயாராகத்தான் இருக்கிறார்கள். The spirit is willing but the flesh is weak.


ஒவ்வொரு புது வருடத்திலும் தசையின் பலவீனத்தைக் கடக்கும் முயற்சியில், சாமான்ய மக்கள் இந்த வருடம் இதைச் செய்வேன் என்று சுயத் தீர்மானங்கள் போடுகிறர்கள்.


ஆனால் நம் சமூகத்தின் மிக பலமான சக்திகளாக இருக்கிற அரசியல், அரசாங்கம், சினிமா, ஊடகங்கள், பத்திரிகைகள், தொழில்கள் இவற்றில் இருக்கிற முக்கியமான புள்ளிகள் யாரும் இப்படி புது வருடத் தீர்மானம் போடுவதே இல்லை. போன வருடம் ரொம்ப அராஜகம் செய்துவிட்டேன். இந்த வருடம் கொஞ்சம் குறைத்துக் கொள்வேன்; போன வருடம் ஓவராக லஞ்சம் வாங்கினேன். இந்த வருடம் கம்மியாக வாங்குவேன்; போன வருடம் ஆபாசமாகவும் அபத்தமாகவும் படங்கள் செய்தேன். இந்த வருடம் கொஞ்சம் நல்ல படங்கள் செய்வேன்; போன வருடம் நம் பத்திரிகை முழுக்க ஆபாசக் களஞ்சியமாக இருந்தது; இந்த வருடம் கொஞ்சம் அடக்கி வாசிப்பேன்; போன வருடம் அபத்தமான சீரியலும் குலுக்கல் டான்சுமாக சேனலை ஓட்டிவிட்டேன். இந்த வருடம் கொஞ்சம் நல்ல ப்ரொகிராம் செய்வேன்.......என்றெல்லாம் துளிக் கூட சுயவிமர்சனப் புது வருடத் தீர்மானங்கள் இந்த அயோக்கியர்கள் செய்வதே இல்லை.


இரண்டு வருடங்களாக நானும் ஒவ்வொரு புத்தாண்டின்போதும் ஒரு தீர்மானத்தை யோசிக்கிறேன். இது என்னைத் திருத்திக் கொண்டு மேம்படுவது சம்பந்தப்பட்டது அல்ல. முழுக்க முழுக்க விரக்தியால் எடுக்கும் தீர்மானம். இனி அரசியல் விமர்சனமே எழுதுவதில்லை என்று சென்ற டிசம்பரில் யோசிக்கத் தொடங்கினேன். அதற்குக் காரணம் என் கட்டுரைகளை எல்லாம் தொகுத்து புத்தகங்களாக வெளியிடுவதற்காக, முந்தைய நான்கு வருடக் கட்டுரைகளையும் ஒரே மூச்சில் படித்ததுதான். அவற்றைப் படிக்கப் படிக்க, தமிழகத்தின் பிரதான அரசியல்வாதிகளைப் பற்றிப் புதிதாக சொல்ல எதுவும் மீதியில்லை என்று தோன்றியது. இவர்களுடைய அயோக்கியத்தனங்களின் அந்தந்த வாரத்து நிகழ்ச்சிகளின் பரிமாணங்களை மட்டுமே தொடர்ந்து எழுத முடியுமே தவிர, அடிப்படையாக இவர்களைப் பற்றிப் புதிதாக சொல்ல எதுவும் இல்லை.


விரக்தியை அதிகப்படுத்திய இன்னொரு காரணம், இப்படி தொடர்ந்து எழுதியும், இவர்கள் எதையும் திருத்திக் கொள்வதாக இல்லை என்பதும் என் கட்டுரைகளிலிருந்தே தெரிய வருகிறது. பழைய தவறுகளையே இன்னும் பெரிசு பெரிசாக தொடர்ந்து செய்கிறார்களே ஒழிய துளியும் வெட்கம், கூச்சம், சூடு, சுரணை போன்ற அடிப்படை மனிதப் பண்புகள் எதுவும் இவர்களிடம் காணப்படவில்லை. எரிகிற கொள்ளியில் எந்தக் கொள்ளி நல்ல கொள்ளி என்ற ஆராய்ச்சியை நோக்கித்தான் நாம் தள்ளப்படுகிறோம். உடனடி உதாரணங்களாகவே சிலவற்றைச் சொல்லலாம். மின்வெட்டால் சிறு தொழில்கள் எல்லாம் மூடப்படும் வேளையில் திருச்சி உறையூரில் ஸ்டாலின் கூட்டத்துக்காக பல கிலோமீட்டர் தூரத்துக்கு அருவருப்பாக மின் அலங்காரங்கள் செய்திருந்ததைக் குறிப்பிட்டு திருந்தவே மாட்டிங்களா என்று ஒரு வாரம் முன்னால் ஓ பக்கங்களில் கேட்டிருந்தேன். இந்த வாரம் சென்னை வேளச்சேரியில், முதலமைச்சர் அடுத்த வாரம் வரப்போகும் நிகழ்ச்சிக்காக சாலைகளில் செய்துவரும் வரவேற்பு ஏற்பாடுகள் போக்குவரத்தையே நிலைகுலைய வைத்து, அந்தப் பகுதி மக்கள் குமுறிக் கொண்டிருக்கிறார்கள். இதற்கு அர்த்தம் என்ன? திருந்த மாட்டோம், போங்கடா என்பதுதானே?


முதலமைச்சரின் புது வருடக் கனவு, கூவத்தின் பளிங்கு போன்ற நீரில் அவர் வீட்டுப் பிள்ளைகள் குளிப்பது என்று மேம்பாலத் திறப்பு விழாவில் சொல்லியிருக்கிறார். இதே கனவை அவர் 1972ல் நான் கல்லூரியில் படிக்கும்போதும் சொன்னார். அப்போது அவருடைய ஆட்சியில் அதற்கு பணம் ஒதுக்கிச் செலவும் செய்தார்கள். இப்போது என் மகனும் கல்லூரிப் படிப்பை முடித்துவிட்டான். முதலமைச்சர் கலைஞரும் ஐந்து முறை முதலமைச்சராக இருந்து சாதனை செய்துவிட்டார். கூவம் இன்னும் நாறிக் கொண்டிருக்கிறது. 37 வருடங்களுக்கு முன்னால் கூவம் சீரமைப்பு திட்டத்தைப் போட்டவர் ஏன் அதை அப்போதே சரியாக நிறைவேற்றவில்லை என்ற காரணத்தை, இப்போது இன்னொரு திட்டம் போடும்போது சொல்ல வேண்டாமா? சொல்ல மாட்டார். நம் மக்களின் மறதி, அலட்சியம், விமர்சிப்பதற்கான பயம் இவையெல்லாம்தான் அரசியல்வாதிகளின் முதலீடுகள்.


கலைஞருக்கு மாற்றாக தன்னை முன் நிறுத்தும் எதிர்க் கட்சித்தலைவர் ஜெயலலிதாவின் உச்சகட்ட அரசியல் சாணக்யத்தனம் என்ன தெரியுமா? திருமங்கலம் தொகுதியின் தி.மு.க. வேட்பாளரின் மாமியார், மாமனார், கொழுந்தன் எல்லாரையும் அ.தி.மு.க.வில் சேரச் செய்வதுதான். இதுவா அரசியல்?தமிழ்நாட்டில் தி.மு.க.வும் அ.தி.மு.க.வும் மாறி மாறி நடத்தி வந்திருப்பதே இந்தக் குடும்ப அரசியல்தான். அரசியலில் இருக்கும் பல குடும்பங்களில் சிலர் தி.மு.க.விலும் சிலர் அ.தி.மு.க.விலும் இருக்கிறார்கள். எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் குடும்பத்துக்கு லாபம். இரு கட்சிகளும் மேல் மட்டத்திலிருந்து கீழ் வரை, குடும்பங்களின் வாரிசு அரசியல்தான் நடக்கிறது.


ஒரு ஆர்.டி.ஓ. லஞ்ச வழக்கில் கைதானால் அவரிடம் கோடிக்கணக்கில் சொத்து, பிடிபடுகிற ஒரு போலீஸ் இன்ஸ்பெக்டரிடம் கோடிக்கணக்கில் சொத்து. அரசாங்கத்தின் கீழ்மட்ட, நடுமட்ட ஊழியர்களிடமே இவ்வளவு சொத்து குவிகிறதென்றால், அரசியல்வாதிகள், அமைச்சர்கள் எவ்வளவு கொள்ளையடித்திருப்பார்கள் என்று யூகிக்கலாம்.
இன்று தமிழ்நாட்டின் எந்தப் பிரச்னையை எடுத்துக் கொண்டாலும் அதற்கு வேராக இருப்பது லஞ்சம் ஊழல் அராஜகம்தான். நில ஆக்கிரமிப்பு, மணல் கொள்ளை, ஆற்று நீர் மாசுபடுதல், சுற்றுச் சூழல் பாதிப்பு எல்லாவற்றுக்கும் பின்னால் இருப்பது லஞ்சம் ஊழல் அராஜக அரசியல். இதை 1969 முதல் 2009 வரை செய்துவந்திருப்பவர்கள் தி.மு.க., அ.இ.அ.தி.மு.க. இரு கட்சிகளும்தான். கருணாநிதி, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா மூவரும்தான் இதற்காக குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப்பட வேண்டியவர்கள். புதிதாக உருவாகி வந்த கட்சிகள் இயக்கங்கள் எதுவுமே தங்களுக்கு மாற்றாக உருவாகாதபடி, அவற்றையும் தங்கள் வழியில் அழைத்துச் சென்ற குற்றமும் இவர்களுடையதே.


இப்படிப்பட்ட சூழ்நிலையில் எதற்காக நான் தொடர்ந்து அரசியல் விமர்சனம் எழுத வேண்டும் என்ற விரக்தியில் சென்ற ஜனவரியில் எழுதுவதை நிறுத்த முடிவு செய்தேன். அப்போதுதான், எனக்கெதிரான அவதூறுப் பிரசாரங்கள். கண்டனக் கூட்டங்கள். அரசியல் நிர்ப்பந்தங்கள் எல்லாம் நிகழ்ந்தன. விகடனில் என் தொடர் நிறுத்தப்பட்டது. நானாக நிறுத்துவேனே தவிர, இன்னொருவர் நிர்ப்பந்தத்தால் என் குரல் ஒலிப்பது நிற்காது என்று நிரூபிப்பதற்காகவே தொடர்ந்து குமுதத்தில் எழுதத் தொடங்கினேன். ஆனால் என் விரக்திக்கான காரணங்கள் அப்படியே உள்ளன.2009_ல் தமிழக அரசியலில் தி.மு.க.வும் அ.தி.மு.க.வும் திருக்குவளை குடும்பமும் மன்னார்குடி குடும்பமும் பலவீனப்படுத்தப்பட்டு அவற்றை அண்டிப் பிழைக்கும் அரசியல் கட்சிகளும் பலவீனப்படுத்தப்பட்டு, முற்றிலும் புதிய நேர்மையான அரசியல் சக்திகள் இளைய தலைமுறையிலிருந்து முகிழ்த்தெழ வேண்டும் என்பதுதான் என் கனவு. இதை நிறைவேற்றப் போகிற பொதுமக்கள், வாசகர்கள், இளைஞர்கள் எங்கே இருக்கிறீர்கள்? தயவுசெய்து வெளியே வந்து என் மனச் சோர்வை நீக்குங்கள். அதுவே நீங்கள் எனக்குத் தரும் புத்தாண்டுப் பரிசு. The spirit must be willing and the flesh should not be weak..



இந்த வருட பூச்செண்டு

மும்பையில் பயங்கரவாதி கசாபை, தன்வசம் எந்த ஆயுதமும் இல்லாதபோதும் துணிச்சலாகப் பிடித்து தன் உயிரையே கடமைக்காகக் கொடுத்த காவலர் துக்காராமுக்கு இந்த வருடப் பூச்செண்டு.


இந்த வருட குட்டு.

பொறுப்புள்ள எதிர்க்கட்சித் தலைவராக எதுவுமே செய்யாமல் அரசியல் நடத்திய ஜெயலலிதாவுக்கு இந்த வருடக் குட்டு.


இந்த வருட பரிதாப விருது.

சன் டி.வி.யிலிருந்து கலைஞர் டி.வி.க்கு சென்ற ஊழியர்கள் அனைவருக்கும் இ.வ.பரிதாப விருது.