Monday, December 22, 2008

இவ்வாரம் ஞாநியின் பார்வையில்-- மரண அரசியல்

பல வருடங்கள் முன்பு ஹிந்து பேப்பரில் ஒரு நாள் முழுப் பக்கமும் ஒரு பெரிய புகைப்படத்துடன் வந்திருந்த ஒரு விளம்பரத்தைப் பார்த்துவிட்டு என் மகன் அது என்ன என்று கேட்டான்.அப்போது அவனுக்கு பத்து வயது. அது, இறந்துவிட்ட ஒரு தொழிலதிபருக்கு மரண அஞ்சலி விளம்பரம் என்றும் அதற்கு எத்தனை லட்சம் ரூபாய்கள் செலவாகிறது என்றும் அவனுக்கு விளக்கினேன். ``அப்பா, நீ செத்துப் போகும்போது நானும் உனக்காக இப்படி ஒரு முழுப் பக்கம் விளம்பரம் கொடுப்பேன்'' என்று வெள்ளந்தியாக தன் அன்பை வெளிப்படுத்தினான் அவன்.


பெரும் பத்திரிகைகளில் வெளியிடப்படும் மரண அஞ்சலி விளம்பரங்கள், கொஞ்சம் அன்பையும் நிறைய பணபலத்தையும் அதிகாரத்தையும் வெளிப்படுத்துபவை. அண்மையில் மும்பையில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்குப் பின்னர், நட்சத்திர ஓட்டல்களில் கொல்லப்பட்ட வர்த்தகத்துறைப் பிரமுகர்களுக்கான அஞ்சலி விளம்பரங்கள் பல நாட்கள் மும்பை ஆங்கில ஏடுகளை ஆக்கிரமித்தன. ரயிலடியில் இறந்தவர்களுக்கு அஞ்சலி விளம்பரம் தரும் வசதியுள்ள உறவினர்கள், நண்பர்கள் குறைவு. அநேகமாக அவரவர் பகுதிகளில் 30க்கு 20 கறுப்பு சுவரொட்டிகள் சிலருக்குக் கிட்டியிருக்கலாம்.


பயங்கரவாதிகளுடன் மோதி இறந்த கமாண்டோ வீரர்கள், போலீஸ் அதிகாரிகள், கீழ் நிலைக் காவலர்கள் ஆகியோரின் உயிர்த் தியாகத்தைப் போற்றி எந்த நட்சத்திர ஓட்டலும், எந்த பெரும் தொழில் நிறுவனமும் பெரிய அஞ்சலி விளம்பரங்களை வெளியிடவில்லை. அவர்களுக்கெல்லாம் மும்பை நகரில் அஞ்சலிப் பலகைகளை வைத்தது, மீடியாவால் கடுமையாக திட்டப்பட்ட அரசியல்வாதிகள்தான். சரத்பவாரின் காங்கிரஸ், சிவசேனை, ராஜ் தாக்கரேவின் எம்.என்.எஸ் ஆகியவை பல சாலைச் சந்திப்புகளில் இறந்த போலீஸாரின் படங்களுடன் அஞ்சலிப் பலகைகள் வைத்தன. அவற்றிலும், பிடிபட்டிருக்கும் ஒரே ஒரு தீவிரவாதியைப் பிடிக்க உதவியாக, அவனுடைய துப்பாக்கிக் குழலையே கையில் பிடித்து குண்டுகளைத் தன் மார்பில் வாங்கி இறந்த சப்இன்ஸ்பெக்டர் துக்காராமின் படம், மிகச் சிலவற்றில்தான் இடம் பெற்றது.


மரண விளம்பரங்கள் ஒருவரின் பணபலத்தை மட்டுமே பொறுத்தவை. அதனால்தான், மறைந்த நண்பர் தினமணி ஆசிரியர் இராம.திரு.சம்பந்தம் தன் பொறுப்பில் இதழ் வந்த சமயத்தில் யாருடைய மரணச் செய்தியையும் வெளியிடலாம் என்ற ஒரு நடைமுறையைச் செயல்படுத்தினார். இறந்தவர் பிரபலமாகவோ, பிரபலத்தின் உறவாகவோ நட்பாகவோ இருக்க வேண்டிய அவசியம் இல்லை. அப்படி எண்ணற்ற சாமான்யர்களின் மரணச் செய்திகளை அவர் வெளியிட்டிருக்கிறார்.மரணச் செய்தியை வெளியிடுவதில் ஊடகங்களுக்கு, பத்திரிகைகளுக்கு ஓர் அரசியல் இருக்கிறது என்பதை யாரும் மறுக்க முடியாது. வெளியிடுவது, வெளியிடாமலே இருப்பது, போகிற போக்கில் தெரிவிப்பது, விரிவாக பெரிய படங்களுடன் வெளியிடுவது, விமர்சனங்களுடன் வெளியிடுவது என்று பலவிதங்களில் பிரபலங்களின் மரணங்களை ஊடகங்கள் அணுகுகின்றன.


எல்லா பத்திரிகைகளும், ஊடகங்களும் ஜாதி, மத, வர்க்க, வணிக அரசியல் சார்ந்துதான் பிறப்பு முதல் மரணம் வரை செய்தி வெளியிடுகின்றன.
இறந்த ஒரு பிரபலத்தைப் பற்றி மிக இழிவாக மரணச் செய்தி வெளியிடப்பட்டதை முதல்முறையாக இப்போதுதான் பார்த்தேன். முன்னாள் பிரதமர் வி.பி.சிங் மரணமடைந்த செய்தி தொலைக்காட்சி ஊடகங்களில் ஏறத்தாழ இருட்டடிப்பே செய்யப்பட்டுவிட்டது என்று சொல்லலாம். என்ன செய்வது, மும்பை பயங்கரவாத தாக்குதல் சமயத்தில் செத்துப் போனது அவருடைய தப்புதானே. அது கூட ஒரு சாக்குதான்.தாக்குதலுக்கு நடுவே கிரிக்கெட் செய்தி விரிவாகவே காட்டப்படத்தான் செய்தது.


இந்தியா டுடே இதழில் அதன் மூத்த பத்திரிகையாளர் எஸ்.பிரசன்னராஜன், வி.பி.சிங் பற்றி எழுதியது மிகவும் ரசக்குறைவானது. `இந்திய சமூகத்தையே சீர்குலைத்தவன் செத்து ஒழிந்தான், அப்பாடா!' என்பதுதான் அந்த சிறு கட்டுரையின் தொனி. வி.பி.சிங்கை இப்போது தகனம் செய்த தீ நமக்கு, அவர் கொண்டு வந்த மண்டல் கமிஷன் இட ஒதுக்கீட்டுக்கு எதிராகத் தீக்குளித்த (போதும் செத்து தியாகியாக முடியாமற்போன) ராஜீவ் கோஸ்வாமியைச் சுட்ட தீயை நினைவுபடுத்த வேண்டும் என்று வலிந்து எழுதுகிறார் பிரசன்னராஜன். ஆங்கில மொழியின் நயங்களைப் பயன்படுத்தி வி.பி.சிங்கை பிரசன்னராஜன் செய்த நக்கல், நையாண்டியெல்லாம், அதே இதழின் தமிழ் மொழிபெயர்ப்பில் நயங்களையும் இழந்து, அப்பட்டமான குரோதமாகப் பல்லிளிக்கிறது. இந்திய சமூகத்தை வி.பி.சிங் பிளவுபடுத்தினார் என்பது எவ்வளவு பெரிய பொய். அவரா ஜாதிகளைக் கண்டுபிடித்தார்? வர்ணாசிரமத்தை உருவாக்கினார்? ஏற்கெனவே பிளவுபட்டும் ஏற்றத்தாழ்வுகளுடனும் இருக்கும் ஜாதீய சமூகத்தில், சம நிலையை ஏற்படுத்துவதற்கான முயற்சியை எடுத்தவரா, பிளவுபடுத்துபவர்?ஜாதி ஆதிக்கம், வர்க்க ஆதிக்கம் இவற்றில் ஆழ்ந்த பிடிப்பு இருக்கும் எவரும் வி.பி.சிங் மீது வெறுப்பு காட்டுவதில் ஆச்சரியமில்லை. ஏனென்றால், அவர் எந்தப் பதவியை வகித்தபோதும் இவற்றுக்கெதிராக நடவடிக்கைகள் எடுத்தார். நடவடிக்கைகள் எடுத்ததால், பதவி பறிபோகும் என்றால் அவர் அது பற்றிக் கவலைப்படாமல் பதவிகளை இழந்தார்.


அவர் உ.பி. முதலமைச்சராக இருந்தபோது ஜெயப்பிரகாஷ் நாராயண் வழிகாட்டுதலில் சம்பல் கொள்ளைக்காரர்களை சரண் அடையச் செய்ய முயற்சி எடுத்தார். அது பிடிக்காதவர்கள் அவர் சகோதரரையே கொன்றார்கள். அதற்காக அவர் தன் அணுகுமுறையை மாற்றிக் கொள்ளவில்லை. ராஜீவ் அமைச்சரவையில் அவர் நிதி அமைச்சராக இருந்தபோது வரி ஏய்ப்பு செய்த தொழிலதிபர்கள் கிர்லோஸ்கர், லலித் மோகன் தாப்பர் ஆகியோரை துணிச்சலாகக் கைது செய்தார். அதனால் துறை மாற்றப்பட்டு ராணுவ அமைச்சரானார். அங்கே நீர்மூழ்கிக் கப்பல் பேர ஊழல், பீரங்கி பேர ஊழல்களையெல்லாம் வெளியே கொண்டு வந்தார். அதனால் ஆட்சியை விட்டே வெளியேற வேண்டியதாயிற்று. பி.ஜே.பி., இடதுசாரிகள் வெளியிலிருந்து ஆதரித்ததில் அவர் பிரதமரானபின், அத்வானியின் மதவெறி ரத யாத்திரையைத் தடுத்து நிறுத்தினார். தமிழ்நாட்டிலும் சில மாநிலங்களிலும் பிற்படுத்தப் பட்டோருக்கான இட ஒதுக்கீடு இருந்தபோதிலும் சுதந்திரம் பெற்று 40 வருடங்களாகியும் மத்திய அரசில் அது இருக்கவில்லை. மண்டல் கமிஷன் அடிப்படையில் அதை அறிமுகப்படுத்தினார். இதனால் பி.ஜே.பி. ஆதரவை திரும்பப் பெற்றதில் பிரதமர் பதவி போயிற்று.


வி.பி.சிங் கவலைப்படவில்லை. பாபர் மசூதி இடிப்பின் தொடர்ச்சியாக மும்பையில் நடந்த கலவரங்களையடுத்து மத நல்லிணக்கத்துக்காக அவர் தண்ணீர் கூட குடிக்காமல் உண்ணாவிரதம் இருந்ததில் அவர் சிறுநீரகங்கள் பாதிக்கப்பட்டன. ரத்தப் புற்று நோயும் இருந்தது. அன்றாட கட்சி அரசியலிலிருந்து ஒதுங்கி, மக்கள் இயக்க அரசியலில் இயங்கிவந்தார். மறுபடியும் பிரதமராகும் வாய்ப்பு வந்தபோதும் அவர் மறுத்ததால்தான் குஜ்ராலும் தேவ கவுடாவும் பிரதமராக முடிந்தது.பதவிகளைப் பொருட்படுத்தாமல் கொள்கை அடிப்படையில் மட்டுமே இயங்கிய அபூர்வமான மனிதர் அவர். அதனால்தான் அவர் தேசிய முன்னணி அமைத்து அதன் வழியே பிரதமரானபோது, தேசிய முன்னணியின் முக்கிய கட்சியான தி.மு.க.வுக்கு ஒரு லோக் சபா எம்.பி.கூட தேர்தலில் கிட்டாதபோதும், ஃபெடரலிசக் கொள்கை அடிப்படையில் முரசொலி மாறனை கேபினட் அமைச்சராக்கினார்.

கவிஞராகவும் ஓவியராகவும் நுட்பமான உணர்வுகளுடன் இயங்கிய அவர், தனி வாழ்க்கையில் மிக எளிமையானவர் என்பதை அவருடைய மொழிபெயர்ப்பாளனாக தேசிய முன்னணி தொடக்க கால மேடைகளில் செயல்பட்டபோது நேரில் நான் அறிந்தேன். நண்பர் ஜெகவீரபாண்டியன் அவருக்கு என்னை அறிமுகப்படுத்தியதால் எனக்குக் கிட்டிய அனுபவங்கள் என் வாழ்க்கையின் இனிமையான தருணங்களில் முக்கியமானவை. மேடைகளில் அவர் சொன்ன குட்டிக்கதைகள் தொகுக்கப்பட்டால் அருமையான வாசிப்பு அனுபவமாக இருக்கும்.தமிழகத்தில் பெரியார் பணியாற்றி இட ஒதுக்கீட்டுக்கு சாதகமான சூழலை ஏற்படுத்தியது போல வடக்கே யாரும் செய்யவில்லை என்பதால்தான் மண்டல் கமிஷன் அமலாக்கத்துக்கு எதிர்ப்பை வி.பி.சிங் சந்திக்க வேண்டி வந்தது. ஹிந்தியிலும் ஆங்கிலத்திலும் பெரியார் முழுமையாக மொழிபெயர்க்கப்படவே இல்லை என்பது அவருக்கு அதிர்ச்சியாக இருந்தது.


பெரியார் பார்வையும் லோஹியா பார்வையும் கலந்த ஓர் சமூக அரசியலை வடக்கே பரப்ப அவர் முயற்சித்தார். அவருக்குக் கிடைத்த மிகப் பெரிய வெற்றி என்பது _ அவர் காலத்துக்குப் பின் இன்று பி.ஜே.பி உட்பட எந்த அரசியல் கட்சியும் இந்தியாவில் அதிகாரப்பூர்வமாக இட ஒதுக்கீட்டுக் கொள்கையை நிராகரித்து அரசியல் செய்யமுடியாது என்ற நிலையை அவர் ஏற்படுத்தியதுதான். ராஜீவ் கொலையும் உடல் நலிவும் நிகழ்ந்திராவிட்டால். வி.பி.சிங் 1991_ல் மீண்டும் பிரதமராகியிருப்பார். இந்திய அரசியல் மிக ஆரோக்கியமான வழியில் சென்றிருக்க முடியும்.வாரிசு அரசியல், குடும்ப நலன், ஊழல் செய்து சொத்துக் குவிப்பு எதையும் செய்யாத நேர்மையாளரான வி.பி.சிங்குக்கு இவற்றில் திளைக்கும் தி.மு.க.வும் பெரியாரை தனிச் சொத்தாக பாவிக்கும் தி.க.வும் வி.பி.சிங்கின் ஆதரவாளர்கள் என்ற பெயரில் செலுத்தும் அஞ்சலிகளை விட, அவருடைய எதிரிகளின் சார்பாக இந்தியா டுடே பிரசன்னராஜன் எழுதியிருக்கும் கண்டனம்தான், வி.பி.சிங் யார் என்பதைச் சரியாக அடையாளப்படுத்தும் மிகச் சிறந்த புகழுரையாக அமைகிறது..


இந்த வார பூச்செண்டு

வழக்கறிஞர் ராம்ஜெத்மலானிக்கு. மும்பையில் பிடிபட்ட தீவிரவாதி முகமது அஜ்மல் அமிர் கசாப் சார்பில் எந்த வழக்கறிஞரும் ஆஜராகக் கூடாது என்று பல்வேறு வழக்கறிஞர் சங்கங்கள் தீர்மானம் நிறைவேற்றி வரும் வேளையில், அப்படி மறுப்பது தொழில் தர்மத்துக்கு முரணானது என்றும் கசாப் கேட்டுக் கொண்டால் தான் ஆஜராவேன் என்றும் ராம் ஜெத்மலானி அறிவித்திருப்பதற்காக இ.வா.பூச்செண்டு. கசாப் ஏற்கெனவே குற்றத்தை ஒப்புக் கொண்டிருப்பதால் தண்டனை நிச்சயம்; மரண தண்டனைக்கு பதில் ஆயுள் தண்டனையை கோரிப் பெற தான் வாதாட இயலும் என்று ராம்ஜெத் மலானி தெரிவித்திருக்கிறார்.


இந்த வார கேள்வி


திருச்சி பகுதியில் சிறு தொழிற்சாலைகள் 55 சதவிகித மின்வெட்டில் திணறிக் கொண்டிருக்கையில், ஸ்டாலின் உறையூரில் பேசும் பொதுக் கூட்டத்துக்காக ஐந்து கிலோமீட்டர் நீளத்துக்கு சாலை நெடுக டியூப் லைட்டும் அலங்கார விளக்குகளுமாக செய்திருக்கும் அட்டகாசத்தை நேரில் கண்டேன். அருவருப்பாக இருக்கிறது. திருந்தவே மாட்டீங்களா?

நன்றி குமுதம்