Monday, 12 January, 2009

இவ்வாரம் ஞாநியின் பார்வையில்-- இது விளையாட்டல்ல..

பிறந்த நாள் கொண்டாடும் ஒரு வயதுக் குழந்தைக்கு பரிசு வாங்குவதற்காக நேற்று புரசைவாக்கத்தில் ஒரு பொம்மைக் கடைக்குச் சென்றிருந்தேன். என் குழந்தைப் பருவத்தில் இந்த பொம்மைகளில் கால் பங்கு கூட பார்த்ததில்லை. அத்தனை வகைவகையான பொம்மைகள். குறிப்பாக வகைவகையான மிருக பொம்மைகள். பஞ்சும், வெல்வெட்டும் பிளாஸ்டிக்குமாக வெவ்வேறு அளவுகளில் இருந்த அவற்றை எல்லாமே வாங்கிக் கொண்டு போய் வைத்துக் கொண்டு குழந்தைகளும் நானுமாக விளையாட வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டது. நான் தேடிய உடலைச் சுற்றி மாட்டிக் கொள்ளக்கூடிய பெரிய அளவு குரங்கு பொம்மை மட்டும் கிடைக்கவில்லை.கடையில் ஓர் இஸ்லாமியரும் பொம்மை வாங்கிக் கொண்டிருந்தார். அவருடன் சுமார் நான்கு வயது மதிக்கக்கூடிய இரு சிறுவர்கள் இருந்தனர். இருவருக்கும் ஒலி எழுப்பக்கூடிய துப்பாக்கி பொம்மைகளை அவர் வாங்கிக் கொடுத்துக் கொண்டிருந்தார்.


`துப்பாக்கி பொம்மைகளை குழந்தைகளுக்குப் பழக்கப்படுத்த வேண்டா'மென்று அவரிடம் சொன்னேன். `வன்முறை உணர்ச்சியைக் குழந்தைகளிடம் தூண்டிவிடவேண்டாம் என்று விளக்கினேன்.அவருடைய பதில் வித்தியாசமாகவும் வியப்பாகவும் இருந்தது. `துப்பாக்கி பொம்மையினால் வன்முறை உணர்ச்சி பரவிவிடாது' என்றார். `அதைப் பரப்பியிருப்பது புஷ்' என்றார். புஷ்ஷை எதிர்ப்பது வேறு. நம் குழந்தைகளுக்கு வன்முறை உணர்வைத் தூண்டும் பொம்மைகளை நாம் வாங்கித்தரவேண்டாம் என்று கருத்து சொல்வது சக மனிதனாக என் கடமை என்று அவரிடம் சொல்லிவிட்டு மேற்கொண்டு தொடர்ந்து விவாதிக்காமல் நான் புறப்பட்டேன்.


கடைக்காரர் தாமாகவே என்னுடன் பேசினார். அவரும் ஓர் இஸ்லாமியர். (இந்துக் கடைகளிலேயே வாங்குங்கள் என்ற விஷமத்தனமான பிரசாரத்தை நான் எப்போதும் ஞாபகமாகப் புறக்கணிப்பது வழக்கம்) `துப்பாக்கி பொம்மைகள்தான் அதிகம் விற்கின்றன' என்று கடைக்காரர் சொன்னார். குறிப்பாக, ஒரு பிரபல சர்வதேச பொம்மை நிறுவனம் வெளியிட்டுள்ள ஆயிரம் ரூபாய் விலையுள்ள துப்பாக்கி பொம்மைக்கு பெரும் கிராக்கி இருப்பதாகவும் தன்னால் போதுமான அளவு வரவழைத்து விற்க முடியாமல் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். துப்பாக்கி பொம்மையை பலரும் விரும்பி வாங்குவது பற்றிய வருத்தம் அவர் பேச்சில் இருந்தது.


உலக அளவிலும் இந்திய அளவிலும் குழந்தைகள் நலனில் அக்கறை காட்டும் அமைப்புகள் பல இருந்த போதும், விளையாட்டு பொம்மைகள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், திரைப்படங்கள் போன்றவற்றைத் தயாரிப்பவர்களை முறையாகக் கட்டுப்படுத்த போதுமான சட்டங்களும் வழிமுறைகளும் இன்னமும் இல்லை. துப்பாக்கி பொம்மைகள் மட்டுமல்ல, `டாம் அண்ட் ஜெர்ரி' காமிக்சின் வன்முறை பற்றியெல்லாம் நம் ஆட்சியாளர்களுக்கு எந்தக் கொள்கைப் பார்வையும் கிடையாது. புதிய அரசியல்வாதிகள் கூட இவற்றில் அக்கறை காட்டுவது இல்லை.


புஷ், அமெரிக்கா ஆகியோர் உலகில் வன்முறையைப் பரப்புவது, நான் என் வீட்டுக் குழந்தைகளிடம் வன்முறையைப் பரப்புவதற்கான நியாயமாக ஒருபோதும் ஆக முடியாது. இன்னும் சொல்லப்போனால், ஒவ்வொரு முறை அமெரிக்காவோ இஸ்ரேலோ வன்முறையை அவிழ்த்துவிட்டாலும், இந்தியாவிலும் பாகிஸ்தானிலும் இருக்கும் வெறியர்கள் யுத்தம் சீக்கிரமே வந்துவிடும் என்ற பீதியைக் கிளப்பும்போதும், இப்படிப்பட்ட வன்முறைகளை ஏற்க மறுக்கும் மன வலிமையை நம் குழந்தைகளுக்கு ஊட்டுவது எப்படி என்று அதிகம் யோசிக்க வேண்டியிருக்கிறது.


கல்வி, அத்துடன் சார்ந்த சந்தோஷமான விளையாட்டுகள் இவைதான் நம் குழந்தைகளை ஆரோக்கியமான மன நிலை உடையவர்களாக வளர்த்தெடுக்கக்கூடியவை என்பதில் சந்தேகம் இல்லை. நிறைய வாசிக்க வாசிக்க, நம் குழந்தைகள் படிப்பின் மகிழ்ச்சியில் திளைக்க முடியும். சுவையான கதைகளைத் தொடர்ந்து படிக்கும் மனம், மனித உறவுகளை ஆரோக்கியமானதாக ஆக்குவதற்கு ஏற்ற பக்குவத்தை அடையும்.


போர்களிலும் வன்முறையிலும் படிப்பறிவற்றவர்களை அதிகம் ஈடுபடுத்தி பலி கொடுக்கும் மூளைகள் மெத்தப் படித்த மூளைகள்தான். அதே சமயம் தேசபக்தி பொங்க, உயிர்த்தியாகம் செய்த ஜவான்களுக்காக மெழுகுவர்த்தி ஊர்வலத்தில் வரும் படித்த வர்க்கத்தினரிடம் ஊர்வல முடிவில் அவர்கள் வீட்டுப் பிள்ளைகளை ராணுவத்தில் சேர்ப்பதற்கான விண்ணப்ப பாரங்களை நீட்டினால் போதும்; ஊர்வலம் எந்த லத்தி சார்ஜும் இல்லாமல் கலைந்துவிடும். படிப்பின் ருசியை அறிய அறிய, அமைதியான வாழ்க்கைக்கான ஆவல் அதிகரிக்கும். படித்தவர்களை கடும் மூளைச்சலவை செய்யாமல் வன்முறையில் பயன்படுத்த முடியாது. எனவே மேலும் மேலும் சமூகத்தில் படிப்பை, வாசிப்பு ரசனையைத் தூண்டும் அத்தனையும் நம்மால் ஆதரிக்கப்பட வேண்டும்.


இந்த மாதம் 8 முதல் 18 வரை சென்னையில் நடக்க இருக்கும் 32வது புத்தகக் கண்காட்சி அப்படிப்பட்ட ஒரு நிகழ்ச்சி. இதுவரையிலும் ஒரு வருடம் கூடத் தவறாமல் அதில் கலந்து கொண்டிருக்கிறேன். ஒரு வருடம் என்னுடைய அனல் பறக்கும் வசனங்கள் நிறைந்த நாடக நூலைக் கண்காட்சியில் கொண்டு வந்து வைத்த சில மணி நேரங்களில், கண்காட்சி தீப்பிடித்துக் கொண்டு விட்டது. ஒவ்வொரு வருடமும் சென்னைக் கண்காட்சியில் கோடிக்கணக்கான ரூபாய்க்கு நூல்கள் விற்பனையாகின்றன. இந்திய புத்தகத்துறை வரலாற்றில் முதல்‌முறையாக இப்போதெல்லாம் சில தமிழ் எழுத்தாளர்கள் ஒரே நேரத்தில் பத்துப் பதினைந்து நூல்களை வெளியிடும் அதிசயம் நடக்கிறது.ஆனாலும் அதிகமாக விற்கும் புத்தகங்கள் சமையல், ஜோதிடம், வாஸ்து, சுய முன்னேற்றம் மட்டும்தான் என்பது ஆரோக்கியமான நிலை அல்ல.
நமக்கு வரலாறு தெரிய வேண்டும். அப்போதுதான் நிகழ்காலம் புரியும். போரில் சிக்கித் துயரத்தின் உச்சத்தில் தவிக்கும் இலங்கைத் தமிழருக்காக இங்கே உணர்ச்சிவசப்படும் ஏராளமானவர்களுக்கு அந்தத் துயரத்தின் 60 வருட கால அரசியல் வரலாறு தெரியாது. இட ஒதுக்கீட்டில் பயன் பெற்று கல்வியும் வேலையும் அடைய முடிந்த லட்சக் கணக்கான தமிழ் இளைஞர்களுக்கு, பெரியாரின் முழு வாழ்க்கைக் கதையே தெரியாது. அரசியல், சமூக நீதி மட்டுமல்ல, தமிழ் சினிமாவின் அசல் வரலாறு கூட தெரியாததால்தான், எதையெதையோ காவியம் என்று இன்று எழுதுகிறவர்கள் கூட சொல்லிவிடுகிறார்கள்.நம் இன்றைய வாழ்க்கையின் அரசியல், சினிமா, பொருளாதாரம் அவ்வளவு ஏன் நம் குடும்ப வாழ்க்கையைக் கூடப் புரிந்துகொள்ள, நாம் ஏராளமாகப் படிக்க வேண்டும். படிக்கப் படிக்கத் தீராத பக்கங்கள் நமக்காகக் காத்திருக்கின்றன.


மரணத்தை நோக்கி அவரை அழைத்துச் சென்ற புற்று நோய்க்காக அறுவை சிகிச்சைக்கு ஆபரேஷன் தியேட்டருக்கு அழைக்கப்பட்டபோது கூட, அண்ணா தன் கையில் இருந்த பாதி படித்த புத்தகத்தை முழுக்கப் படித்து முடித்துவிட்டு வந்துவிடுகிறேன் என்று டாக்டரிடம் அனுமதி கேட்டார். அதுதான் வாசிப்பின் ரசனை.துப்பாக்கி பொம்மைகள் ஒருபோதும் அதை ஈடு செய்ய முடியாது. நம் குழந்தைகள் கையில் எதைக் கொடுக்கப் போகிறோம்?

நன்றி குமுதம்.