Sunday, November 9, 2008

உத்தப்புரம்-- திக்கி திணறும் தென் மாவட்டங்கள்

உத்தபுரத்தை மையமாக வைத்து அதன் சுற்றுப்புறங்கள் இன்று `யுத்தபுரமாகி' வருகின்றன. அப்பாவி மக்கள் மனதில் நீறுபூத்த நெருப்பாக இருக்கும் ஆத்திரக் கனல் அணைந்து விடக்கூடாது என்பதில் சிலர் காண்பித்த கரிசனம் இன்றைக்கு துப்பாக்கிச் சூட்டில் போய் முடிந்திருக்கிறது. சாதிப்பாம்பின் விஷப்பல் தெற்கே மீண்டும் பதிய ஆரம்பித்திருப்பதால் மதுரையைச் சுற்றியுள்ள மாவட்டங்களில் பதற்றம் சிக்கென பரவி வருகிறது.


மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகேயுள்ள உத்தபுரத்தில், `தீண்டாமைச் சுவரின் ஒருபகுதியை மாவட்ட நிர்வாகம் சில மாதங்களுக்கு முன் உடைத்தெறிந்து பாதையை ஏற்படுத்தித் தந்தது. அதன்பின் மாவட்ட நிர்வாகம் அந்தப் பகுதியை மறந்துபோனதால் தலித்துகளுக்கும், பிள்ளைமார்களுக்கும் அடிக்கடி தகராறுகள் ஏற்பட்டு வந்தன. கடந்த மாதத் தொடக்கத்தில், கோயில் சுவர் ஒன்றில் வெள்ளையடிப்பது தொடர்பாக இருதரப்பினரும் மீண்டும் கோதாவில் இறங்கி வெடிகுண்டு வீசி தாக்கிக் கொண்டனர். அது தொடர்பாக ஐநூறுக்கும் மேற்பட்டவர்கள் மீது வழக்குப் பதிவானது. இப்போது உத்தரபுரத் தீ ஓரிரண்டு கிலோமீட்டர் முன்னேறி இ.கோட்டைப்பட்டியில் கலவரமாக மையம் கொண்டு, தலித் சமூகத்தைச் சேர்ந்த சுரேஷ் என்ற இளைஞரை துப்பாக்கிச் சூடு மூலம் காவு வாங்கியுள்ளது.

இந்த சம்பவம் பற்றி நாம் போலீஸ் வட்டாரத்தில் விசாரித்தோம்.

``இம்மாதம் 2-ம் தேதி புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி உத்தபுரத்தில் தலித் மக்களைச் சந்தித்துவிட்டு அங்கிருந்து ஒரு கி.மீ. தொலைவிலுள்ள எழுமலை என்ற ஊரின் வழியாகச் சென்றபோது அவர் கார் மீது கல்வீசப்பட்டது. 4_ம் தேதி காலை பத்தரை மணியளவில் எழுமலை தெற்குத் தெருவைச் சேர்ந்த சிலர் சந்தனமாரியம்மன் கோயில் தெருவில் வெடிகுண்டு வீசினர். இதில் இரண்டு பேருக்குக் காயம். அதன்பின் கல், பாட்டில் வீச்சு நடக்க, போலீஸார் ரப்பர் குண்டுகளைச் சுட்டு கூட்டத்தைக் கலைத்தனர்.

அதன்பின் டி.ஐ.ஜி. கிருஷ்ணமூர்த்தி தலைமையில் காவல்துறை மற்றும் வருவாய்த்துறையினர் எழுமலைக்குச் சென்றனர். உத்தபுரத்துக்கு இரண்டு கி.மீ.க்கு முன்னதாக உள்ள இ.கோட்டைப்பட்டி அருகே இவர்களது வாகனங்கள் வந்தபோது ரோட்டின் குறுக்கே கற்களும், முள்ளுச்செடிகளும் போடப்பட்டிருந்தன. போலீஸார் அவற்றை அகற்றப்போனபோது பெண்களை முன்னிறுத்தி அவர்களின் பின்னால் நின்று அந்தக் கிராம ஆண்கள் கல்வீச்சு நடத்தினார்கள். அந்தக் கல்வீச்சில் இருந்து டி.ஐ.ஜி.யும் தப்பவில்லை. பல போலீஸார் காயமடைந்தனர்.

போலீஸார் வானத்தை நோக்கிக் சுட்டும், மூன்று முறை கண்ணீர்ப்புகை குண்டுகள் பிரயோகித்தும் கல்வீச்சு நிற்கவில்லை. அதன்பின்பு போலீஸார் தங்களைக் காத்துக் கொள்ள ஐந்து ரவுண்ட் சுட்டதில்தான் சுரேஷ் என்ற 25 வயது இளைஞர் இறந்து போனார். துப்பாக்கிச் சூடு நடத்தாமல் இருந்திருந்தால் போலீஸ் தரப்பில் பலர் இறந்திருப்பார்கள்'' என திகிலுடன் சொன்னது போலீஸ் தரப்பு.

துப்பாக்கிச் சூடு சம்பவத்தையடுத்து கூடுதல் டி.ஜி.பி. ராஜேந்திரன் உடனடியாக சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை வந்து இ.கோட்டைப்பட்டி கிராமத்தைப் பார்வையிட்டிருக்கிறார்.

நாம் துப்பாக்கிச்சூட்டுக்கு மறுநாள் இ.கோட்டைப்பட்டிக்குச் சென்றோம். புயலுக்குப் பின் அமைதி என்பது போல சத்தமின்றி இருந்தது அந்த ஊர். கடைகளில் பூட்டுகள் நம்மை வரவேற்றன. பஸ் போக்குவரத்து இல்லை என்பதுடன் கிராமத்தில் ஆண்வாடையும் இல்லை. காக்கிச் சட்டைகள் மட்டுமே ரோந்தில் இருந்தனர். அந்த ஊர்ப் பெண் ஒருவரிடம் பேசினோம்.

"செவ்வாய்க்கிழமை (4-ம்தேதி), சாதி இந்துக்கள் இரண்டு லாரிகளில் வெடிகுண்டு, அரிவாள்களோடு எங்களைத் தாக்க வருவதாக ஒரு மர்ம போன் வந்தது. உடனே பள்ளப்பட்டி, இ.பெருமாள்பட்டி, வடக்கத்தியார்பட்டி பகுதிகளைச் சேர்ந்த தலித் மக்கள் எங்கள் கிராமத்தில் கூடிவிட்டார்கள். சாதி இந்துக்களின் தாக்குதலைச் சமாளிக்க என்ன செய்யலாம் என யோசித்து, பாதையின் குறுக்கே மரத்தை வெட்டிப் போட முடிவு செய்து அப்படியே செய்தார்கள்.பதினொன்றரை மணியளவில் போலீஸார் வந்து சாலைத்தடையை அகற்றச் சொன்னார்கள். `முதலில் எங்களுக்குப் பாதுகாப்பு கொடுங்கள். பிறகு தடையை அகற்றுகிறோம்' என நாங்கள் சொன்னோம். பெண்களை முன்னால் நிறுத்தி ஆண்கள் பின்னால் நின்றால் போலீஸார் தடியடி நடத்த மாட்டார்கள் என ஊர் ஆண்கள் நினைத்தார்கள். ஆனால் அந்தக் கணக்குப் பொய்யாகி விட்டது. போலீஸார் தடியடி நடத்தியதால் ஆத்திரமடைந்த இளைஞர்கள் கல் வீசினார்கள். எந்த எச்சரிக்கையும் செய்யாமல் போலீஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் சுரேஷ் இறந்து போனார். பத்து தலித் பெண்களுக்கு படுகாயம் ஏற்பட்டது'' என்றார் அந்தப் பெண்.

அதே கிராமத்தைச் சேர்ந்த தலைமறைவாக இருக்கும் இளைஞர் ஒருவரிடம் பேசினோம்.

"நாங்கள் வன்முறையில் ஈடுபட வேண்டும் என நினைத்திருந்தால் கிருஷ்ணசாமி மீது கல்வீசப்பட்ட அன்றே வன்முறையில் ஈடுபட்டிருக்க முடியும்.. ஆனால் நாங்கள் அப்படிச் செய்யவில்லையே? போலீஸார் எங்கள் கிராமத்துப் பெண்களை அருவருப்பாகப் பேசி தடியடி நடத்தியதுதான் எங்களைக் கல்லெறியத் தூண்டியது. அப்போது வெறும் பதினைந்து போலீஸார்தான் இருந்தனர். நாங்களோ முந்நூறு பேர் இருந்தோம். நாங்கள் நினைத்திருந்தால் நிலைமை வேறுமாதிரியாகியிருக்கும். ஆனால் நாங்கள் பொறுமை காத்தோம். அதனால் இன்று ஒருவரை இழந்து நிற்கிறோம்'' என்றார் அவர் சோகமாக.
``திருப்பூர் பனியன் கம்பெனியில் வேலை பார்க்கும் சுரேஷ் விடுமுறைக்காக ஊருக்கு வந்த இடத்தில் இப்படி போலீஸ் துப்பாக்கிச் சூட்டுக்குப் பலியாகி விட்டானே?'' என்று கதறியழுதார்கள் சுரேஷின் தாய் முருகதேவியும் தந்தை கருப்பையாவும்.

அருகிலுள்ள உத்தபுரம் சென்று அங்கிருந்த பெரியவர் ஒருவரிடம் பேசினோம்..

"2-ம்தேதி உத்தபுரத்துக்கு வந்த டாக்டர் கிருஷ்ணசாமி தலித் பகுதிகளுக்குச் சென்றார். `வன்முறை வேண்டாம். வன்முறையால் எதையும் சாதிக்க முடியாது' எனத் தெளிவாகப் பேசினார். பிறகு அங்கிருந்து செல்லாயிபுரத்தில் ஏற்பாடு செய்திருந்த கூட்டத்துக்கு அவர் புறப்பட்டார். அவருடன் வந்த சிலர் எழுமலைக்குள் நுழைந்தவுடன் வேன்மேல் இருந்தபடி குறிப்பிட்ட ஒரு சாதியாரைப் பார்த்து கோஷம் போட்டிருக்கிறார்கள். அங்கிருந்து செருப்புகள் வர, பதிலுக்கு இவர்கள் கல் வீசியிருக்கிறார்கள். ஊரின் மேற்குப் பகுதியில் தேவர் சிலை இருந்த இடத்துக்கு வந்தபோது தேவர் குறித்தும் வேனில் இருந்தவர்கள் விமர்சனம் செய்திருக்கிறார்கள். அந்த நேரம் கிருஷ்ணசாமியின் காரும் அங்குவந்து சேர, அவர் கார் மீது கல்வீச்சு நடந்திருக்கிறது. எழுமலை சம்பவம் கிருஷ்ணசாமிக்குத் தெரியாமல் நடந்த ஒன்று. இப்போது எழுமலையில் தேவர், பிள்ளைமார், மணியக்காரர் என எல்லா சாதியினரும் தலித்துகளுக்கு எதிராகிவிட்டனர்.

தற்போது துப்பாக்கிச் சூடு நடந்த கோட்டைப்பட்டி மிகவும் சென்சிட்டிவான ஊர். இது தலித்துகள் மெஜாரிட்டியாக வாழும் பகுதி. ஜெயலலிதா தேர்தல் பிரசாரத்துக்கு வந்தபோது அவர் மீது கல்வீச்சு நடத்திய கிராமம் இது. உத்தபுரம் உள்ளிட்ட இந்தப் பகுதி கிராமங்களுக்கு வருவதை அரசியல் கட்சிகள் தவிர்த்தால் கொஞ்ச நாட்களில் இங்கே அமைதி திரும்ப வாய்ப்பிருக்கிறது. கிருஷ்ணசாமி ஆதரவாளர்கள் நிறைந்த உத்தபுரம், மெல்லமெல்ல கம்யூனிஸ்ட் கட்சிக்கு மாறிவருவதைத் தாங்க முடியாமல், அவரது கட்சி நிர்வாகிகள் கிருஷ்ணசாமியை இங்கே கூட்டி வந்தார்கள். அதனால் வந்த வினை இது. இங்கே அரசியல் ஆதாயம் தேடி யார் வருவதையும் அனுமதிக்கக் கூடாது.உத்தபுரம் பிரச்னைக்குப் பிறகு இங்கே தலித் மற்றும் பிள்ளைமார் சமூக ஆண்கள் ஊரிலேயே இருக்க முடியவில்லை. இதனால் வருமானம் இல்லாத நிலை உருவாகிவிட்டது. குழந்தைகள் பள்ளி செல்ல முடியவில்லை. அடிக்கடி பஸ் போக்குவரத்தும் தடைபடுகிறது. இதனால் இந்தப் பகுதியே வெளிஉலகில் இருந்து துண்டிக்கப்பட்டுள்ளது. இங்கே அமைதி திரும்புவதற்கான உடனடி நடவடிக்கைதான் தேவை'' என்றார் அவர்.

கிருஷ்ணசாமியின் கார் தாக்கப்பட்ட நாளிலிருந்தே தென் மாவட்டங்களில் பஸ்களை சேதப்படுத்துவது தொடர்கதையாகியிருக்கிறது. துப்பாக்கிச் சூட்டிற்குப் பிறகு நிலைமை இன்னும் மோசம். மதுரை பஸ் நிலையத்திலேயே ஒரு பஸ்ஸின் உட்புறம் பெட்ரோல் ஊற்றி தீவைத்துக் கொளுத்தப்பட்டது. தென்மாவட்டங்களில் இதுவரை நாற்பது பஸ்கள் சேதப்படுத்தப்பட்டுள்ளன. நான்கு பஸ்கள் தீ வைக்கப்பட்டுள்ளன. மதுரை, நெல்லை, விருதுநகர் மாவட்டங்களில் சில பகுதிகளில் நான்கு நாட்களாக பஸ் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த மாவட்டங்களுக்குள்ளும் கலவரம் மெதுவாக கால்பதித்து வருகிறது.
துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக நேரடியாகச் சென்று கள ஆய்வு மேற்கொண்ட எவிடன்ஸ் அமைப்பின் நிர்வாக இயக்குனர் கதிருடன் பேசினோம்.

"`கலவரத்தை ஒடுக்குகிறோம் என்ற பெயரில் இந்த ஆண்டில் இதுவரை தமிழக போலீஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் விழுப்புரம் அருகே எரையூர் என்ற இடத்தில் இருவரும், இப்போது இ.கோட்டைப்பட்டியில் சுரேஷும் இறந்திருக்கிறார்கள். இரட்டனையில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் மாணவர் ஒருவர் காயமடைந்திருக்கிறார். சுரேஷ் குடும்பத்துக்கு ஐந்து லட்ச ரூபாய் நிவாரணம் தர வேண்டும். இது தொடர்பாக உயர்நீதிமன்ற நீதிபதியைக் கொண்டு விசாரணைக் குழு அமைக்க வேண்டும். தேசிய மனித உரிமை ஆணையமே சம்பந்தப்பட்ட இடத்துக்கு நேரடியாக வந்து விசாரித்து அவற்றின் அடிப்படையில் அரசுக்கு முறையான பரிந்துரை வழங்க வேண்டும்'' என்றார் கதிர்.

மதுரை அரசு ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனைக்குப் பின்னர் சுரேஷின் உடல் புதன்கிழமை (5-ம் தேதி) மாலை அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. அவரது உடலுக்கு டாக்டர் கிருஷ்ணசாமி அஞ்சலி செலுத்தினார். அன்று மாலை அவரது உடல் கோட்டைப்பட்டிக்கு எடுத்துச் செல்லப்பட்டது. `சுரேஷின் உடலை சுடுகாட்டில் எரிக்கக் கூடாது. பட்டா நிலத்தில் புதைக்க வேண்டும்' என ஊர்மக்கள் கோரிக்கை விடுக்க, போலீஸார் மறுக்க, கிராம மக்கள் பிணத்தை சுடுகாட்டில் போட்டுவிட்டுத் திரும்ப, போலீஸார் திகைத்துப் போனார்கள். அதன்பின் சமரசம் ஏற்பட்டு புதன்கிழமை இரவு எட்டு மணியளவில் சுரேஷ் உடல் அடக்கம் செய்யப்பட்டது. இந்த துப்பாக்கிச்சூடு தொடர்பாக முதல்வர், விசாரணைக்கு உத்தரவிட்டிருக்கிறார். மேலும், இறந்தவர் குடும்பத்துக்கு இரண்டு லட்ச ரூபாய் வழங்கியுள்ளது அரசு.

உத்தபுரத்தை மையமாக வைத்துத் தொடங்கியுள்ள இந்தக் கலவரத்திற்குப் பின் உத்தபுரத்தில் இப்போது அமைதி நிலவுகிறது. கோட்டைப்பட்டியில் வலுக்கட்டாயமாக அமைதி கொண்டு வரப்பட்டிருக்கிறது. எழுமலை, சீழ்நாயக்கன்பட்டி, செல்லாயிபுரம், ஆத்தங்கரைப்பட்டி, டி.பாறைப்பட்டி போன்ற கிராமங்களில் பதற்றம் நீடிக்கிறது. ``இங்கே கிராமத் தலைவர்களை ஒன்றாக உட்காரவைத்துப் பேச்சு நடத்தினால்தான் இந்தப் பகுதியில் மீண்டும் அமைதி தலைகாட்டும். அதை விட்டுவிட்டு போலீஸ் பாதுகாப்பு, துப்பாக்கிச் சூடு என்று போவதில் துளியும் பலனில்லை'' என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள். அரசு யோசிக்கலாமே?

நன்றி குமுதம் ரிப்போர்ட்டர்