Friday 24 October 2008

இவ்வார ஞாநியின் பார்வையில்

21 வருடங்களுக்குப் பிறகு ஈழத்தமிழர் பிரச்னைக்காக இன்னொரு மனிதச் சங்கிலி! 1987ல் நடந்தது `போராட்டம்'. இப்போது நடப்பது `அணிவகுப்பு'! அன்று நடத்தியது கட்சி அரசியல்களுக்கு அப்பாற்பட்ட ஈழத்தமிழர் உரிமைப் பாதுகாப்புக் கூட்டமைப்பு. இப்போது ஆளும் கட்சியான தி.மு.க. தலைமையிலான அனைத்துக் கட்சிக் குழு.! அன்றைய பிரதான கோரிக்கை: `இந்திய அரசே, தலையிடாதே!'. இன்றைய பிரதான கோரிக்கை: `இந்திய அரசே தலையிடு!' மாறாமல் இருக்கும் ஒரே விஷயம் சிங்கள ஆட்சியின் பேரினவாத வெறிதான்.

1987ல் கூட்டமைப்பில் முக்கியப் பங்காற்றியவர்கள் மறைந்த பேராசிரியர் சாலை இளந்திரையன், இயக்குநர் வி.சி.குகநாதன், கவிஞர் மு.மேத்தா, பேரா.சுப.வீரபாண்டியன் ஆகியோர். இவர்களுடன் சேர்ந்து பணிபுரிந்த நான் செயற்குழுவில் இருந்தேன். எழுத்தாளர்பத்திரிகையாளர் நாகார்ஜுனனும் நானும் அப்போது தினசரி என் வீட்டில் சந்தித்து விவாதிக்கும் நண்பர்களாக இருந்தோம். உலகளாவிய புரட்சி இயக்கங்கள், மாற்று கலாசார இயக்கங்கள் பற்றிய தகவல்களை பரிமாறுவதும் பேசுவதும் அவற்றுடன் உள்ளூர் அரசியலை ஒப்பிட்டு அலசுவதும் எங்கள் வாடிக்கையான விவாதங்கள். ஐரோப்பாவில் அடிக்கடி நடைபெறும் பிரும்மாண்டமான மனிதச் சங்கிலிகள் எங்கள் கவனத்தை ஈர்த்தன.

எதிர்ப்பு, போராட்டம் என்பதையே ஒரு கலாசார திருவிழா தொனியில் அங்கே கையாளுவதைப் பற்றிப் பல முறை பேசியிருக்கிறோம். இந்தியாவில் முதல்முறையாக மனிதச் சங்கிலி என்ற வடிவத்தை கேரளத்தில் மார்க்சிஸ்ட் கட்சி மத நல்லிணக்கத்துக்காக நடத்தியிருந்தது.
இந்தப் பின்னணியில்தான் ராஜீவ்ஜெயவர்த்தனே ஒப்பந்தத்தை எதிர்த்தும் இந்திய அமைதிப் படையைத் திரும்பப் பெறக் கோரியும் எப்படிப்பட்ட போராட்டங்களை நடத்துவது என்ற விவாதத்தின்போது நான் கூட்டமைப்புத் தோழர்களிடம் மனிதச் சங்கிலி நடத்தலாம் என்ற யோசனையை முன்வைத்தேன். எல்லாரும் ஏற்றுக் கொண்டார்கள். போராட்டத்துக்கு எல்லா கட்சிகளின் ஆதரவையும் கோருவதற்காக பல்வேறு குழுக்களாகச் சென்றோம். தி.மு.க தலைமையைச் சந்தித்த குழுவில் நானும் இருந்தேன்.

கலைஞரை கோபாலபுரம் வீட்டில் சந்தித்தோம். உடன் இருந்தவர்கள் முரசொலி மாறன், வைகோ.

மனிதச் சங்கிலி என்ற வடிவம் அப்போது கலைஞருக்கும் மாறனுக்கும் பிடிபடவில்லை. வைகோதான் விடாமல் அதன் உலகளாவிய சிறப்புகளை விளக்கினார். வடகிழக்கு இந்தியாவில் போராடி வந்த `போடோ' அமைப்பினர் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் அவரவர் வீட்டு வாயிலில் வந்து நின்று (தட்டு, தாம்பாளம் போன்று) கிடைத்த பொருளில் ஒலி எழுப்பி மத்திய அரசின் கவனத்தை ஈர்க்க வினோதமான போராட்டம் நடத்தியதை நான் தெரிவித்தேன். உடனே முரசொலி மாறன் சொன்னார் - `போடோக்கள் ஆதிவாசிகள். இன்னும் ஆதிவாசிப் பழக்க வழக்கங்களை கைவிடாதவர்கள். வில், அம்பு, மேளம் எல்லாம் பயன்படுத்துபவர்கள். தமிழ்நாட்டில் தமிழன் எங்கே இருக்கிறான்? அவனை முதலில் தேட வேண்டும் . நடைமுறைக்கு ஏற்ற மாதிரி போராட்ட வடிவமாகச் சொல்லுங்கள்' என்றார். கடைசியில் வைகோவின் பரிந்துரைக்குப் பின் மனிதச் சங்கிலிக்கு தி.மு.க ஆதரவை அறிவிக்க கலைஞர் சம்மதித்தார்.அப்போது இடதுசாரிகள் மனிதச் சங்கிலியை ஆதரிக்கவில்லை. ராஜீவ் ஜெயவர்த்தனே ஒப்பந்தத்தை ஆதரித்தார்கள். அமைதிப் படையைத் திரும்பப் பெறக் கோரியதை ஆதரிக்கவில்லை. மிகப் பெரும் எழுச்சியுடன் தமிழகம் முழுவதும் நடந்த பிரும்மாண்டமான மனிதச் சங்கிலிப் போராட்டத்தில் என்னுடன் கை கோத்து அண்ணா சாலையில் நின்ற என் நண்பரான ஒரு மார்க்சிஸ்ட் கட்சி வழக்கறிஞரை கட்சி விரோத நடவடிக்கை செய்ததாக கட்சியிலிருந்து நீக்கியது மார்க்சிஸ்ட் கட்சி.

ஒரு விதத்தில் இடதுசாரிகள் இன்றும் அதே போன்ற நிலையில் இருப்பதாகச் சொல்லலாம். இந்தியா தலையிட்டது சரி; ஒப்பந்தம் சரி; அமைதிப்படையை அனுப்பியது சரி என்பது அன்றைய நிலை. தலையிட வேண்டும் என்பதுதானே இன்றைக்கும் நிலை. தமிழ்த் தேசியவாதிகளும் ஒரு அம்சத்தில் தொடர்ந்து ஒரே நிலையில் இருப்பதாகச் சொல்லலாம். இந்தியா அன்று படையை அனுப்பியது தவறு; ஒப்பந்தத்தைத் திணித்தது தவறு. இன்று இலங்கை அரசுக்கு படைக்கு பதில் ஆயுதமும் பயிற்சியும் கொடுப்பது தவறு என்பதும் சீரான நிலைதானே?

எப்படிப் பார்த்தாலும் இந்தியா இலங்கையில் தலையிட வேண்டும் என்ற விருப்பம் ஒரு சிலரைத் தவிர பலருக்கும் அப்போதும் இருந்தது; இப்போதும் இருக்கிறது. எப்படிப்பட்ட தலையீடாக இருக்கவேண்டும் என்பதில்தான் வேறுபாடுகள். வங்க தேசத்தில் ராணுவத்தோடு தலையிட்டது போல ஈழத்தில் இந்தியா தலையிடவே இடாது. மத அடிப்படையில் நாட்டைப் பிரிவினை செய்தது தவறு என்ற இந்திய அரசின் கருத்தை உலக அரங்கில் உரக்கச் சொல்ல வங்க தேசம் பயன்பட்டது. பாகிஸ்தானைப் போல, இந்தியாவின் எதிரி நாடாக இலங்கை இருந்ததில்லை. வங்க தேச முஸ்லிம் வங்காளிகளும் மேற்கு வங்க ஹிந்து வங்காளிகளும் இணைந்து மொழி அடிப்படையில் தனி நாடு கேட்கமாட்டார்கள் என்பது இந்திய அரசுக்கு நிச்சயமாகத் தெரியும். ஆனால் தனி ஈழம் அமைந்துவிட்டால், தனித் தமிழ்நாட்டுக்கான கோரிக்கைகளும் வலுவடையும் என்ற அச்சம் இந்திய அரசுக்கு இன்றும் இருக்கிறது.இந்தியாவை இந்த வட்டாரத்தின் வல்லரசாக, இலங்கை அரசு ஏற்கச் செய்வதைத் தாண்டி வேறு நோக்கங்கள் எதுவும் இந்திரா காந்திக்கோ ராஜீவ் காந்திக்கோ இல்லை. இலங்கை அரசைத் தங்களுக்கு இணக்கமாக இருக்கச் செய்ய, ஈழத் தமிழ்ப் போராளிகளைப் பயன்படுத்த முயற்சித்தார்கள். கைக்கடக்கமாக இருப்பார்கள் என்று கருதப்பட்ட ஈழப் போராளிகள், `நாங்கள் ஒன்றும் இந்தியாவின் அடியாட்கள் அல்ல' என்ற நிலை எடுத்தபோது, எல்லாமே சிக்கலாகிவிட்டது. தனக்கு எதிராக முற்றிலும் பாகிஸ்தான், சீன அரசுகளின் ஆதரவு சக்தியாக இலங்கை அரசு மாறிவிடாமல் இருந்தால் போதும் என்ற குறைந்த அளவுத் திட்டத்தை மட்டுமே இன்றைய மன்மோகன் அரசு செயல்படுத்துகிறது. இதுதான் சிங்கள அரசுக்குச் சாதகமாகவும் புலிகளுக்குப் பாதகமாகவும் இருக்கிறது.

யுத்தம் செய்யும் இரு தரப்பையும் பேசவைக்க இந்திய அரசால் முடியும். செய்ய வேண்டும். அதைச் செய்யவைப்பதற்காக, இங்குள்ள ஒவ்வொரு தமிழர் மனதிலும் குற்ற உணர்ச்சியையோ, விரோத உணர்ச்சியையோ எழுப்புவது எனக்கு உடன்பாடில்லை. ஆவேசக் குரல் எழுப்பும் பலர் நறுமண சோப்பில் குளித்து, மழுங்க ஷேவ் செய்து, ஆஃப்டர் ஷேவ் லோஷன் பூசி, ஃபாரின் ஸ்ப்ரே அடித்துக் கொண்டு, ஏ.சி. காரில்தான் வந்து இறங்குகிறார்கள். மேற்கே புலம் பெயர்ந்த ஈழத்தமிழர்கள் மத்தியில் உலவும் ஏடுகளில், பூசம், கார்த்திகை முதலிய சைவச் சடங்குகள், பரத நாட்டிய அரங்கேற்றங்கள், தீபாவளிக்கு புது டிஸைன் நகை, பட்டு வகைகள், வாஸ்து, ஜோதிட விளம்பரங்கள் ஆக்ரமிக்கின்றன. வானொலி நிகழ்ச்சிகளில் குண்டு வீச்சு செய்திகளை விட அதிகமாக `டாக்சி டாக்சி'தான் ஒலிக்கிறது. எட்டு மணி நேரம் கியூவில் நின்று 15 ஆயிரம் இலங்கைப் பணம் கொடுத்து ஒரு தமிழ்ப்படத்தை அண்மையில் பார்த்தேன் என்று ஒரு இலங்கைத் தமிழர் வலைப்பூவில் எழுதியதைப் படிக்கும்போது, குண்டு வீச்சில் கொல்லப்பட்ட குழந்தைகளைப் பார்க்கும்போது எழும் வேதனைக்கு நிகரான வேதனை எனக்கு உண்டாகிறது. நேரடி யுத்த களத்தில் இருப்பவர்களைத் தவிர, அவர்களுக்காக அனுதாபப்படும் யாரும் எங்கேயும் தங்கள் வாழ்க்கையை சுருக்கிக் கொள்வதே இல்லை. இதுதான் யதார்த்தம். இந்த நிலையில் மேலும் மேலும் மக்களை உணர்ச்சிவசப்பட வைப்பது அர்த்தமற்றது. சிந்திக்க வைப்பதுதான் தேவை. பகுத்தறிவு ஒன்றுதான் தீர்வு.

யுத்தம் எந்தப் பிரச்னையையும் தீர்க்காது.பரஸ்பர வெறுப்பையும் விரோதத்தையும் மட்டுமே அதிகரிக் கும். ஆங்கிலேய ஆதிக்கத்தை எதிர்த்துப் போராடிய காந்தி, ஒருபோதும் ஆங்கிலேயர்கள் மீது வெறுப்பை நம் மனங்களில் விதைக்கவில்லை. அதனால்தான் இன்று ஆங்கிலத்தைப் பயன்படுத்தி நம்மவர்களால் உலகம் முழுதும் வெற்றி அடைய முடிகிறது. வெறுமே உணர்ச்சியைத் தூண்டும் நோக்கத்துடன், தமிழச்சிகள் அங்கே கற்பழிக்கப்படுகிறார்களே என்று இங்கே பாலியல் வன்முறை வழக்கில் சிக்கிய நடிகனெல்லாம், மேடையில் குமுறுவதைக் கேட்க அருவருப்பாக இருக்கிறது..எத்தனை குறைகள் இருந்தாலும் ஜனநாயகத்துக்கு விஞ்சிய மாற்று இப்போதைக்கு கண்ணெதிரே இல்லை. கலைஞர் கருணாநிதி, ஜெயலலிதா, ராமதாஸ், மன்மோகன், சோனியா, லாலு, மாயாவதி வகையறாக்களை விட பிரபாகரன் பல மடங்கு சிறந்த சுயநலமில்லாத மனிதர் என்பதில் எனக்குத் துளியும் சந்தேகமில்லை. ஆனால் அவருடைய ராணுவ அரசியல் மக்களுக்கு உதவியதை விட, கருணாநிதியின் ஊழல் அரசியல் அதிகம் உதவியிருக்கிறது என்பதே நிஜம். ஊழல் ஜனநாயக அரசியலில் கருணாநிதி, ஜெயலலிதா, ராமதாஸ், திருமாவளவன், வைகோ, இல.கணேசன், விஜய்காந்த் முதல் என் போன்ற குரல்கள் வரை ஒலிக்கமுடியும். நிர்மலா நித்யானந்தன், செல்வி, பத்மநாபா, பாலகுமாரன், ஷோபாசக்தி, சேரன் குரல்களுக்கு இடம் கொடுக்கும் பிரபாகரனின் அரசியலைத்தான் என் மனம் அவாவுகிறது.

யுத்தத்தின் நடுவே சிக்கி சொல்ல முடியாத வேதனைகளை அனுபவித்துக் கொண்டிருக்கும் ஈழத் தமிழர்களுக்கு அனுதாபக் குரல்களை எழுப்பியவர்கள் எல்லாரும் குறைந்தபட்சம் ஒருசில மணி நேரங்களில், அதிகபட்சம் ஓரிரு வாரங்களில் அல்லது மாதங்களில் அவரவர் சுகதுக்கங்களுக்குப் போய்விடுவார்கள். பிரபாகரனும் பொடியன்களும் மட்டும் ஏன் சபிக்கப்பட்டவர்களாக வருடக்கணக்கில் காடுகளில் மரணத்தோடு வாதம் புரிகிற வாழ்க்கையில் கிடக்க வேண்டும்?

ஈழ அரசு, நிர்வாக வேலைகளுக்கு நடுவே, மகாபலிபுரம் கடற்கரையில் புலிக் குகையில் குடும்பத்தினருடன் வந்திருந்து கலாகே்ஷத்ராவின் நாட்டிய நிகழ்ச்சியை கண்டு ரசிக்கும் ஈழத்து முதலமைச்சராக பிரபாகரன் இளைப்பாறும் நாளை எதிர்நோக்குகிறேன். சிங்கள இயக்குநர் பிரசன்னாவுக்கு சிறந்த தமிழ்ப் படத்துக்கான விருதை பிரபாகரன் வழங்கும் நிகழ்ச்சியில் பார்வையாளனாக அமர்ந்திருக்க ஆசைப்படுகிறேன்.இவையெல்லாம் நிறைவேறுவதற்கான நிர்ப்பந்தங்களை யார் செய்தாலும் ஆதரிப்பேன். உண்மையான மனிதச் சங்கிலி என்பது கைகளை மட்டும் கோப்பது அல்ல; மனங்களை இணைப்பதுதான். இரண்டாவது மனிதச் சங்கிலியில் நான் நிற்கும்போது என் மனதில் இந்த எண்ணமே நிறைந்திருக்கும்..

இந்த வாரக் குட்டு


கிராமங்களில் தினசரி 14 மணி நேரமும் நகரங்களில் தினசரி 4 மணி நேரமும் மின்வெட்டை அறிவித்துவிட்டு இன்னும் பதவிகளில் ஒட்டிக் கொண்டிருக்கும் வெட்கங்கெட்ட ஆற்காடு வீராசாமிக்கும் கலைஞர் கருணாநிதிக்கும் இ.வா.குட்டு. ஒவ்வொரு முறை கண்ணாடியைப் பார்க்கும்போதும் தலையைத் தடவும்போதும், தமிழக மக்கள் குட்டிய இடம் வலிக்கும் உணர்ச்சி ஏற்படும்.

இந்த வார (அஞ்சலி) பூச்செண்டு

இயக்குநர்களே சினிமாவின் உண்மையான படைப்பாளிகள் என்பதை தமிழ் சினிமா ரசிகர்கள் மனதில் முதலில் விதைப்பதில் வெற்றி கண்ட இயக்குநர் (எங்கள் பள்ளிக்கூட சீனியர்) மறைந்த ஸ்ரீதர் அவர்களுக்கு இ.வா. பூச்செண்டு.

நன்றி குமுதம்

FLASH NEWS:


சீமானை கைது செய்ய போலீஸ் நடவடிக்கை

கைப்புள்ளயின் தீபாவளி நல் வாழ்த்துக்கள்

-கைப்புள்ள
அனைவருக்கும் இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள்

சினிமா,சினிமா,சினிமா,சினிமா

இந்த சினிமாத் தொடர் பதிவுக்கு என்னை அழைத்த தாமிராவுக்கு நன்றி. ஈழப்பிரச்சினை பதிவுலகில் சூடாக உலவிக்கொண்டிருக்கும் இந்நேரத்தில் இது தேவையா? என்ற கேள்வியும் எழுகிறது. இருந்தாலும் சொந்தமாக பதிவு எழுதி ரொம்ப நாளாச்சு.கேள்விகளுக்கு போகிறேன்.

எந்த வயதில் சினிமா பார்க்க ஆரம்பித்தீர்கள்? நினைவுதெரிந்து கண்ட முதல் சினிமா? என்ன உணர்ந்தீர்கள்?

வயது ஞாபகமில்லை. சின்ன வயதில் சினிமாதியேட்டர் செலவது என்றால் கொஞ்சம் கடினம். காரணம் ஊரில் பஸ் வசதி கிடையாது. அப்ப்டியே சென்றாலும் அம்பாசமுத்திரம்,கடையம்,தென்காசின்னு ரொம்ப தூரம் போகனும். கடையம்தான் பக்கத்தில். முதலில் பார்த்த சினிமா உறவைக் காத்த கிளி என்று நினைக்கிறேன். அப்போதெல்லாம் எங்க ஊர்ல ஒரே ஒருத்தர் வீட்டில்தான் டிவி உண்டு.அதுக்கப்புறம் காது கேளாதோர் பள்ளியில் ஒரு டிவி உண்டு. இந்தப் பள்ளியில் வாரம் ஒரு படம் டெக்கில் போடுவார்கள். அங்குதான் இந்தப்படம் பார்த்தேன். அடங்கொப்ப மவனே என்ற பாடல் மட்டும் நினைவில் உள்ளது.

என்ன உணர்ந்தீர்கள்?

படம் எப்ப முடியும் போய் துங்கனும்னு ஞாபகத்திலே துங்கிவிட்டேன்.
நன்றாக நினைவு தெரிந்து பார்த்த திரைப்படம் என்றால் அம்பை கல்யாணி தியேட்டரில் அக்னி நட்சத்திரம் பார்த்ததுதான். கார்த்திக், பிரபு நடிப்பு நல்லாவே இருந்திச்சி.

கடைசியாக அரங்கில் அமர்ந்து பார்த்த தமிழ் சினிமா?

எஸ் எஸ் ஆர் பங்கஜத்தில் தாமிர பரணி சென்ற வருடம் பார்த்தது. சண்டக்கோழி மாதிரி இருக்கும்னு நம்பிப் போய் கடசியில மெகா சீரியல பார்த்த திருப்தியுடன் வெளியே வந்தேன் ?????!!!!

கடைசியாக அரங்கிலன்றிப் பார்த்த தமிழ் சினிமா எது, எங்கே, என்ன உணர்ந்தீர்கள்?

டிவிடியின் புண்ணியத்தில் சந்தோஷ் சுப்ரமணியம் & குருவி. சந்தோஷ் சுப்ரமணியம் நல்ல படம். ஹாசினி கதாப்பாத்திரம் நல்ல கற்பனை. குருவி மசாலா படம்னு எல்லாத்தையும் அதிகமா அரைத்து தலையில தடவிட்டாங்க கடப்பா மேட்டர் மட்டும் இல்லைனா படம் டப்பா.

மிகவும் தாக்கிய தமிழ் சினிமா?

அன்பே சிவம், முதல் மரியாதை.
நடிகர் திலகத்தின் இயல்பான நடிப்பு, பாடல்கள் என அசரடித்தப் படம். வெட்டி வேரு வாசம் இன்னும் மனதில் நிற்கிறது. கம்யூனிசத்தை புதுமையாக சொன்னது அன்பே சிவம். ஆம்புலென்ஸில் மாதவன் சிறுவனிடம் பேசுமிடம், மாதவன், கமல் கிளைமாஸில் பேசுமிடம், நானும் கடவுள் என மாதவனிடம் விவாதம் செய்யுமிடம் என படம் முழுமைக்கும் ஒரு தாக்கதை ஏற்படுத்தியது

உங்களை மிகவும் தாக்கிய தமிழ் சினிமா-அரசியல் சம்பவம்?

நேற்று வந்த விசயகாந்த் முதல் இன்று முளைத்த ரித்தீஸ் வரைக்கும் முதலமைச்சர் கனவில் மிதப்பதுதான் செம காமெடி.

தமி்ழ் சினிமா பற்றி வாசிப்பதுண்டா?

வாரமலர், குமுதம் ,விகடன். தற்போது முரளி கண்ணன்


தமிழ் சினிமா இசை?

இசையென்றால் இளையராஜாதான். பூங்கதவே தாள் திறவாய் இன்னும் இப்பாடலுக்கு அடிமையாயிருக்கிறேன் படிக்கும் வயதில் கேசட்டில் பாடல் பதியனும்னா 5 கிலோமீட்டர் தூரமுள்ள பொட்டல் புதூருக்கு சென்று வரவேண்டும். முதல் நாள் கொடுத்தால் மறு நாள் தான் கேசட் தருவார்கள். அனைத்து பாடல்களுமே மெலோடி பாடல்கள்தான். இதற்காக வீட்டில் நிறைய அடியும் வாங்கியிருக்கேன். தற்போது உதடு முனுமுனுக்கும் பாடல் கண்கள் இரண்டால், இதில் வரும் காட்சிகள் பல என்னுடைய செமஸ்டர் விடுமுறை காலத்தை நினைக்க வைக்கிறது.

தமிழ் தவிர வேறு இந்திய, உலக மொழி சினிமா பார்ப்பதுண்டா? அதிகம் தாக்கிய படங்கள்?

தாழையூத்தில் பாலிடெக்னிக் படிக்கும் போதுதான் ஆங்கில மற்றும் ஹிந்தி படங்கள் பார்க்க ஆரம்பித்தேன். முதலில் பார்த்த ஆங்கில படம் தி ரிபெல். ஜெட்லி நடித்தது என்பதை விட அவர் அடித்தது என்று சொல்லலாம். ஈவில் டெட் படம் பாத்துட்டு ஒரு வாரம் இரவில் தனியாக பாத் ரூம் செல்லவே பயந்தேன். ஹாஸ்டல் கலாட்டா அப்படி இருந்தது. முதலில் பார்த்த ஹிந்தி படம் ஹம் ஆப்கே ஹெயின் கோன்.பாடல்களுக்காகவே பலமுறை நெல்லை சென்ட்ரல் தியேட்டரில் பாத்து தாக்கிய படம்.
ஹிந்தியில் பிடித்த ப்டம் என்றால் சக்தே இந்தியா. ஆங்கிலத்தில் ரொம்ப பிடித்தப்படம் தி பீஸ்ட் ஆப்கானை சுற்றி வளைத்த ரஷ்ய ராணுவத்தை பற்றிய படம். திறமை குறைவான ராணுவ வீரனை பற்றிய படம்.
சமீபத்தில் ரசித்த மங்கோலிய படம் தி பிளையிங் வாரியர்ஸ். ( உபயம் வேல்டு மூவிஸ் சேனல்) இப்படத்திலிருந்து ஒரு காட்சியை அப்படியே குசேலனில் காப்பி அடித்திருந்தார்கள் .

தமிழ் சினிமா உலகுடன் நேரடித்தொடர்பு உண்டா? என்ன செய்தீர்கள்? பிடித்ததா? அதை மீண்டும் செய்வீர்களா? தமிழ்ச்சினிமா மேம்பட அது உதவுமா?
எதுவுமே கிடையாது. அப்படி ஒரு நல்ல காரியம் நடக்கலை....!!!!!

தமிழ் சினிமாவின் எதிர்காலம் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

தாமிரா :சிறப்பாக ஒன்றுமில்லை. இப்போது போலவே பத்து பேரரசுவும், ஒற்றை அமீரும் எப்போதும் இருப்பார்கள் என்று நினைக்கிறேன்.// ரிப்பீட்டு

அடுத்த ஓராண்டு தமிழில் சினிமா கிடையாது, மற்றும் சினிமா பற்றிய சமாசாரங்கள், செய்திகள் எதுவுமே பத்திரிகைகள், தொலைக்காட்சி, இணையம் உள்ளிட்ட ஊடகங்களில் கிடையாது என்று வைத்துக்கொள்வோம்? உங்களுக்கு எப்படியிருக்கும்? தமிழர்களுக்கு என்ன ஆகும் என்று நினைக்கிறீர்கள்?

சினிமா கிடையாதா ? தமிழர்களின் மூச்சு கொஞ்சம் கஷ்டப்பட்டு சுவாசிக்கும். டப்பிங் ப்டங்கள் அதிகமாக வெளியாகும். தொலைக்காட்சிகள்தான் பாவம். இப்போதைக்கு பதிவுலகில் இருப்பதால் ஒரு வருடம் ஓடிவிடும்.

இந்த தொடருக்கு நான் அழைப்பது

1. கடையம் ஆனந்த்
2. சுரேஸ் கண்ணன்
3. பாபு
4. தமிழ் பறவை