Wednesday, October 1, 2008

தயாநிதிக்கு கட்டம் கட்டியாச்சு.

இன்னும் நாடாளுமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப்படவில்லை. ஆனால், அதற்குள்ளாகவே அதிரடியான - நம்பமுடியாத திருப்பங்களைச் சந்திக்கத் தயாராகிக் கொண்டிருக்கிறது, தமிழக அரசியல்.இதில் முதல் இரண்டு அதிரடி அரசியல் திருப்பங்கள் குறித்த விஷயங்கள் தி.மு.க., தே.மு.தி.க. மாவட்ட நிர்வாகிகள் மத்தியில் பரவி, இப்போது பரபரப்புத் தீயைப் பற்ற வைத்திருக்கிறது.`நிச்சயமாக அந்த அதிரடித் திருப்பங்கள் அரங்கேறியே தீரும்' என்று தி.மு.க., தே.மு.தி.க.வினரால் உறுதியாகக் கூறப்படும் அந்த இரண்டு விஷயங்களுமே தயாநிதி மாறனைப் பற்றியதுதான்.முதல் அதிரடித் திருப்பமாக தி.மு.க.வினர் கூறுவது; ``வரும் அக்டோபர் மாத இறுதிக்குள் தயாநிதிமாறன் தி.மு.க.வின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கப்படுவார்'' என்பது.



இரண்டாவது அதிரடியாக தே.மு.தி.க.வினர் சொல்லுவது, ``வருகிற நாடாளுமன்றத் தேர்தலில் தே.மு.தி.க. ஆதரவுடன் சென்னை மத்திய தொகுதியில் தயாநிதி மாறன் போட்டியிடுவார்'' என்பது.`நம்பமுடியாத இந்த இரண்டு விஷயங்களும் நடந்தே தீரும் என்பதை எதனை ஆதாரமாக வைத்து அவ்வளவு உறுதியாகக் கூறுகிறீர்கள்?' என்று நாம் கேட்டபோது, அதற்கு அவர்கள் கூறிய பதிலும் அதிரடியாகத்தான் இருந்தது.வருகிற பதினெட்டாம் தேதி சென்னை தீவுத் திடலில் நடக்கப்போகும் தே.மு.தி.க.வின் மிகப் பிரமாண்டமான இளைஞரணி மாநாட்டுக்குப் பிறகுதி.மு.க.விலிருந்து தயாநிதி மாறன் அதிகாரபூர்வமாக நீக்கப்படுவாராம்.



`இதென்ன சுத்த அபத்தமாக இருக்கிறது? தே.மு.தி.க.வின் இளைஞர் அணி மாநாட்டுக்கும், தயாநிதி மாறனை தி.மு.க.விலிருந்து நீக்குவதற்கும்எப்படித் தொடர்பு இருக்க முடியும்?' என்ற நம் கேள்விக்கு, உடன்பிறப்புகள் உடனடியாகச் சொன்ன பதிலால் வாயடைத்துப் போனோம்.தே.மு.தி.க.வின் இளைஞரணி மாநாட்டை முழுமையாக நேரடி ஒளிபரப்புச் செய்ய முடிவெடுத்து இருக்கிறதாம் சன் டி.வி. நிர்வாகம். இதற்கான ரூட்டை கிளியர் செய்து கொடுத்ததே தயாநிதிமாறன்தானாம். கேப்டனும் இதற்கான தனது சம்மதத்தை சன் டி.வி. நிர்வாகத்துக்குத் தெரிவித்துவிட்டாராம்.``அந்த நேரடி ஒளிபரப்பு மட்டும் திட்டமிட்டபடி நடந்தேறுமானால், தயாநிதிமாறன் தி.மு.க.விலிருந்து நீக்கப்படுவது உறுதி'' என்று அடித்துக் கூறிய அந்த உடன்பிறப்புகள், அதற்கான காரணத்தையும் நம்மிடம் விவரித்தார்கள்.



``சமீபகாலமாக சன் டி.வி. நிர்வாகம் நடுநிலை என்ற பெயரில் ஜெயலலிதா கலந்துகொண்ட தேனி பொதுக்கூட்டம், வைகோ மதுரையில் நடத்திய அண்ணா நூற்றாண்டு விழா மாநாடு போன்றவற்றை நேரடி ஒளிபரப்புச் செய்ததில் ரொம்பவே எரிச்சலடைந்திருக்கிறார் எங்கள் தலைவர் கலைஞர். `இத்தனை வருடங்களாக கடைப்பிடிக்கப்படாத நடுநிலை இப்போது மட்டும் எங்கிருந்து வந்து குதித்தது' என்று தன் சகாக்களிடம் கோபப்பட்டாராம் கலைஞர். இதாவது பரவாயில்லை. சமீபத்தில் வடிவேலு விவகாரம் சம்பந்தமாக விஜயகாந்த் சென்னையில் தந்த பிரஸ்மீட்டை நேரடி ஒளிபரப்புச் செய்த தன் பேரன்கள் மீது கடும் கோபத்தில் இருக்கிறாராம் கலைஞர்.ஒரு சாதாரண பிரஸ்மீட்டை சன் டி.வி. நிர்வாகம் நேரடி ஒளிபரப்புச் செய்ய வேண்டிய அவசியம் என்ன வந்தது? அதில் விஜயகாந்த் தன்னையும் தன் அரசையும் கடுமையாக விமர்சனம் செய்தார் என்பதால்தானே'என்று தன் நெருக்கமான சகாக்களிடம் வேதனைப்பட்டாராம் கலைஞர்.இந்தச் சூழலில்தான் தே.மு.தி.க.வின் இளைஞரணி மாநாட்டை சன் டி.வி. நேரடி ஒளிபரப்புச் செய்யப் போகிறது என்ற தகவல் தலைவரின் கவனத்துக்குக் கொண்டு செல்லப்பட்டிருக்கிறது. கலைஞரின் உச்சகட்ட கோபத்தையும் எரிச்சலையும் கிளறப்போகும் இந்த நேரடி ஒளிபரப்பு, தயாநிதி மாறனை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்தே நீக்கும் முடிவுக்கு கலைஞரைக் கொண்டு செல்லும்'' என்கிறார்கள், நம்மிடம் பேசிய உடன்பிறப்புகள்.



மேலும், ``தயாநிதி தானாகவே கட்சியை விட்டு வெளியேறட்டும் என்று தலைவரும்; தாத்தாவே தன்னைக் கட்சியை விட்டு வெளியேற்றட்டும் என்று தயாநிதி மாறனும் வைராக்கியத்தோடு இருக்கிறார்கள். தாத்தாவும் பேரனுமாக விடாக்கண்டன் கொடாக்கண்டனாக விளையாடி வரும் இந்த அரசியல் கண்ணாமூச்சி ஆட்டத்தை, தே.மு.தி.க.வின் இளைஞரணி மாநாடு பற்றிய சன் டி.வி.யின் நேரடி ஒளிபரப்பே முடிவுக்குக் கொண்டு வந்துவிடும். இதனை மாறன் சகோதரர்களும் எதிர்பார்க்கிறார்கள்!'' என்றும் சொல்கிறார்கள் அந்த உடன்பிறப்புகள்.தே.மு.தி.க.வின் இளைஞரணி மாநாட்டை முழுமையாக நேரடி ஒளிபரப்புச் செய்வது என்ற முடிவை துணிச்சலாக சன் டி.வி. நிர்வாகம் எடுக்க முக்கியக் காரணமே, அவர்கள் தயாரிப்பில் வெளிவந்திருக்கும் `காதலில் விழுந்தேன்' திரைப்படத்தை மதுரையில் ரிலீஸ் செய்யாதபடி விடுத்த மிரட்டல்கள்தானாம்.



முதலில் சன் நெட்ஒர்க் சேனல்கள் மதுரையில் தெரியாதபடி செய்தார்கள். பிறகு மதுரை தினகரன் அலுவலகத்தில் தாக்குதல் நடத்தினார்கள். போதாதென்று தங்களது சுமங்கலி கேபிள் விஷனுக்குப் போட்டியாக ராயல் கேபிள் விஷனை ஆரம்பித்தார்கள். இப்போது, தங்கள் தயாரிப்பில் உருவான திரைப்படங்களை மதுரை தியேட்டர்களில் திரையிடச் செய்யாமல் தகராறு செய்கிறார்கள். இதனை இப்படியே விட்டோம் என்றால் தங்களுக்குத்தான் ஆபத்தாக முடியும் என்று கருதியே, அதே மதுரைக்காரரான விஜயகாந்தை முன்னிலைப்படுத்தி, அவருக்கு முக்கியத்துவம் கொடுத்து கலைஞர் குடும்பத்தையே எரிச்சல்படுத்த முடிவெடுத்து இருக்கிறார்களாம் மாறன் சகோதரர்கள்.



ஒருவேளை, தயாநிதிமாறன் எதிர்பார்த்தபடியே அக்டோபர் மாத இறுதிக்குள் அவர் தி.மு.க.விலிருந்து நீக்கப்பட்டால் அவரது அடுத்த மூவ்என்னவாக இருக்கும்? தி.மு.க.வுக்குப் போட்டியாக தனிக்கட்சி ஆரம்பிப்பாரா? என்று கேட்டால், அதற்கும் மிகத் தெளிவாக பதில் வருகிறது தே.மு.தி.க. மாவட்ட நிர்வாகிகளிடமிருந்து``நிச்சயமாக மாட்டார். தனிக்கட்சி ஆரம்பித்து காணாமல் போவதை விட, மாறாக, மக்கள் மத்தியில் பெரும் செல்வாக்குடன் மிக வேகமாக வளர்ந்துவரும் எங்கள் கட்சியின் ஆதரவோடு சென்னை மத்திய தொகுதியில் போட்டியிட்டு தயாநிதி மாறன் நிச்சயம் வெற்றி பெறுவார். இது நிச்சயமாக நடக்கும்'' என்று உறுதியாகக் கூறும் அந்த தே.மு.தி.க. நிர்வாகிகள், அதற்கு ஆதாரமாக ஒரு விஷயத்தையும் நம்முடன் பகிர்ந்துகொண்டார்கள்.



``எங்கள் தலைவருக்கு தமிழ்நாட்டில் எந்த அளவுக்கு செல்வாக்கு இருக்கிறது என்பதை சமீபத்தில் தமிழ்ப் பத்திரிகைகள் உள்பட பல்வேறுதனியார் அமைப்புகளும் சர்வே எடுத்தன. அத்தனை சர்வே முடிவுகளுமே கேப்டனுக்கும் தே.மு.தி.க.வுக்கும் தனிப்பெரும் செல்வாக்கு இருப்பதையும், அது மேலும் வளர்ந்து வருவதையும் உறுதிப்படுத்தி இருக்கின்றன. அந்த சர்வேக்கள் அத்தனையும் மற்றொரு விஷயத்தையும் தெளிவுபடுத்தி இருக்கின்றன. தொடர்ந்து தி.மு.க.வின் கோட்டையாகவே இருந்து வரும் சென்னையின் எல்லா நாடாளுமன்றத் தொகுதியிலும் எங்கள் கட்சி தி.மு.க.வுக்குப் பெரும் சவாலாக அமையும் என்று அந்த சர்வேக்கள் உறுதிப்படுத்தியிருக்கின்றன. மேலும் அந்த சர்வேக்கள், வரும் நாடாளுமன்றத் தேர்தலில் சென்னைத் தொகுதிகளில் தே.மு.தி.க.வுடன் கூட்டணி வைத்துப் போட்டியிடும் எந்த ஒரு மாற்றுக் கட்சி வேட்பாளரும் நிச்சயம் வெற்றி பெறுவார் என்று அழுத்தமாகச் சொல்லி இருக்கின்றன. இந்த சர்வே முடிவுகளை உள்வாங்கிக் கொண்ட தயாநிதி மாறன், எங்கள் கட்சியின் ஆதரவோடு சென்னை மத்திய தொகுதியில் போட்டியிடப் போவதும் உறுதி. இதற்காக அவர் எங்கள் கேப்டனை நோக்கி நெருங்கி வருகிறார். அதன் முதல் கிரீன் சிக்னல்தான் எங்கள் இளைஞரணி மாநாட்டை சன் டி.வி. நேரடி ஒளிபரப்ப சம்மதம் தெரிவித்து இருப்பது'' என்றார்கள் தலைமைக்கு நெருக்கமான அந்த மாவட்ட நிர்வாகிகள்.`உங்கள் இளைஞரணி மாநாட்டு நேரடி ஒளிபரப்புக்குப் பிறகுதான் தயாநிதி மாறனை தி.மு.க.விலிருந்து விலக்கப் போகிறார்களாமே... இது உங்களுக்கே அநியாயமாகப் படவில்லையா?' என்று கேட்டோம்.



அதற்கு அவர்கள், ``இதில் அநியாயமாக நினைக்க என்ன இருக்கிறது? எங்கள் கேப்டனோடு இணைவதென்றால் தி.மு.க.வை விட்டு அவர் வெளியே வந்துதானே ஆக வேண்டும். தவிர, தயாநிதி மாறனுக்கும் தி.மு.க.வில் பல்வேறு நெருக்கடிகள் இருப்பதும், அவர் அங்கிருந்து வெளியே வர இருப்பதும் நிஜம்தானே? அத்துடன் எங்கள் கேப்டனுக்கு இருக்கும் மக்கள் செல்வாக்குத்தானே தயாநிதி மாறனை எங்கள் பக்கமாக திரும்ப வைத்திருக்கிறது. எங்கள் கட்சியின் செல்வாக்கைப் பயன்படுத்தி அவரை நாங்கள் எம்.பி.யாக்கப் போகிறோம். அவரும் சன் நெட்ஒர்க் மூலம் எங்கள் கேப்டனுக்கு ஒத்தாசையாக இருக்கப் போகிறார். அரசியலில் இதெல்லாம் சகஜம்தானே!'' என்று சொல்லிச் சிரிக்கிறார்கள் நம்மிடம் பேசிய தே.மு.தி.க.வினர்கேப்டனும்கூட, தனக்கும் தயாநிதிக்குமான அரசியல் கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆகும் என்று நம்புகிறாராம். தவிர, எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தயாநிதி கூட்டணியோடு எதிர்கொள்வது தனது அரசியல் இமேஜை பாதிக்காது. மாறாக, தயாநிதியையே தி.மு.க.விலிருந்து பெயர்த்து எடுத்து வந்து விட்டாரே என்று மக்கள் மத்தியில் தன்னைக் குறித்த எதிர்பார்ப்பும், செல்வாக்கும் எகிறும் என்றும் நம்புகிறாராம்.



தயாநிதியைப் பொறுத்தவரை தி.மு.க.வில் இருந்தால் மட்டுமல்ல, வேறு எந்தக் கட்சியின் ஆதரவோடும் தன்னால் தேர்தலை எதிர்கொண்டு வெற்றி பெற முடியும் என்பதை கலைஞருக்கும், அழகிரிக்கும் நிரூபிக்க நினைக்கிறாராம்.இந்த அதிரடி அரசியல் ஹேஸ்யங்கள் நிஜமாகுமா? அல்லது வழக்கம் போல் கலைஞரின் ராஜதந்திர,சாணக்கியத்தனங்களால் புஸ்வாணமாகுமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

நன்றி ரிப்போர்ட்டர்

ஆட்சியில் பங்கு - காங்கிரசாரின் நிலைமை-

நன்றி குமுதம்.காம்