Monday, 20 October, 2008

எனது 50 வது பதிவு & இவ்வாரம் ஞாநியின் பார்வையில்

இது எனது 50வது பதிவு. என்னையும் ஒரு பதிவராக மதித்து ??!!!! ( மகாநடிகன் காமெடி) 50 வது பதிவு எழுதவைத்த நல்ல உள்ள்ங்களுக்கு !!!!!!!!!???? நன்றி.ஹிட்ஸ் 6000த்தை தாண்டிவிட்டது. எனக்கு பின்னூட்டமிட்டு ஊக்கப்படுத்திய அனைவருக்கும் முக்கியமாக சுரேஸ் ஜீவானந்தம்,தமிழ் பறவை, கோவி கண்ணன் பாபு,தாமிரா, முரளி கண்ணன், பெயர் விடுபட்டிருந்தால் மன்னிக்கவும் நன்றி நன்றி நன்றி.

சினிமா தொடர் பதிவுக்கு என்னை அழைத்த  தாமிராவுக்கு நன்றி.


காவிரி, ஒகேனக்கல் பிரச்னைகளைத் தீர்த்து வைத்துவிட்ட தமிழ் சினிமா துறையினர் இப்போது அடுத்தபடியாக ஈழத் தமிழர் படுகொலைப் பிரச்னையைத் தீர்த்து வைக்கப் புறப்பட்டிருக்கிறார்கள். எதுவானாலும் முதலமைச்சர் பஞ்சாயத்துக்கு ஓடுகிறவர்கள் ஈழத் தமிழருக்காக ராமேஸ்வரத்தில், வருகிற 19-ம்தேதி ஊர்வல ஷோ காட்டப்போகிறார்களாம். சினிமாக்காரர்கள் செய்ய வேண்டிய வேலை இதுவல்ல. அது என்ன என்று கடைசியில் பார்ப்போம்.

அரசியலுக்கு அப்பாற்பட்டு தமிழர்கள் எல்லாம் இதில் ஒன்று சேர-வேண்டும் என்று சொல்லப்படுவது அபத்தத்தின் உச்சம். இலங்கைத் தமிழர் பிரச்னை ஓர் அரசியல் பிரச்னை. அதை எப்படி அரசியலுக்கு அப்பாற்பட்டு அணுக முடியும் ? இலங்கையில் இருக்கும் சிங்களவர்கள், இந்திய வம்சாவழியினரான மலையகத் தமிழர்கள், இலங்கையின் பூர்விகக் குடிகளான வடக்கு - கிழக்கு மாகாணத்து ஈழத் தமிழர்கள் மூவருக்கிடையிலேயும் அரசியல் வேறுபாடுகள் நீண்ட காலமாக இருந்து வருகின்றன. அவற்றை ஊக்குவித்ததிலும் வளர்த்ததிலும் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் பங்கு முக்கியமானது. இன்றைக்கு இந்தியாவில் இருக்கும் பல ஜாதி, மத, இன முரண்பாடுகளை ஊக்குவித்து வளர்த்ததும் அதே ஏகாதிபத்தியம்தான்.அரசியலுக்கு அப்பாற்பட்டு தமிழர்கள் ஒன்று சேரவேண்டும் என்ற கோரிக்கை இலங்கையிலேயே நிறைவேறியது கிடையாது. இந்திய வம்சாவழியினரான மலையகத்தமிழர்கள் கொடுமைப்படுத்தப்பட்டபோதோ, அவர்களுக்கு இந்தியாவிலும் குடியுரிமை இல்லை, இலங்கையிலும் இல்லை என்ற சிக்கல் ஏற்பட்டபோதோ, யாழ்ப்பாணத்து, மட்டக்களப்பு ஈழத்தமிழர்கள் திரண்டு வந்து ஆதரவுப் போராட்டம் எதுவும் நடத்தி விடவில்லை. அதே போல இன்றைக்கு ஈழத் தமிழர்கள் சிங்கள அரசால் அகதிகளாக்கப்படும்போதும், மலையகத் தமிழர்கள் கூக்குரல் எழுப்புவதில்லை.தமிழ் ஈழத்துக்கான ஆயுதப் போராட்டம் தொடங்கியபோதும், ஈழத்தமிழர்கள் ஓரணியில் இருக்கவில்லை. ப்ளாட், டெலோ, ஈராஸ், ஈ.பி.ஆர்.எல்.எஃப்., எல்.டி.டி.ஈ. என்று தனித்தனிக் குழுக்களாகவே இருந்தார்கள் - இயங்கினார்கள். அதற்குக் காரணம், ஒவ்வொரு குழுவுக்கும் இருந்த வேறுபட்ட அரசியல் பார்வைதான். அரசியலுக்கு அப்பாற்பட்டு அவர்கள் இயங்கியிருந்தால், வெகு சுலபமாக அன்றைக்கே தனி ஈழத்தைப் பெற்றிருப்பார்கள். அப்படிப் பெற்ற தமிழ் ஈழத்தில் தேர்தல் ஜனநாயக முறை இருந்திருந்தால், நம் தமிழ்நாட்டைப் போல தி.மு.க., அதி.மு.க. பாணி கட்சிகளுடன் இருந்திருக்கும். ஜனநாயகம் இருந்திராவிட்டால், எப்படியும் உட்சண்டைகளால் சின்னாபின்னமாகியிருக்கும்.

எனவே அரசியலுக்கு அப்பாற்பட்டு என்று எதுவும் கிடையாது. மனிதாபிமான அடிப்படை ஒன்றுதான் அப்படிப்பட்டதாக இருக்க முடியும். அதைக்கூடப் பயன்படுத்தி அரசியல் செய்யமுடியும். மனிதாபிமான அடிப்படையில் நாம், சண்டையிடும் இரு தரப்பினரையும் சண்டையை நிறுத்திவிட்டுப் பேச்சுவார்த்தைக்குத் திரும்புங்கள் என்றுதான் சொல்ல முடியும். ஆனால் இலங்கையைப் பொறுத்த மட்டில், பல முறை போர் நிறுத்தம் செய்யப்படும். பேச்சு நடக்கும்; தோல்வியடையும்; மீண்டும் போர் தொடங்கும். மீண்டும் மீண்டும் இதுதான் நடக்கிறது. காரணம் என்ன?சிங்கள அரசும் சரி, விடுதலைப் புலிகளும் சரி பேச்சுவார்த்தை-யின் மூலம் தீர்வில் நம்பிக்கை வைக்கவே இல்லை. இருவருமே ராணுவத் தீர்வைத்தான் விரும்பு-கிறார்கள். புலிகளை அடியோடு அழித்துவிடமுடியும் என்று சிங்கள அரசு நம்புகிறது. ஒரு மறு தயாரிப்புக்குப் பின் இம்முறை யுத்தத்தில் தனி ஈழத்தை அடைந்து விடுவோம் என்று புலிகள் நம்புகின்றனர்.

ஒரு பக்கம், சிங்கள அரசின் தாக்குதலை நிறுத்த வைக்கவும், அந்த ஓய்வுக் காலத்தில் மறுபடியும் அடுத்த சுற்றுப் போருக்குத் தயாராவதற்காகவும், சிங்கள அரசுக்கு நெருக்கடி கொடுக்க இந்திய அரசை நிர்ப்பந்திக்க, தாய்த் தமிழகத்தில் உள்ள நம்முடைய மனித நேய உணர்வுகளையும், தமிழ் இன உணர்வுகளையும் விடுதலைப்புலிகள் பயன்படுத்த முயற்சிக்கின்றனர். இன்னொரு பக்கம், இந்தப் பிரச்னையில் இந்திய அரசுக்கு ஏற்பட்டுவிட்ட அலுப்பையும், இந்திய அரசு தலையிட பயப்படும் தயக்கத்தையும், இந்திய அரசில் இருக்கும் தன் சார்பாளர்களையும் பயன்படுத்தி, இந்திய அரசின் ஆதரவுடனேயே புலிகளை போரில் வீழ்த்திவிடலாம் என்று சிங்கள அரசு நினைக்கிறது.இந்த சக்திகளின் அரசியல் சதுரங்கத்தில் , இடையில் சிக்கித் தவிப்பவர்கள் சாதாரண ஈழத்தமிழர்களும், இங்குள்ள சாதாரணத் தமிழர்களாகிய நாமும்தான். கருணாநிதி, ஜெயலலிதா, ராமதாஸ், வைகோ, விஜயகாந்த் என்று அத்தனை தமிழக அரசியல் தலைவர்களும் எப்போதும் போல, நமது மனிதாபிமான உணர்வையும் தமிழ் உணர்வையும் தங்களுக்கு சாதகமாக ஆக்கிக் கொள்ள முயற்சிக்-கிறார்கள். ஆனால் இவர்களில் ஒருவராவது வரும் மக்களவைத் தேர்தலில் , ஈழத்தமிழர் பிரச்னையை இங்கே தங்கள் பிரதான தேர்தல் பிரச்னையாக அறிவிப்பார்களா? முடியாது.

இலங்கை அரசையும் புலிகளையும் போரை நிறுத்த வைத்து பேச்சு வார்த்தைக்குக் கொண்டு வர கடும் நடவடிக்கை எடுக்கும் கட்சியையே மத்திய அரசில் அமரவைப்போம், அப்படிப்பட்ட கட்சியுடன்தான் கூட்டணி அமைப்போம் என்று சொல்லுவார்களா? மாட்டார்கள். எரிகிற ஈழ நெருப்பில் குளிர் காய்வதோடு சரி.ஈழத்தமிழர்களுக்காக இப்போது ராமேஸ்வரத்தில் ஊர்வலம் நடத்தப் போகும் தமிழ் சினிமாக்காரர்களின் யோக்யதை என்ன? டி.ராஜேந்தரின் மகன் சிம்புவும் நடிகை சிநேகாவும் அண்மையில்தான் இலங்கையில் சிங்களப்பகுதியான கண்டியில் போய் காதல் பாட்டுக்கான படப்பிடிப்பில் கலந்துகொண்டார்கள். அதே வேளையில், சிங்கள அரசு தமிழர்கள் மீது குண்டு வீசிக் கொண்டுதான் இருந்தது. அதற்காக படப்பிடிப்பும் நிற்கவில்லை. தினமும் காசினோவுக்குப் போய் சூதாடுவதும் நிற்கவில்லை. நாளைக்கு ராமேஸ்வரத்தில் சினிமா நடிக, நடிகையர் ஊர்வலம் போகும்போது என்ன நடக்கும்? வேடிக்கை பார்க்கும் கும்பலில் `டேய், அதோ நமீதாடா டேய்' என்பான் ஒரு விடலை. `இல்லைடா. நமீதா இன்னும் பெரிசா இருப்பாடா. இது வேற எவளோ' என்பான் இன்னொரு விடலை. இப்படிப்பட்ட ரசனையைத்தானே நம் சினிமாக்கள் அதிகமாக வளர்த்துவைத்திருக்கின்றன. இந்தக் கொடுமையெல்லாம், எந்த நேரமும் மரணத்துள் வாழும் ஈழத்தமிழர் பெயரால், ராமேஸ்வரம் தெருவில் நடக்க வேண்டுமா?

சினிமாக்காரர்கள், தயவுசெய்து ஊர்வலத்தை ரத்து செய்துவிட்டுக் கீழ்வரும் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

1. உங்கள் ஒரு நாள் ஊதியத்தையேனும் கொடுத்து, போரில் பாதிக்கப்பட்டிருக்கும் ஈழத்தமிழர்களுக்கு மருந்தும் உணவும் வாங்கி செஞ்சிலுவை சங்கத்தின் மூலம் அனுப்புவதற்கு ஏற்பாடு செய்யுங்கள். அதைத் தடுக்கும் மத்திய அரசைக் கண்டியுங்கள்.

2. குடியரசுத் தலைவரை சென்று சந்தித்து உறைக்கிற மாதிரி சொல்லுங்கள். தமிழர்களுடைய பிரச்னையில் தலையிட, உதவி செய்ய, மத்திய அரசு தயங்குவதைக் கண்டித்து அத்தனை தமிழ்ப்படைப்பாளிகளும், இதுவரை தமிழ்ப்படங்களுக்காகத் தங்களுக்குக் குடியரசுத்தலைவர் கொடுத்த அத்தனை தேசிய விருது-களையும் திருப்பித் தருவதாக அறிவியுங்கள். இதை டெல்லிக்குப் போய் செய்தால், நாடு முழுவதும் அதிர்வுகள் ஏற்படும்.

3. ஈழத்தமிழர் பிரச்னை பற்றி எடுக்கப்பட்ட `ஆணி வேர்' போன்ற படங்களை தமிழகம் முழுவதும் உங்கள் படங்கள் ஓடும் திரையரங்குகளில் ஒரு காட்சியை மட்டுமாவது ரத்து செய்துவிட்டு, இலவசமாக மக்களுக்குப் போட்டுக் காட்டுங்கள். அடேய், நீ என்ன செய்யப் போகிறாய் என்கிறீர்களா? சிங்கள அரசு, விடுதலைப்புலிகள் இரு தரப்பின் படைகளையும், ஐ.நா. சபையின் அமைதிப் படைக் கண்காணிப்பில் வைத்துவிட்டு, ராஜபக்ஷேவும் பிரபாகரனும் ஒரே மேசை முன் உட்கார்ந்து விவாதித்து, தமிழர் சம உரிமைக்கான ஒப்பந்தத்தில் கையெழுத்துப் போடுவ-தும் அதற்கு மன்மோகன்சிங் சாட்சிக் கையெழுத்திடுவதும்தான் என் விருப்பம். இதை உங்களுடன் பகிர்ந்துகொள்வதற்கு மேல் எதுவும் செய்ய இயலாத ஓர் அற்ப எறும்பு நான்.றீ


இந்த வாரப் பூச்செண்டு


சுதந்திரம் பெற்று 61 வருடங்கள் கழித்தேனும் காஷ்மீருக்கு ரயில் பாதை அமைத்ததற்காக மத்திய அரசுக்கு இ.வா.பூ.


இந்த வாரக் குட்டு


கேரளத்தின் மலையாற்றூர் வனப் பகுதியில் படப்பிடிப்பின்போது விதிகளை மீறி அபூர்வ தாவரங்களை அழித்ததற்காக மணிரத்தினத் தின் படப்பிடிப்புக் குழுவினருக்கு இ.வா.குட்டு. முதலில் அப்படிப்பட்ட பகுதியில் படப்பிடிப்பை அனுமதித்ததற்காக வனத்துறை அதிகாரிகளுக்குசிறப்புக் குட்டு.


இந்த வாரக் கனவு


``பாராளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெறுவதற்காக தமிழக காங்கிரஸ் தலைவர்கள் `ஒற்றுமையாக'ச் செயல்படவேண்டும்.'' - மேலிடப் பார்வையாளர் கே.பி.பாலகிருஷ்ணன்.

THANKS  : KUMUTHAM

4 comments:

Anonymous said...

50 வது பதிவு நல்வாழ்த்துக்கள்

அத்திரி said...

நன்றி கடையம் ஆனந்த்

முரளிகண்ணன் said...

வாழ்த்துக்கள் அத்திரி. விரைவில் சதமடிக்க வாழ்த்துக்கள்.

இவ்வார ஓ பக்கங்களுக்கு உங்களுக்கு ஒரு ஓ

அத்திரி said...

நன்றி முரளி கண்ணன். நீங்க ஆரம்பித்து வைத்த சினிமாத் தொடர் பதிவு கலக்கிட்டு இருக்கு.