Friday, 31 October, 2008

ஈழம்- தேவை அரசியல் ஒற்றுமை

அனைத்துக் கட்சிக் கூட்டத்தின் முடிவின்படி சென்னையில் முதலில் மனிதச் சங்கிலி நடைபெறுவதாக இருந்தது. அந்த அணிவகுப்பில் மறுமலர்ச்சி தி.மு.கழகம் கலந்து கொள்ள இயலாத காரணம் அதன் அரசியல் உறவுகள்தான்.அதே சமயத்தில் ஈழப் பிரச்னையில் எவருக்கும் சளைத்தது அல்ல என்பதனைக் காட்டியாக வேண்டும். எனவே மனிதச் சங்கிலி நடைபெறுவதாக இருந்த அதே தினத்தில் ஒரு கருத்தரங்கிற்கு ஏற்பாடு செய்தது. அந்தக் கருத்தரங்கில் பேசிய அதன் தலைவர்கள் `தனித்தமிழ்நாடு _ ஆயுதம் ஏந்தவும் தயார் _ இங்குள்ள இளைஞர்களைத் திரட்டி ஆயுதம் ஏந்தி ஈழம் செல்வோம்' என்றெல்லாம் பேசினர்.

`இலங்கைத் தமிழர்களுக்காகவும் ஈழத் தமிழர்களுக்காகவும் எந்த அம்சத்தில் நாம் இணைந்து நிற்க முடியுமோ அந்த சந்திப்பில் இணைந்து நிற்போம்' என்று முதல்வர் அறிவித்தார். இதுதான் இன்றைய அவசரத்தேவை. அதற்காக அவர் அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டினார்.ஈழத் தமிழர்களுக்காக தன்னை அர்ப்பணித்திருக்கும் அய்யா நெடுமாறன்கூட அந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டார். அதனாலேயே அந்தக் கூட்டம் எடுக்கும் முயற்சிகள், முடிவுகள் வெற்றி மகுடம் சூடும் என்று எதிர்பார்க்கிறோம்.

தி.மு.கழகத்தோடு அய்யா நெடுமாறன் அவர்களுக்கு நீண்டகாலமாகவே கருத்து வேறுபாடு உண்டு. ஈழ மக்களுக்கு இன்றைய தேவை தமிழகத்தின் ஒற்றுமைதான். அந்த ஒற்றுமை ஒரே குரலில் ஓங்கி ஒலிக்க வேண்டும் என்பதுதான். ஆகவேதான் அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் அய்யா கலந்து கொண்டார். உட்பகை ஒற்றுமையைச் சிதறடிக்க ஜெயலலிதா என்ன சொன்னார்? என்ன சொல்கிறார்? `விடுதலைப் புலிகள் இயக்கத்தைத் தடை செய்ய வேண்டும் என்று நான்தான் போராடி வெற்றி பெற்றேன்' என்கிறார். இந்திய ராணுவத்தை அனுப்பி பிரபாகரனைக் கைது செய்து இரும்புச் சங்கிலிகளால் இழுத்து வர வேண்டும் என்று முன்னர் சொன்னார். விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாகப் பேசினார் என்பதற்காகவே வைகோவை பொடா சட்டத்தில் கைது செய்து காராக்கிருகத்தில் அடைத்தார். ஆனால் இன்றைக்கு வைகோ எங்கே நிற்கிறார்? அ.தி.மு.க.வோடு கரம் கோத்துக்கொண்டு ஈழ மக்களுக்காகத்தான் இன்னும் போராடுகிறேன் என்கிறார். அதனை மக்கள் நம்புவார்களா?
அ.தி.மு.க.வைப் போல அவரும் அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை. கருத்தரங்கம் என்று அவர் தனி ஆவர்த்தனம் செய்தது பற்றி செல்வி ஜெயலலிதா என்ன சொல்கிறார்?

`தனித்தமிழ்நாடு என்ற அளவிற்குத் துணிச்சலாகப் பேசுகிறார்கள். ஆயுதம் ஏந்துவோம் என்ற அளவிற்குப் பேச ஆரம்பித்துவிட்டார்கள். ஆட்சிப் பீடத்தில் நான் இருந்திருந்தால் அவர்களைக் கைது செய்திருப்பேன்' என்கிறார்.ஈழப்பிரச்னையை இப்போது உள்நாட்டு அரசியலின் லாவணிக் கச்சேரி ஆக்கிவிட்டார்கள். ஈழ மக்களுக்கு இதுதான் நாம் செய்யும் உதவியா?

அங்கே வன்னிக்காடுகளில் வனவிலங்குகளோடு வாழும் இரண்டரை லட்சம் ஈழத் தமிழர்களின் கண்ணீரில் லட்சிய தீபம் எரிந்து கொண்டிருக்கிறது.எத்தனையோ சோதனைகளைத் தாங்கி பட்டினி கிடக்கும் அவர்களுக்கு சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் உதவி செய்கிறது. அதனை நடு வழியிலேயே சிங்கள ராணுவம் பறித்துக் கொள்கிறது. சென்னை அனைத்துக் கட்சிக் கூட்டம் அறைகூவல் விடுத்த பின்னர்தான் முதன்முதலாக 750 டன் உணவுப் பொருள்கள் ஈழ மக்களின் கரங்களை எட்டியிருக்கிறது.சோவியத் யூனியனைத் தாக்கிய ஹிட்லர் படைகளை எதிர்த்துப் போராடிய செஞ்சேனை வீரர்களுக்குக் கிடைத்தது ஒரு நாளைக்கு ஒரே ஒரு ரொட்டித் துண்டு. இன்றைக்கு சிங்கள ராணுவத்தின் முப்படைத் தாக்குதலை எதிர்கொள்ளும் ஈழப் போராளிகளுக்குக் கிடைப்பது ஒரு நாைளக்கு ஒரே ஒரு இளநீர். இதுதான் உணவு. உணர்வுகள்தான் அவர்களுடைய நாடி நரம்புகளை - இதயத்தை நிரப்பிக் கொண்டிருக்கின்றன.

தமிழ் இன அழிப்பில் அனைத்து சிங்களக் கட்சிகளும் ராஜபட்சேக்களுக்குப் பின்னே அணிவகுத்து நிற்கின்றன. அதனால் வன்னிக்காடுகளில் ஈழத் தமிழர்களை வேட்டையாடுவதும் வங்கக் கடலில் மீனவத் தமிழர்களை வேட்டையாடுவதும் அவர்களுக்கு எளிதாக இருக்கிறது.இலங்கை அரசின் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் மட்டும் கடந்த இரண்டு ஆண்டுகளில் முப்பதாயிரம் தமிழ் இளைஞர்கள் கடத்தப்பட்டனர். அவர்களின் கதி என்ன என்பது பாசிச சிங்கள அரசிற்குத்தான் தெரியும்.

`அங்கே காட்டிலும் மேட்டிலும் கண்ணீரில் மிதக்கும் ரத்த உறவுகளுக்காகக் காலத்தோடு உதவுவோம். அதற்கு மத்திய அரசை அசைய வைப்போம்' என்று அனைத்துக் கட்சிக் கூட்டம் அறைகூவல் விடுத்தது. அதனைக் களத்தில் நிற்கும் போராளிகள் இரு கரம் விரித்து வரவேற்கிறார்கள். அதனால் இன்றைக்கு அவர்கள் ஆயிரம் யானை பலம் கொண்டு முன்னேறுகிறார்கள். ஆனால் அதற்குப் பாதகம் செய்யும் முறையில் இங்கே தனித் தமிழ்நாடு, ஈழத்திற்குப் படையோடு செல்வோம் என்று வாய் வீரம் பேசுகிறார்கள். அப்படிப் பேசுவதற்கு இதுவா நேரம்?

சிங்களவன் பூமி இலங்கை என்று அந்த நாட்டு ராணுவத் தளபதி கொக்கரிக்கிறார். இதன் பொருள் என்ன? ஈழத் தமிழனாயிருந்தாலும் இலங்கைத் தமிழனாக இருந்தாலும் அவர்கள் பொட்டுப்பூச்சிகள், அவர்கள் அடிமைகள் என்பதுதானே பொருள்?இந்தச் சூழலில் ஈழ மக்களுக்கு உடனடித் தேவை என்ன என்பதனை அனைத்துக் கட்சிக் கூட்டம் சுட்டிக் காட்டியிருக்கிறது. அதன் விளைவாக நாடாளுமன்றத்தில் வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி நல்ல அறிவிப்பினைச் செய்தார். இலங்கைத் தமிழர்களின் நலன் காக்கப்பட வேண்டும் என்பதில் சமரசத்திற்கு இடமில்லை என்று தெரிவித்திருக்கிறார்.

இன்னல்படும் ஈழ மக்களுக்கு உதவுவோம் என்று ஜப்பான் செல்லும் வழியில் பிரதமர் மன்மோகன் சிங் சொல்லியிருக்கிறார். இவர்கள் அறிவித்ததை செயல்படுத்தினாலே போதும். அதன் பின்னர்; அடுத்த அடி வையுங்கள் என்று அனைத்துக் கட்சிக் கூட்டம் வலியுறுத்தும். அதற்கு இங்கே நம்மிடையே ஒற்றுமை தேவை.தம்முடைய மைந்தனுக்கு பிரபாகரன் என்று பெயர் சூட்டிய விஜயகாந்தும் அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் அங்கம் பெற்றிருக்க வேண்டும் என்பது நமது கருத்து. தம்முடைய உணர்வுகளுக்குச் செயல்வடிவம் கொடுக்க வேண்டாமா?1980_களில் ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக எத்தகைய எழுச்சி ஏற்பட்டதோ அத்தகைய எழுச்சியின் அடித்தள நீரோட்டம் சூடேறிச் சுழன்று கொண்டிருக்கிறது. இளைஞர்கள், மாணவர்களின் உள்ளங்களில் எழுந்துள்ள எரிமலை பிரசவிக்கும் நேரம் நெருங்கிக் கொண்டிருக்கிறது.

பாஞ்சாலி துகில் உரியப்பட்டபோது பஞ்சபாண்டவர்கள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர். அவர்கள் தேவமைந்தர்கள். ஆனால் தங்கள் அன்னை சிங்களத் துப்பாக்கி முனையில் துகிலுரிக்கப்படுவதை அனுமதிக்கமாட்டார்கள். அவர்கள் ஈழத்து மனித குமாரர்கள்.ஈழத்து மக்களுக்காக வில் அம்பு ஏந்தி வருகிறோம் என்று நாம் வீரவசனம் பேசத் தேவையில்லை. ஏனெனில் இன்று வரை ஈழப்போராளிகள் எவருடைய உதவியையும் கோரியதில்லை. நாடியதில்லை. எங்கெல்லாம் தமிழர்கள் வாழ்கிறார்களோ அவர்களெல்லாம் ஒன்றுபட்டுத் தங்களுக்கு ஆதரவாகக் குரல் கொடுத்தால் போதும் என்றுதான் கூறுகிறார்கள்.
தமிழ் இன அழிப்பு நிறுத்தப்படவில்லையென்றால் ஈழம் என்று நாம் குரல் கொடுக்கத் தேவையில்லை. சிங்களப் பேரினவாதமே அதனை பெற்றெடுத்துத் தரும்.

நன்றி குமுதம் ரிப்போர்ட்டர்

4 comments:

Anonymous said...

http://puthiyamalayagam.blogspot.com/2008/10/blog-post_30.html

பாபு said...

எல்லாத்துலேயும் அரசியல் பண்றதுதான் ,நம்ம ஆளுங்களுக்கு கை வந்த கலை
என்ன பண்றது?

அத்திரி said...

//எல்லாத்துலேயும் அரசியல் பண்றதுதான் ,நம்ம ஆளுங்களுக்கு கை வந்த கலை
என்ன பண்றது?//

அதே போல எல்லா விசயத்தையும் அரசியல் நோக்கோடு பார்ப்பது நம் மக்களின் வேலையாகிவிட்டது

அகில் said...

It is funny to see Hindu Ram has been awarded several awards by SL govt.

It seems obvious that he is in the "pay roll" of SL govt for his anti-tamil "Preaching" using his newspaper! What a traitor!

He should feel ashamed of getting such awards if he is a Tamil esp when Tamils are suffering.

Apparently, he sounds like a Hindutava rather than a Tamil. May be that is why he runs a "hindhu" newspaper!

He is a filthy RAT!

akil
akilpreacher.blogspot.com