Saturday, December 6, 2008

இவ்வாரம் ஞாநியின் பார்வையில்--உள்ளூர் பயங்கரம்

நூறு பேரை சுட்டுக் கொன்ற பயங்கரவாதிகளுக்கு நிகரான பயங்கரவாதிகள் இருக்க முடியுமா? ஆங்கில டி.வி சேனல்கள்தான் அப்படிப்பபட்டவர்களாக எனக்கு இப்போது தெரிகிறார்கள். மழையில் மூழ்கிய சென்னைக்குத் திரும்புவதை விட மும்பையில் இருப்பதே பாதுகாப்பானது என்று சென்னை நண்பர்கள் எச்சரித்ததால், மும்பை வீட்டிலேயே மேலும் ஒரு வாரம் இருந்தபோது தொடர்ந்து 60 மணி நேர மீடியா பயங்கரவாதத் தாக்குதலை நான் அனுபவிக்க நேர்ந்தது.திரும்பத் திரும்ப ஒரு பொய்யைச் சொல்லி நம் தலைக்குள் அதைப் பதியவைக்க முயற்சி செய்துகொண்டே இருந்தன இந்த டி.வி சேனல்கள். இந்தியாவின் அடையாளச் சின்னமான ஹோட்டல் தாஜ் தாக்கப்பட்டுவிட்டது என்று இன்னமும் புலம்பிக் கொண்டே இருக்கிறார்கள். எந்த இந்தியாவில் யாருடைய அடையாளச் சின்னம் ஹோட்டல் தாஜ் ?


மும்பையில் முதலில் தாக்குதலுக்கு உள்ளான சத்ரபதி சிவாஜி ரயில் நிலையம் தான் மும்பையின் உண்மையான அடையாளச் சின்னம். இங்குதான் இந்தியாவின் எல்லா மாநிலங்களிலிருந்தும் குறிப்பாக பீஹார், உத்தரப் பிரதேசம், மேற்கு வங்கம், தமிழ்நாடு முதலியவற்றிலிருந்து சக இந்தியர்கள் தினசரி வந்து இறங்கி மும்பையையும் தங்களையும் கடும் உழைப்பால் வளர்த்துக் கொண்டிருக்கிறார்கள்.


இந்த ரயில் நிலையத்தின் நடை மேடையில்தான் அறுபது பிணங்கள் முதலில் விழுந்தன. ஆனால் இன்று வரை ஒரு சேனலும் இந்த ரயில் நிலையக் காட்சிகளைக் காட்டவில்லை. நட்சத்திர ஓட்டல்களான தாஜ், ஓபராய் இரண்டிலும் உடைந்த சோபாக்கள், எரிந்த திரைச் சீலைகளைக் காட்டுவதற்கு இந்தியாவின் நம்பர் ஒன் பெண் டி.வி அறிவிப்பாளர் பர்க்கா தத் முண்டியடித்துக் கொண்டு காமராவுடன் அலைகிறார். ஆனால் அரசு மருத்துவமனையில் இன்னமும் அடையாளம் தெரியாமல் கிடந்துகொண்டிருக்கும் ரயில் நிலையப் பிணங்களையோ, அடையாளம் தெரிந்த பிணங்களைப் பெற்றுச் செல்ல சாதாரண மக்கள் படும் பாட்டையோ எந்த டி.வி சேனலும் கண்டுகொள்ளவே இல்லை.


பயங்கரவாதத் தாக்குதல்களினால் மும்பை நகரமே ஸ்தம்பித்துப் போய் விட்டதைப் போன்ற ஒரு மாயத் தோற்றத்தை இந்த சேனல்கள் ஏற்படுத்தின. அப்படி எதுவும் நடக்கவில்லை. சிவாஜி ரயில் நிலையம் மறு நாள் விடியற்காலையிலிருந்து இயங்கத் தொடங்கிவிட்டது. பயங்கரவாதிகளின் முற்றுகை நீடித்த இடங்களான ஹோட்டல் தாஜ், ஓபராய், நாரிமன் பவன் என்ற யூதர் குடியிருப்புக் கட்டடப் பகுதிகளைத் தவிர மீதி மும்பை சகஜமாக செயல்பட்டுக் கொண்டுதான் இருந்தது.மும்பையின் சாதாரண மக்களின் அன்றாட வாழ்க்கையில் தாஜ், ஓபராய் ஹோட்டல்களுக்கு எந்தத் தொடர்பும் இல்லை. மும்பையின், இந்தியாவின், உலகத்தின் மிகப் பெரும் பணக்காரர்கள் மட்டுமே புழங்கும் இடங்கள் அவை. தாக்குதலைப் பதிவு செய்ய 60 மணி நேரம் தாஜ் ஓட்டலுக்கு வெளியே முகாமிட்டிருந்த சுமார் 300 டி.வி நிருபர்கள், ஒளிப்பதிவாளர்களில் பத்துப் பதினைந்து பேரைத் தவிர வேறு யாரும் சாதாரண நாட்களில் அந்த ஹோட்டலுக்குள் போய் ஒரு காபி கூடக் குடிக்க முடியாது.


தினசரி 60 லட்சம் பயணிகளை காலையும் மாலையும் சுமந்து சென்று வரும் மும்பையின் உள்ளூர் ரயில்களில் குண்டு வெடித்தபோது, அதில் நூற்றுக்கணக்கான சாதாரண மக்கள் இறந்தபோது, மும்பை நகரமே தாக்கப்பட்டுவிட்டதாகவோ, இந்தியாவே தாக்கப்பட்டுவிட்டதாகவோ கூக்குரல் எழுப்பாத இந்த சேனல்கள், நட்சத்திர ஓட்டல்கள் மீதான தாக்குதல்களின் போது மட்டும் ஓவராக புலம்பி வருவது ஏன் ?


இந்தியாவை ஆட்டிப் படைக்கும் அதிகார சக்திகளின் சந்திப்பு இடம் இவை. பெரும் தொழிலதிபர்கள், உலக வர்த்தகர்கள், அரசியல் பிரமுகர்கள், இடைத்தரகர்கள், சினிமா நட்சத்திரங்கள், சினிமா, அரசியல், பயங்கரவாதம் அத்தனைக்கும் நிதியுதவி வழங்கும் மாஃபியா ரவுடி கும்பல் தலைவர்கள் தினசரி இந்த ஹோட்டல்களில்தான் சந்திக்கிறார்கள். நடைபாதையில் தூங்கும் சாதாரண மக்கள் மீது கார் ஏற்றிக் கொன்றுவிட்டு, காரை ஓட்டியது தானல்ல, டிரைவர்தான் என்று இன்னொரு சாதாரண மனிதனைச் சிறைக்கு அனுப்பி வைக்கும், பணக்கார வீட்டுப் பொறுக்கி வாரிசுகள்தான் லியோபோல்ட் கிளப்புகளின் முக்கிய வாடிக்கையாளர்கள்.
அதிகாரத்தின் சின்னம் இந்த ஹோட்டல். தேசத்தின் சின்னமோ, மக்களின் சின்னமோ அல்ல.


அதனால்தான் பயங்கரவாதிகள் இந்த முறை இதைத் தேர்ந்தெடுத்துத் தாக்கியிருக்கிறார்கள். சாதாரண மக்களைத் தாக்கி எந்தப் பயனும் இல்லை என்பது பயங்கரவாதிகளுக்கும் புரிந்து விட்டது. மார்க்கெட்டில், பஸ்களில், ரயிலில் குண்டு வைத்தால், சாதாரண மக்கள் சாகிறார்கள். ஆனால், மறு நாளே சகஜ நிலைக்கு வந்துவிடுகிறார்கள். எதுவுமே நடக்காதது போல அவரவர் வேலைக்குப் போகிறார்கள். ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்களும், சாதாரண மக்கள் சாகும்போது, எதுவுமே நடக்காதது போல தங்கள் ஊழல் அராஜக ஆட்சிப் பணிகளைத் தொடர்கிறார்கள். நட்சத்திர ஓட்டல்களை தாக்கிய வுடன்தான் அதிகார சக்திகளுக்கு பதற்றம் ஏற்படுகிறது. அவர்களை அண்டிப் பிழைக்கும் டி.வி சேனல்கள் எல்லாம் ஒப்பாரி வைக்கின்றன. `பொறுத்தது போதும். பொங்கி எழு' என்கின்றன.


பஸ், ரயில், மார்க்கெட் குண்டு வெடிப்புகளில் மறு நாளே நகரம் சகஜ நிலைக்குத் திரும்பியபோது, அதை `ஸ்பிரிட் ஆஃப் மும்பை', `விழ விழ, எழுவோம்' என்றெல்லாம் கொண்டாடியவர்கள் இவர்கள். ஏனென்றால் அடுத்த நொடியிலேயே சாதாரண மனிதன் சகஜ நிலைக்குத் திரும்பியதால்தான், இந்தப் பணக்காரர்களுடைய ஆலைகள், அலுவலகங்கள், ஓட்டல்கள், சினிமா படப்பிடிப்புகள் எல்லாம் தடையின்றி இயங்க முடிந்தது. தங்கள் தொழிலுக்கு பாதிப்பு வராதவரை அது `ஸ்பிரிட் ஆஃப் மும்பை.'


இப்போது இந்தப் பெரும் பணக்காரர்களே நேரடியாகத் தாக்கப்படும்போது, பொறுத்தது போதும் பொங்கி எழு என்று சாதாரண மக்களைத் தூண்டி விடுகிறார்கள். தங்கள் நீச்சல் குளங்களுக்கும், குடித்து கும்மாளம் போடும் ரெஸ்டாரண்ட்டுகளுக்கும் பாதுகாப்பு தரவேண்டியது அரசின் கடமை என்று அதை நெருக்குகிறார்கள். திவாலாகும் வரை லாபம் எல்லாம் தங்களுடையது. திவாலானால், காப்பாற்றவேண்டியது அரசின் பொறுப்பு என்று சிட்டி பேங்க் முதல் ஜெனரல் மோட்டார்ஸ் வரை சொல்லும் அதே அணுகுமுறை.


காவல் அதிகாரிகள் முதல் கமாண்டோக்கள் வரை பலர் உயிரிழந்தது பெரும் தியாகம் என்பதில் துளியும் சந்தேகமில்லை. ஆனால் அறிவைப் பயன்படுத்தாத தியாகத்துக்கு ஒரு அர்த்தமும் இல்லை. மாலேகாவ்ன் குண்டு வெடிப்பு புலனாய்வுக் குழுவின் தலைவர் கர்காரேவும் இன்னும் இரு உயர் போலீஸ் அதிகாரிகளும் ஒரே ஜீப்பில் சென்று பயங்கரவாதிகளின் குண்டுகளுக்கு இரையானது முட்டாள்தனமானது. உயர் தலைமையில் இருப்பவர்கள் நெருக்கடியான நேரங்களில் ஒன்றாகப் பயணம் செய்வது கூடாது என்பது அடிப்படை விதி. பிரதமரும் ஜனாதிபதியும் ஒரே காரில் வருவதில்லை. இந்த சாதாரண அடிப்படை விதிகளைக் கூடப் பின்பற்றாமல் உயிர்த் தியாகம் செய்வதில் என்ன பயன்?


பேட்டி தந்த கடற்படை கமாண்டோவின் தலைவர், முகம் தெரியக்கூடாது என்று ஒரு துணி கட்டியிருக்கிறார். சினிமா கதாநாயகிகள் போடுகிற மாராப்பு மாதிரி; உள்ளே இருப்பதெல்லாம் தெரிவதற்கென்றே போடுகிற மறைப்பு போல. தாஜ் ஓட்டலின் உட்புற அமைப்பு எப்படி இருக்கும் என்று கமாண்டோக்களுக்குத் தெரியாதாம். அதனால் கடுமையாகப் போராட வேண்டியிருந்ததாம். ஆனால் பயங்கரவாதிகளுக்கு ஒட்டலின் அத்தனை பகுதிகளும் அத்துப்படி என்று அவரே சர்ட்டிஃபிகேட் தருகிறார்.
பல மணி நேரம் போட வேண்டிய சண்டை என்று தெரிந்தே செல்கிற கமாண்டோக்கள், ஏன் மேலும் ஒரு மணி நேரம் ஓட்டலின் வரைபடத்தைப் பார்த்துப் படித்து திட்டமிட்டுவிட்டு நுழைந்திருக்கக்கூடாதா ? ஓட்டல் அதிபர் ரத்தன் டாட்டா நினைத்தால் அரை மணி நேரத்தில் ஓட்டலின் வரைபடத்தை வரவழைத்துத் தரமுடியாதா ? பயங்கரவாதிகளிடம் சேட்டிலைட் படங்களெல்லாம் இருந்ததாம். ஏன், அதெல்லாம் இந்திய அரசிடம் கிடையாதா ?


இந்தக் கேள்விகளையெல்லாம் எழுப்பாத டி.வி.சேனல்கள், வசதியாக எல்லா பிரச்சினைகளுக்கும் அரசியல்வாதிதான் காரணம் என்று குற்றம் சாட்டுவதை, ஒரு இயக்கமாக ஒரு வாரமாக செய்து வருகின்றன. தேசத்துக்கே நெருக்கடியான இந்த நிலையில் பிரதமர் மன்மோகன் சிங்கும் எதிர்க்கட்சித் தலைவர் அத்வானியும் மும்பைக்கு சேர்ந்து வரக்கூடாதா, தனித்தனியாக வரவேண்டுமா என்று ராஜ்தீப்பும் அர்னாபும் கேட்கிறார்கள். தேச நெருக்கடி என்றால் அரசியல்வாதிகள் கருத்து வேறுபாட்டை ஒதுக்கிவிட்டு ஒன்று சேரவேண்டுமாம். அந்த நேரத்தில் அரசியல் செய்யக்கூடாதாம். சரி. சேனல்கள்? அவை எப்படி நடக்க வேண்டும்? அவையும் ஒவ்வொரு இடத்துக்கும் தனித் தனி கேமரா, தனித் தனி நிருபர் அனுப்பாமல், ஒளிப்பதிவை, பேட்டிகளை பகிர்ந்துகொள்ளலாமே. மிச்சப்படும் நிறைய பேரை இன்னும் அதிக இடங்களுக்கு அனுப்பலாமே. மாட்டார்கள். சேனல்களில் பத்து நிமிடத்துக்கொரு முறை என்ன சொன்னார்கள் தெரியுமா? `இந்த செய்தி எங்கள் சேனலின் பிரத்யேக செய்தி. இதை முதலில் சொன்னது நாங்கள்தான்.'


தேச நெருக்கடியில் நீங்கள் இப்படி வியாபாரம் செய்யலாமென்றால், அரசியல்வாதி அரசியல் செய்யக் கூடாதா ?உண்மையில் அரசியல் செய்வது சேனல்கள்தான். இந்த நாட்டின் பெரும் பணக்காரர்கள் சார்பான அரசியல். சாதாரண மக்கள் தாக்கப்படும்போதெல்லாம் பொறுத்தது போதும் பொங்கி எழு என்று சொல்லாதவர்கள், நட்சத்திர ஓட்டல் தாக்கப்பட்டதும் பொங்கி எழச் சொல்லி தூண்டுகிறார்கள். அமிதாப், அமீர்கான் எல்லாரும் இணையத்தில் புலம்புகிறார்கள்.


சேனல்களின் தொடர் பிரசார அரசியல் வெற்றி பெறுகிறது என்பது இன்னொரு வேதனை. பாபர் மசூதி இடிப்புக்கு, பாராளுமன்றம் தாக்கப்பட்டதற்கு, பஸ், ரயில் குண்டு வெடிப்புகளுக்கு, குஜராத் கோவில் தாக்குதலுக்கு, முஸ்லிம்கள் படுகொலைக்கு, ஆயிரக்கணக்கான விவசாயிகள் கடன் தற்கொலைக்கு ராஜினாமாக்கள் இல்லை. ஆனால் நட்சத்திர ஓட்டல் தாக்குதலுக்கு ஒரு மத்திய உள்துறை அமைச்சர், மாநில முதலமைச்சர், உள்துறை அமைச்சர் என்று மூன்று தலைகள் உருட்டப்பட்டிருக்கின்றன.எல்லா அரசியலும் எல்லா அரசியல்வாதியும் மோசம் என்ற கருத்தை இந்த சேனல்கள் பரப்புகின்றன. ஒரு சர்வாதிகாரி நாட்டுக்குத் தேவை என்ற மனநிலையை மறைமுகமாகப் பரப்புகின்றன. சர்வாதிகாரிகளும் பயங்கரவாதிகளும்தான் பணக்காரர்களுக்கு உகப்பானவர்கள். ஏனென்றால் பேரம் பேச வசதியானவர்கள் அவர்கள்தான். ஜனநாயகத்தின் அரசியல்வாதிகள் ஒரு கட்டத்துக்கு மேல் மக்களுக்கு பயந்தாக வேண்டும். மக்களின் கோபத்தைத் தூண்டிவிட்டு அரசியல்வாதிகளின் மீதான ஒட்டுமொத்த அவ நம்பிக்கையை ஏற்படுத்துவது ஜனநாயகத்துக்கே ஆபத்தானது. எல்லை கடந்த பயங்கரவாதத்தை விட ஆபத்தானது இந்த உள்ளூர் பயங்கரவாதம். கத்தியின்றி ரத்தமின்றி நடத்தப்படும் இந்த யுத்தம் நம் உடல் மீது அல்ல, உள்ளத்தின் மீது, சிந்தனை மீது. உஷாராக இருப்போம்.

நன்றி குமுதம்.

18 comments:

பாபு said...

நானும் படித்தேன் ,மிக சரியாக சொல்லி இருக்கிறார்
இப்ப எல்லாம் NDTV,CNN-IBN,TIMES NOW பார்த்தா ஒரே எரிச்சலா இருக்கு

Anonymous said...

அத்திரி சார்,

நலமா?

\\ நூறு பேரை சுட்டுக் கொன்ற பயங்கரவாதிகளுக்கு நிகரான பயங்கரவாதிகள் இருக்க முடியுமா? ஆங்கில டி.வி சேனல்கள்தான் அப்படிப்பபட்டவர்களாக எனக்கு இப்போது தெரிகிறார்கள் \\

நான் சட்டக் கல்லூரி கலவரத்தில் தமிழ் தொலைக் காட்சிகளும் இதே போலத்தான் நடந்து கொண்டன, ஊடகங்கள் சமூகப் பொறுப்புணர்வுடன் நடந்து கொள்வது அவசியம்...

Anonymous said...

where are Gnani's critics? Dont have a heart to appreciate if he is right?

அத்திரி said...

நன்றி பாபு. மீடியாக்கள் இந்த விசயத்தில் ரொம்ப ஓவரா பண்ணினாங்க.
ஆனா இந்த சம்பவத்திற்குபின்னால் எழை-- பணக்காரன் வித்தியாசம் இருப்பது மிகக் கொடூரம்.

அத்திரி said...

நன்ரி அறிவிழி.

மீடியாக்கள் தங்களுக்கு வேண்டியவர்கள் சம்பந்தப்பட்டிருந்தால் அமைதியாகி கன்டும் காணாமல் இருப்பது. வேண்டாதவர்கள் என்றால் போட்டு தாக்குவது இயல்பான விசயமாகிப்போனது தான் கொடுமை

Anonymous said...

ஞாநியும் ஒரு ஜர்னலிஸ்டதானே.அவர் ஏன் CSTக்குப் போய் ஒரு விடியோ காமிராவுடன் நடந்தை பதிவு செய்யவில்லை.citizen journalism
என்று தொலைக்காட்சி சானல்கள் சாமன்யர்கள் அனுப்புவதையும் ஒளிபரப்புகிறார்களாமே, ஞாந்யும் அதை செய்திருக்கலாமே?.
மீடியாக்களை குறை சொல்லி
தீவிரவாதம் பற்றிய விவாதத்தை
திசை திருப்பதான் அவர் இதை
எழுதியிருக்கிறார். CSTல் தொடர்ந்து சண்டை/தாக்குதல் இல்லை,ஆனால்
தாஜ்,டிரைடெண்ட், நரிமான்
ஹெசில் இருந்தது.அதுதான்
ஊடகங்கள் அந்த மூன்றிற்கு
கொடுத்த முக்கியத்துவத்திற்கு
காரணம்.ஞாநிக்கு இது
புரியவில்லையா?

Anonymous said...

ரொம்ப குழப்பரீங்கையா!!

முரளிகண்ணன் said...

very nice view

அத்திரி said...

//ஞாநியும் ஒரு ஜர்னலிஸ்டதானே.அவர் ஏன் CSTக்குப் போய் ஒரு விடியோ காமிராவுடன் நடந்தை பதிவு செய்யவில்லை.citizen journalism
என்று தொலைக்காட்சி சானல்கள் சாமன்யர்கள் அனுப்புவதையும் ஒளிபரப்புகிறார்களாமே, ஞாந்யும் அதை செய்திருக்கலாமே?.
மீடியாக்களை குறை சொல்லி
தீவிரவாதம் பற்றிய விவாதத்தை
திசை திருப்பதான் அவர் இதை
எழுதியிருக்கிறார். CSTல் தொடர்ந்து சண்டை/தாக்குதல் இல்லை,ஆனால்
தாஜ்,டிரைடெண்ட், நரிமான்
ஹெசில் இருந்தது.அதுதான்
ஊடகங்கள் அந்த மூன்றிற்கு
கொடுத்த முக்கியத்துவத்திற்கு
காரணம்.ஞாநிக்கு இது
புரியவில்லையா?//

தங்களுடைய சேனல்களின் ரேட்டிங்கை அதிகப்படுத்தவும், ஒரு சில விசயங்களுக்கு வளைந்து கொடுக்கும் மீடியாக்களை குறை சொல்லுவதில் தவறில்லை.சிஎஸ்டி ரெயில் நிலையத்தில் நடந்த மற்றும் இறந்தவர்களை பற்றி எந்த மீடியாவாவது கொஞ்ச நேரமாவது சொன்னார்களா?.
மீடியாக்க‌ளுமா இந்த‌ ஏழை ப‌னண‌க்கார‌ன் வித்தியாச‌த்தை பார்ப்ப‌து./
மெட்ரோ ந‌க‌ர‌ங்க‌ளில் தீவிர‌வாத‌ செய‌ல்க‌ள் ந‌ட‌ந்தால் அய்யோ என்று க‌த்தும் மீடியாக்க‌ள் வ‌ட‌கிழ‌க்கு மாநில‌ங்க‌ளில் ந‌ட‌ந்தால் ஏதோ ஒப்புக்கு சொல்லிவிட்டு கண்டுக்காமல் விடும் செயலுக்கு என்னன்னு சொல்லலாம் பெயரில்லாதவரே. ஒரு வேலை வடகிழக்கு மாநிலங்களில் உள்ள தொழில் அதிபர்களிடம் இருந்து ஒன்றும் கிடைக்கவில்லையோ?

நன்றி பெயரில்லாதவரே.

அத்திரி said...

//ரொம்ப குழப்பரீங்கையா!!//

என்ன குழப்பம் பெயரில்லாதவரே

அத்திரி said...

நன்றி முரளி

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

மிக முக்கியமான கட்டுரையிது. நிச்சயம் இதற்காக ஞாநிக்கு ஒரு ஓ போடலாம்!

அத்திரி said...

நன்றி ஜ்யோவ்ராம் ஐயா

கார்க்கிபவா said...

//பெயரில்லா கூறியது...
where are Gnani's critics? Dont have a heart to appreciate if he is riக்ஹ்ட்?//

பெயரில்லாதவரே ஆடிக்கு ஒரு நாள் அமாவாசைக்கு ஒரு நாள் ஏதாவ்து உருப்படியாய் எழுதும் ஞாநியை நாங்கள் வாசிப்பதை நிறுத்தி விட்டோம். உங்கள் கேள்வியே ஒப்புக் கொள்கிறது அவர் இந்த விஷயத்தில் மட்டும் தான் ரைட் என்று.


@அத்திரி,

ஏன் இதை வாராவாரம் போடறீங்க சகா? படிக்க நினைப்பவர்கள் குமுதம் வாங்கி படிக்கட்டுமே

RAMYA said...

நீங்கள் கூறுவது மிகவும் சரியானதுதான் அத்திரி. நான் இப்போ எல்லாம் TV பார்ப்பதே கிடையாது,

உண்மைகளை நன்றாக வெளிச்சம் போட்டு காட்டி இருக்கீங்க,
வாழ்த்துக்கள்

மங்களூர் சிவா said...

/
ஜ்யோவ்ராம் சுந்தர் கூறியது...

மிக முக்கியமான கட்டுரையிது. நிச்சயம் இதற்காக ஞாநிக்கு ஒரு ஓ போடலாம்!
/

கண்டிப்பாக.

அத்திரி said...

//ஏன் இதை வாராவாரம் போடறீங்க சகா? படிக்க நினைப்பவர்கள் குமுதம் வாங்கி படிக்கட்டுமே//

சகா ஆரம்பத்துல இருந்து இந்த கட்டுரையைத்தான் போட்டுக்கிட்டு இருக்கேன். கொஞ்ச கொஞ்சமா நிறுத்திடுறேன்.

அத்திரி said...

நன்றி ரம்யா

நன்றி மங்களூர் சிவா