Saturday, 11 October, 2008

மதுரை அரசியல்-- தடுமாரும் திமுக -- சோலை ரிப்போர்ட்டர்

தி.மு.கழக அரசியல் இன்றைக்கு மதுரையில் தடுமாறிக் கொண்டிருக்கிறது. தனியார் தொலைக்காட்சியின் கம்பிவடங்களை அறுத்தல், அந்தத் தொலைக்காட்சி வெளியிடும் திரைப்படங்களுக்கு இடையூறு என்ற போக்குக்காக முன்னணியில் நிற்பவர்களைப் பார்த்து மதுரை மக்கள் முகம் சுளிக்கிறார்கள். அதன் எதிரொலி தென் மாவட்டம் முழுக்கக் கேட்கிறது.இந்தப் பிரச்னை எங்கிருந்து ஆரம்பமானது? எந்த அரசியல் அனுபவமும் இல்லாத தயாநிதி மாறனை தி.மு.கழகம் நாடாளுமன்ற வேட்பாளராக நிறுத்தியது. வெற்றி பெற்றார். அவருடைய தந்தை முரசொலி மாறன் டெல்லி அரசியலில் பயிற்சி பெற்றவர். பக்குவப்பட்டவர். அதேபோல் தயாநிதி மாறன் தயாராவதற்கு அவருக்குக் கால அவகாசம் கொடுத்திருக்க வேண்டும். ஆனால் ஹெலிகாப்டரில் ஏற்றி கோபுரத்தின் உச்சியில் குந்த வைத்தனர். மத்திய அமைச்சரானார்.

அந்தக் கோபுரத்தின் உச்சியை இன்னும் ஸ்டாலினே தொடவில்லை. ஏணிப் படிகளில் அவர் ஏறிக் கொண்டிருக்கிறார். ஒவ்வொரு படியிலும் கால் வைப்பதற்குள் அவர் சந்திக்கும் சோதனைகள் எத்தனை? வேதனைகள் எத்தனை? மிசா சிறை என்றால் சாதாரணமானதா?ஆனால், அந்தத் தனியார் தொலைக்காட்சியும் அதன் நாளேடும் அதற்குள் தயாநிதி மாறனுக்கு புகழ் சேர்க்க ஆரம்பித்தன. மத்தியில் வீற்றிருக்கும் தமிழக அமைச்சர்களில் யாருக்கு செல்வாக்கு என்று ஒரு கருத்துக் கணிப்பு வெளியானது. தயாநிதி மாறனுக்குத் தான் ரொம்பச் செல்வாக்கு என்று அந்தக் கணிப்புச் சொன்னது.இந்தக் கருத்துக் கணிப்பு தி.மு.க. கூட்டணிக்கே வேட்டு வைப்பதாக இருந்தது. ஆனால், கோபுரத்தில் அமர்த்தப்பட்டவர்கள் ஆகாயத்தில் மாளிகை கட்டத் துடித்தனர். அதன் விளைவுதான் இத்தகைய கருத்துக்கணிப்புகளாகும். இதனை கலைஞரே கண்டித்தார்.

அதன் பின்னர், தி.மு.கழகத்தையே பாதிக்கும் இன்னொரு கருத்துக் கணிப்பை அந்தத் தொலைக்காட்சியும் நாளேடும் வெளியிட்டன. கலைஞரின் அரசியல் வாரிசை அவருடைய குடும்பத்திற்குள்ளேயே தேடின. அந்த வாரிசு ஸ்டாலின்தான் என்பது ஏற்கெனவே எழுதி வைக்கப்பட்டுவிட்ட சாசனம். ஆனாலும் கலைஞருக்கு வாரிசு யார் என்று அப்போது அந்தப் பிரசார சாதனங்கள் தேட வேண்டிய தேவை இல்லை. அதற்கு அவசியமும் இல்லை.அந்தக் கருத்துக் கணிப்பை வெளியிட வேண்டாம் என்று கலைஞர் இருமுறை கேட்டுக் கொண்டதாகத் தகவல்கள் வந்தன. ஆனாலும் அந்தக் கணிப்புகள் வெளியிடப்பட்டன.`தி.மு.கழகத்தில் கனிமொழிக்கும் அழகிரிக்கும் செல்வாக்கு இல்லை' என்று அந்தக் கணிப்பு அவர்களை அப்புறப்படுத்தியது. அப்படி ஸ்டாலினை அவசரப்பட்டு அகற்றிவிட முடியாது. ஆகவே, ஸ்டாலினுக்கு அடுத்து தயாநிதி மாறன் என்று அக்னி அம்பை அந்த ஊடகங்கள் எய்தன. இன்னும் சில மாதங்கள் சென்றிருந்தால் கலைஞருக்கு வாரிசு தயாநிதி மாறன்தான் என்று அந்தக் கருத்துக் கணக்காளர்கள் கணக்குப் பண்ணிச் சொல்லியிருப்பார்கள்.கருத்துக் கணிப்புக்கள் ஓர் அரசியல்வாதியை உயர்த்த முடியாது. மக்கள் மன்றமும் தொண்டும் தான் தீர்மானிக்கும். ஆனால், அந்தத் தொலைக்காட்சியும் நாளேடும் தயாநிதி மாறனை பறக்கும் கம்பளத்தில் ஏற்றிவிட்டன.அவரை முன்னிலைப்படுத்தும் பிரசாரங்களே நடைபெற்றன. பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கும் குறிஞ்சிப் பூவைப் போல் எப்போதாவது ஸ்டாலின் செய்தி இரண்டொரு விநாடிகள் தலைகாட்டும்.
தி.மு.க.வின் நலனைக் கருதியிருந்தால் நேரம் கெட்ட நேரத்தில் கலைஞரின் வாரிசைத் தேடியிருக்க மாட்டார்கள்.முரசொலி மாறன் அரசியல்ரீதியாக வளர்ந்தார். ஆனால், அவர்களுடைய பிள்ளைகள் தி.மு.க. பின்புலத்தில் வர்த்தக ரீதியாக வளர்ந்தவர்கள்.

அந்தத் தொலைக்காட்சிக் குழுமத்தின் குறிக்கோள் தெளிவானது. அரசியல் உலகம் அமைதியாகயிருந்தாலும் உணர்ச்சிகளுக்குத் தீனி போடும் செய்திகளை வெளியிட்டு, தன்னை வளர்த்துக் கொள்ளும். காரணம், அந்த நிறுவனம் வர்த்தக ரீதியான அமைப்பு. இன்றைக்குப் பல்வேறு தொழில்களும் இணைந்த `கார்ப்பரேட்' (குழுமம்) நிறுவனமாக வளர்ந்திருக்கிறது. அதனால்தான் கலைஞர் சொன்ன எத்தனையோ அறிவுரைகளை அவர்கள் ஏற்க மறுத்தார்கள். அவர்களுடைய வார ஏட்டில் கலைஞரின் படம் கூட வராமல் ரொம்ப எச்சரிக்கையாக இருந்தனர்.எனவே, மத்திய அமைச்சரவையிலிருந்து தயாநிதி மாறனை நீக்கும்படி தி.மு.கழகம் கோரியது நியாயம்தான். இல்லையெனில், காலப்போக்கில் தி.மு.கழகமே அந்த கார்ப்பரேட் கம்பெனியின் ஒரு பிரிவாக ஆக்கப்பட்டிருக்கும். இணங்கி வரவில்லையென்றால், அதனை அழிப்பதற்கான காரியங்களைச் செய்திருக்கும். மதுரையில் நடைபெறும் சில சம்பவங்கள் இப்பொழுதே அந்த இரண்டாவது வேலையைச் செய்யும்படி அந்த நிறுவனத்தை ஆத்திரமூட்டிக் கொண்டிருக்கிறது.அந்தத் தொலைக்காட்சிக் குழுமத்தின் ஆக்கிரமிப்பு விபத்திலிருந்து தப்பிய தி.மு.கழகம், இப்போது மதுரையில் இன்னொரு விபத்தை எதிர்நோக்கிக் கொண்டிருக்கிறது.அந்தத் தொலைக்காட்சி வெளியிட்ட கருத்துக் கணிப்புகளுக்கு நியாயமான தண்டனையாக தயாநிதி மாறன் அமைச்சர் பதவியிலிருந்து நீக்கப்பட்டுவிட்டார். அத்துடன் அந்தப் பிரச்னை முடிந்தது. இனி தொடர்ந்து அவர் தி.மு.கழகத்தில் நீடிப்பதற்கான வழிவகைகளைக் காண வேண்டும். இல்லையேல், வேறு வழியைத் தேட வேண்டும்.ஆனால், அவர் முடிவெடுப்பதற்கு முன்பாக, அந்தத் தொலைக்காட்சி நிறுவனத்திற்கு எதிரான காரியங்கள் தொடர்ந்து நடைபெறுகின்றன. அந்தக் காரியங்கள் அரசிற்கு நல்ல பெயரைத் தேடித் தரவில்லை. தனி நபர்களின் செயல்பாடுகளால் அரசுதான் விமர்சனங்களுக்கு உள்ளாகிறது. அந்தக் காரியங்களுக்கு என்ன விளக்கம் தந்தாலும் அதனை ஏற்கின்ற மனநிலையில் மக்கள் இல்லை. ஒதுங்கிப் போகின்ற புலியைச் சீண்டிக்கொண்டே இருந்தால் சீறத்தானே செய்யும்?செல்வி ஜெயலலிதாவின் தேனி பொதுக்கூட்டம், விஜயகாந்தின் பத்திரிகையாளர் சந்திப்பு போன்ற நிகழ்ச்சிகளை அந்தத் தொலைக்காட்சி தொடர்ந்து நேரடி ஒளிபரப்புச் செய்கிறது. அதன் மூலம் அது தனது வர்த்தக நலன்களைப் பாதுகாத்துக் கொள்கிறது. அத்துடன், மதுரையில் தொடர்ந்து தங்களுக்கு ஏற்படும் சோதனைகளுக்கு அந்தத் தலைவர்கள் தங்களுக்குத் துணை நிற்பார்கள் என்றும் எதிர்பார்க்கிறது.இப்படித் தனிநபர்களின் செயல்பாடுகள் தி.மு.கழகத்திற்கு வலுவான எதிரிகளை உருவாக்கித் தருகிறது. அண்மையில் அந்தத் தொலைக்காட்சி வெளியிட்ட ஒரு திரைப்படத்தைத் திரையிடுவதற்குத் தடங்கல்கள் ஏற்பட்டன. அந்தத் தடைகள் தொடர்ந்தால் `அந்தப் படத்தைத் திரையிடு' என்று ஆர்ப்பாட்டம் செய்ய எதிர்க்கட்சியினர் அணி சேரத் தயாராயின.மதுரையில் நடைபெறும் இத்தகைய நிகழ்ச்சி அதற்கு எதிராக அனைத்துக் கட்சியினரையும் அணிதிரளச் செய்யும். அதற்கான நேரம் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.தணிக்கை செய்யப்பட்ட எந்தத் திரைப்படத்தையும் திரையிடலாம் என்று தமிழக முதல்வர் காலத்தோடு செய்த அறிவிப்பு, அந்தப் பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைத்து விட்டது.மதுரை, திண்டுக்கல் மாவட்டங்களில் அந்தத் தொலைக்காட்சியின் ஒளிபரப்பு இரண்டு வாரகாலம் தடைப்பட்டது. அதனையும் முதல்வர் தலையிட்டு நீக்கினார்.

எதிர்முகாமை மறந்து தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளின் அடிப்படையில் மோதிக் கொண்டேயிருந்தால் அது எதிர்முகாமை எளிதாகப் பலப்படுத்தும்.

நன்றி ரிப்போர்ட்டர்.

6 comments:

செந்தழல் ரவி said...

போங்க...இந்த கட் அண்ட் பேஸ்ட் ப்ளேடா இருக்கு...

அதுவும் சின்ன எழுத்துரு...படிச்சு டவுசர் கிழிஞ்சுருச்சு....

அத்திரி said...

எழுத்துருவை பெரிதாக்கிகொள்கிறேன். நன்றி ரவி. ஆபிஸில் வைத்துதான் இதெல்லாம். அதான் கட் & பேஸ்ட்.

குப்பன்_யாஹூ said...

நண்பரே குறையாக சொலவில்லை.

யாரோ ஒரு பதிவர் சொன்னார் என்பதற்காக தினமும் ஒரு பதிவு எல்லாம் வேண்டாம். எண்ணிக்கை குறைவாக இருந்தாலும் பரவா இல்லை, தரம் குறையாமல் பார்த்து கொள்ளுங்கள், புதிய விசயமாக எழுதுவோம்.

வாழ்த்துக்களுடன்
குப்பன்_யாஹூ

அத்திரி said...

கருத்துக்கு நன்றி குப்பன்

Raghavan said...

Dear

we can read Kumudam.com for free. If you bring a new article, new topic we will be more happy to see. Don't mistake me for giving suggestion to you. Raghavan, Nigeria

அத்திரி said...

தங்கள் கருத்துக்கு நன்றி ராகவன். நேரம் கிடைக்கும் போது கண்டிப்பாக எனது பதிவை எழுதுகிறேன்.