Sunday, 5 October, 2008

உத்தப்புரம் -- கலவரபுரம்

தீண்டாமைச் சுவரை' அகற்றிய பிறகு உத்தபுரத்தில் அமைதி நிலவுகிறது என்று பலரும் நம்பிக்கொண்டிருந்தார்கள். ஆனால் தற்போது, கோயில் சுவருக்கு வெள்ளையடிக்கும் சாதாரண விஷயத்தில் இரு சாதியினரிடையே பிரச்னை வெடித்து வெடிகுண்டு, வீச்சரிவாள் என சகல ஆயுதங்களோடு ரணகளப்பட்டுக் கிடக்கிறது அந்த கிராமம். நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவர போலீஸார் கண்ணீர் புகைக் குண்டு வெடிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இன்றைக்கு போலீஸ் வளையத்தினுள் இருக்கிறது உத்தபுரம்.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ளது உத்தபுரம் கிராமம். இங்கு தலித், மூப்பர், தேவர், பிள்ளைமார், நாயக்கர் உள்ளிட்ட பல்வேறு சாதியைச் சேர்ந்த இரண்டாயிரம் குடும்பத்தினர் வாழ்கிறார்கள். இதில் தலித்துகள்தான் மெஜாரிட்டி. அடுத்து பிள்ளைமார் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் அதிகமாக உள்ளனர். சுதந்திரம் கிடைத்த காலத்தில் இருந்தே உத்தபுரத்தில் கலவரமும் தொடர்கதையாக இருந்திருக்கிறது. 1948, 1964 ஆகிய ஆண்டுகளில் அங்கு சாதிக் கலவரம் நடந்திருக்கிறது. என்றாலும் உச்சகட்டமாக 1989-ம் ஆண்டு நடந்த சாதிக் கலவரத்தில் தான் சுமார் எட்டுப் பேர் இறந்து போனார்கள். அப்போது போலீஸ் துப்பாக்கி சூடும் நடத்தியிருக்கிறதுஇதையடுத்துத்தான் தலித்துகளையும் மற்ற சாதியினரையும் பிரிக்கும் தடுப்புச்சுவர் கட்டப் பட்டது. இதனால் தலித்துகள் தங்கள் இடத்திற்கு ஊரைச் சுற்றிக்கொண்டு போகவேண்டிய நிலை. தடுப்புச்சுவர் கட்டப்பட்டு இருபது ஆண்டுகள் ஆன நிலையில், இந்தச் சுவரை `தீண்டாமைச்சுவர்' என சி.பி.எம். கட்சியினர் அடையாளம் காட்டினர். அதனைப் பார்வையிட சி.பி.எம். கட்சியின் அகில இந்திய செயலாளர் பிரகாஷ் காரத் வருகிறார் என்று அறிவித்தனர். உடனே உத்தபுரத்தைப் பரபரப்புப் பற்றிக்கொண்டது.

இதனால் `அந்தச் சுவரை இடிக்கக்கூடாது' என்று பிள்ளைமார் சமூகத்தினர் ஊரை விட்டே வெளியேறி போராட்டம் நடத்தினர். இந்நிலையில், பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சுவரின் பதினைந்து அடி அகலத்தை உடைத்து தலித்துகளுக்குப் பாதை உருவாக்கியது மாவட்ட நிர்வாகம். மலைக்குச் சென்ற பிள்ளைமார் சமுதாயத்தினர் பல்வேறு தரப்பினரின் சமாதானத்துக்குப் பின்னர் கிராமத்துக்குத் திரும்பினர். ஆனாலும் இருதரப்பினரின் பகை நீறுபூத்த நெருப்பாகப் புகைந்து கிடந்தது. இது அக்டோபர் முதல் தேதி மதியம் வெடித்தது. உத்தபுரத்தில் உள்ள முத்தாலம்மன் மாரியம்மன் கோயிலுக்கு வரும் 9, 10-ம் நாட்களில் குடமுழுக்கு நடத்த பிள்ளைமார் சமூகத்தினர் ஏற்பாடு செய்திருந்தனர். ஒன்றாம் தேதி மதியம் கோயிலின் சுவருக்கு வர்ணம் பூசி வெள்ளையடித்துக் கொண்டிருந்தனர். அப்போது தலித் வகுப்பைச் சேர்ந்த சிலர் அங்கு வந்து `இந்தச் சுவர் பொதுவான சுவர். எனவே நீங்கள் இந்தச் சுவருக்கு வெள்ளையடிக்கக் கூடாது' என எதிர்ப்புத் தெரிவித்திருக்கிறார்கள்.இதனையடுத்து, இரு தரப்பினரிடையேயும் வாக்கு வாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றியதையடுத்து, அவர்கள் மோதலில் ஈடுபட்டார்கள். மோதலில் கற்களும் நாட்டு வெடிகுண்டுகளும் வீசப்பட்டன. ஜெலட்டின் குச்சிகளும் பெட்ரோல் நிரப்பப்பட்ட பாட்டிலில் வைத்து வீசப்பட்டன. அரிவாள், கம்பு ஆகியவற்றால் துரத்தித் துரத்தி ஒருவரையொருவர் தாக்கினர். இதனால் கலவரம் வெடித்தது.

தகவலறிந்ததும் போலீஸாரும் அதிகாரிகளும் அங்கு விரைந்து சென்று மோதலில் ஈடுபட்டவர்களைக் கலைந்து செல்ல எச்சரித்தனர். ஆனால், அவர்கள் கட்டுப்படவில்லை. கலவரக்காரர்கள் வீசிய கற்கள் போலீஸாரையும் பதம் பார்த்தது. போலீஸ் வாகனங்களும் நொறுங்கின. அதுமட்டுமில்லாமல் வீடுகளுக்குள் புகுந்த குறிப்பிட்ட சமுதாயத்தினர் அங்கிருந்த பீரோ, டி.வி. களையும் சேதப்படுத்தினர். நிலைமை விபரீதமாவதை உணர்ந்த போலீஸார், கலவரத்தை ஒடுக்க கண்ணீர் புகைக்குண்டுகளை பிரயோகப்படுத்தினர். இதன் பின்னர் கலவரக்காரர்கள் நாலாபுறமும் சிதறி ஓடினர். இந்தக் கலவரத்தில் மாணவன் அருள்முருகன் (வயது 16), வெள்ளைச்சாமி (வயது 60) உள்பட பதினைந்து பேர் காயமடைந்தனர். அவர்கள் ஆஸ்பத்திரிக்கு எடுத்துச் செல்லப்பட்டனர். போலீஸ் கலவரக்காரர்களைப் பிடிக்க முயன்றபோது, தப்பித்தோம் பிழைத்தோம் என அவர்கள் கிராமத்தில் இருந்து ஓடி மலைப்பகுதிக்குள் தஞ்சம் புகுந்தனர்.சம்பவத்துக்கு மறுநாள் காலையில் நாம் உத்தபுரம் சென்றிருந்தோம். ஊரே காலியாகியிருந்தது. பெரும்பாலான வீடுகள் பூட்டப்பட்டிருந்தன. கடைகள் மூடப்பட்டிருந்தன. உத்தபுரத்தில் நூற்றுக்கணக்கில் போலீஸார் குவிக்கப்பட்டிருந்தனர். உத்தபுரம் வந்த காவல்துறை உயரதிகாரிகளுடன் வருவாய்த்துறை அதிகாரிகளும் வந்து ஆலோசனை நடத்தினர். காலையிலேயே அங்கு வந்திருந்த மதுரை மாவட்ட எஸ்.பி. மனோகரிடம் பேசினோம்.. "நிலைமை கட்டுப்பாட்டுக்குள் இருக்கிறது. போதிய பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. கலவரத்தில் ஈடுபட்ட இரு தரப்பினரும் கைது செய்யப்பட்டுள்ளனர்'' என்றார்.


கிராமத்தை நாம் சுற்றி வந்தபோது வயதானவர் ஒருவர் வீட்டின் கதவைத் திறந்து கொண்டு வெளியே எட்டிப்பார்க்க, நாம் அவரிடம் பேச்சுக் கொடுத்தோம்.. தயங்கித் தயங்கிப் பேசினார்.. "மாவட்ட நிர்வாகம் சுவரை இடித்து பாதை ஏற்படுத்தியதோடு சரி. அதன் பிறகு அதிகாரிகள் கிராமத்துப் பக்கம் வரவே இல்லை. அந்தப் பாதையை தலித்துகளும் மற்றவர்களும் எப்படி வேண்டுமானாலும் பயன்படுத்திக் கொள்ளலாம் என மாவட்ட நிர்வாகம் உறுதியாகச் சொல்லியிருக்க வேண்டும். ஆனால் சொல்லவில்லை. அதனால் பாதை ஏற்பட்டதில் இருந்து பிரச்னைதான். அந்தப் பாதையில் தலித்துகள் நடந்து மட்டுமே போகலாம். டிராக்டரில் போகக்கூடாது என பிள்ளைமார் சமூகத்தினர் சொன்னார்கள். இதனால் பெரிய தகராறும் ஏற்பட்டது. அதுபோல பிள்ளைமார் இடத்தை தலித்துகள் ஆக்கிரமிப்புச் செய்தது தொடர்பாக பிரச்னை ஏற்பட்டு 178 பேர் மீது வழக்குப் பதிவு செய்து முப்பது பேர் கைது செய்யப்பட்டார்கள். கோயில் சுற்றுச் சுவர் யாருக்குச் சொந்தம் என மாவட்ட நிர்வாகம் முடிவு செய்திருக்கவேண்டும். அதையும் செய்யவில்லை. அதனால்தான் இப்போது பிரச்னை வெடித்திருக்கிறது'' என்றார்.கிராமத்தில் வெடிகுண்டு வீச்சு, டெட்டனேட்டர் வீச்சு போன்றவை காவல்துறையையே கொஞ்சம் அதிர வைத்திருக்கிறது. இவை அருகிலுள்ள கிராமங்களில் இருந்துதான் சப்ளை ஆகிறது என்கிறார்கள். நடந்த கலவரத்தில் இரு தரப்பிலும் ஐநூற்று இருபது பேர் மீது வழக்குப் பதிவு செய்து 114 பேர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்.

நன்றி ரிப்போர்ட்டர்

2 comments:

அது சரி said...

சாதி என்னும் சாக்கடையில் உழலுவதையும், அதையெ பெருமையாக நினைப்பதையும் பன்றிகள் மாற்றிக் கொள்ளாதவரை, இந்த சாக்கடை சுத்தம் ஆகாது..

Anonymous said...

You can now get a huge readers' base for your interesting Tamil blogs. Get your blogs listed on Tamil Blogs Directory - http://www.valaipookkal.com and expand your reach. You can send email with your latest blog link to valaipookkal@gmail.com to get your blog updated in the directory.

Let's show your thoughts to the whole world!