Saturday, October 11, 2008

இவ்வாரம் ஞாநியின் பார்வையில்-- குமுதம்.

அன்புள்ள மத்திய அமைச்சர் டாக்டர் அன்புமணி அவர்களுக்கு,


வணக்கம்.

சுய இனப் பாலுறவு பற்றித்தான் இந்தக் கடிதம் எழுதத் தொடங்கினேன். ஆனால், அதற்கு முன்னால் சில விஷயங்கள்.

முதலிலேயே தெளிவாக அறிவித்துவிடுகிறேன். சிகரெட்டுக்கு எதிராக நீங்களும், மதுவுக்கு எதிராக உங்கள் தந்தையும் எடுத்து வரும் முயற்சிகள் எல்லாவற்றையும் நான் பாராட்டுகிறேன். ஆதரிக்கிறேன். உங்கள் இருவருக்கும் அதற்காக என் முழு ஆதரவு உண்டு. அவற்றுக்காக ஆளுக்கொரு பூச்செண்டும் உண்டு.சிகரெட் உள்ளிட்ட புகையிலைப் பொருட்களும் மது வகைகளும் எப்படியெல்லாம் நம் சமூகத்துக்குத் தீங்கானவை என்பது பற்றிய விவாதம் அவசியமற்றது. கொலையையும் தற்கொலையையும் குற்றங்களாக சட்டப்படி அறிவித்துள்ள சமூகத்தில், சிகரெட் புகைப்பவர்_ புகைக்காதவரைக் கொலை செய்பவராகவும், மது அருந்துபவர்_ தற்கொலை செய்து கொள்பவராகவும் கருதப் போதுமான நியாயங்கள் உள்ளன.முதல் கட்டமாகப் பொது இடங்களில் சிகரெட் புகைப்பதைத் தடை செய்திருப்பதை வரவேற்கிறேன். ஆனால் இது போதாது. சிகரெட் தயாரிப்பு தடை செய்யப்படவேண்டும். இது உங்கள் கையில் இல்லை என்றும் ஐந்து அமைச்சகங்கள் தொடர்புள்ள பிரச்னை என்றும் சொல்லியிருக்கிறீர்கள்.

ஏராளமான புகையிலை விவசாயிகளின் வேலை வாய்ப்புகளும் பீடி,சிகரெட் தயாரிக்கும் ஆலைத் தொழிலாளர்களின் வேலைவாய்ப்புகளும் பாதிக்கப்படும் என்ற கவலையினால், தயாரிப்பும் விற்பனையும் தடை செய்யப்படாமல் இருக்கின்றன. இந்த சமாதானம் நியாய மானது அல்ல. அவர்களுக்கான மாற்று வேலைவாய்ப்புகளை உருவாக்குவதைப் பற்றித்தான் யோசிக்க வேண்டும்.புகையிலைக்கு நாம் சூட்டியிருக்கிற பெயரே தவறானது. அதைப் புரத இலை என்றுதான் சொல்ல வேண்டும். மனித உடலில் சுரக்கும் புரதங்களையும் மருத்துவத்தில் பயன்படுத்தப்படும் புரதங்களையும் தயாரிக்க மிகச் சிறந்த தாவரங்களில் அது ஒன்று. ரத்தம் உறைவதைக் கரைக்கவும், புற்று நோயைத் தணிக்கவும் தயாரிக்கப்படும் மருந்துகளுக்குத் தேவைப்படும் மூலப் பொருட்கள் புகையிலையில் உள்ளன. பெட்ரோல் எரிபொருளுக்கு மாற்றாக பயன்படுத்தக் கூடிய எத்தனால் தயாரிக்கவும் புகையிலை பயன்படும். இந்தத் தயாரிப்பில், சோளம், கரும்பு ஆகியவற்றுக்கு நிகரான பயோமாஸ் உள்ள செடியாக புகையிலை கருதப்படுகிறது.

உலகமெங்கும் சிகரெட் கம்பெனிகளின் பண பலம்தான் புகையிலையை மாற்றுப் பயன்பாடுகளுக்குத் திருப்ப விடாமல் தடுத்துக் கொண்டிருக்கிறது என்பது உங்களுக்கும் தெரிந்திருக்கும்.அதே போலத்தான் மது தயாரிப்பும். மின்சாரம் தயாரிக்கவும் வண்டிகளுக்கான எரிபொருள் தயாரிக்கவும் மொலாசஸைப் பயன்படுத்தாமல் போதை திரவங்களைத் தயாரிப்பதில் திருப்பிவிட்டிருப்பது மது உற்பத்தியாளர்களின் பண பலம்தான். ஜனநாயக தேர்தல் அரசியல் எப்போதும் பண பலத்துக்கு அடிபணிந்துதான் செயல்பட்டாகவேண்டியிருந்தாலும், அதையும் மிஞ்சக்கூடியது மக்கள் பலம். சிகரெட்டாலும் மதுவாலும் பாதிக்கப்பட்டவர்கள் குடும்பத்துக்கு ஒருத்தரேனும் இருக்கிறார்கள். அவர்களால் அவரவர் குடும்பங்களும் பாதிக்கப்பட்டிருக்கின்றன.

மக்கள் கருத்தை உங்களுக்கு சார்பாகத் திரட்டித்தான் நீங்கள் சிகரெட், மது கம்பெனிகளை எதிர்கொள்ளமுடியும். சிகரெட், மது தயாரிப்புக்குத் தடை விதிப்பதையே உங்கள் கட்சியின் கொள்கையாகச் சொல்லி, வரும் தேர்தலில் நீங்கள் மக்களைச் சந்திக்கலாம். குறைந்தபட்சம் நீங்கள் போட்டியிடும் தொகுதியில் இதையே பிரச்னையாக முன்வைத்து நீங்கள் முன்னுதாரணம் படைக்கலாம்.அண்மையில் நீங்கள் மத்திய அமைச்சரவையிலிருந்தே விலகுவதாக மிரட்ட வேண்டிய ஒரு சந்தர்ப்பம் வந்தது. அப்படி ஏதாவது செய்வீர்கள் என்றும் எதிர்பார்த்தேன். ஆனால் நீங்கள் அப்படி எதுவும் செய்யவில்லை.உங்கள் அமைச்சகத்திலிருந்து டெல்லி நீதிமன்றத்தில் தெரிவித்த கருத்துக்கு நேர் எதிரான ஒரு கருத்தை, உள்துறை அமைச்சகம் அதே மன்றத்தில் தெரிவித்தது. அது மட்டுமல்ல. உங்கள் கருத்தைக் கணக்கில் எடுத்துக் கொள்ளவேண்டாம் என்று மத்திய அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் மல்ஹோத்ரா நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

இது போன்ற ஒரு கேவலம் இதற்கு முன்பு மத்திய அரசில் நிகழ்ந்தது இல்லை. ஒரு அமைச்சரின் கருத்தை, அவருடைய அமைச்சகம் நீதி மன்றம் முன்பு தெரிவித்த கருத்தை, நீதிபதி ஏற்கக்கூடாது என்று மத்திய அரசின் வக்கீலே நீதிபதியிடம் சொல்லுவது என்பது விசித்திரமானது மட்டுமல்ல, விபரீதமானதும் கூட. ஒரு தவறான முன்னுதாரணமும் கூட.இதில் வருத்தத்துக்குரியது என்னவென்றால், உங்கள் கருத்துதான் சரியான கருத்து. அதைத்தான் உள்துறை அமைச்சகம் ஏற்கக் கூடாது என்று நீதிபதியிடம் சொல்லியிருக்கிறது.ஓரினப் பாலுறவு எனப்படும் ஹோமோசெக்ஷுவாலிட்டியை தண்டனைக்குரிய குற்றமாக இந்திய தண்டனைச் சட்டம் 377-ம் பிரிவு வைத்திருக்கிறது. விக்டோரியா மகாராணி காலத்தில் 1861-ல் போட்ட இந்த சட்டத்தை இன்றைய பிரிட்டனே கைவிட்டுவிட்டது. தன் பால் உறவு என்பதை ஒரு நோயாக ஒரு காலத்தில் அறிவித்த ஐ.நா.வின் உலக சுகாதார நிறுவனமும் அந்தக் கருத்தை நீக்கிவிட்டது.இந்தியாவும் இந்த சட்டத்தை நீக்க வேண்டும் என்று சென்ற வருடம் பொருளாதார அறிஞர் அமர்த்யாசென், கேப்டன் லட்சுமி, கிரீஷ் கர்னாட், அருந்ததி ராய், குல்தீப் நய்யார், ராஜ்தீப் சர்தேசாய், அபர்ணா சென் முதலிய 250 பிரமுகர்கள் உங்கள் பிரதமரிடம் கோரிக்கை வைத்தார்கள். பாவம், அவருக்கு புஷ் சொல்வது மட்டும்தானே காதில் விழும். இந்தக் கோரிக்கையைக் கண்டுகொள்ளவே இல்லை.

நீங்கள் இந்தச் சட்டத்தைக் கைவிட இன்னொரு சரியான காரணம் சொல்லியிருக்கிறீர்கள். இந்தியாவில் இருக்கும் ஓரின உறவாளர்களில் 80 சதவிகிதம் பேருக்கு எய்ட்ஸ் நோய் உள்ளது. இந்த சட்டத்தின்படி அவர்களுக்கு சிகிச்சை தரும் டாக்டர் முதல் சமூக சேவகர் வரை எல்லாரையும் தண்டிக்கலாம் என்ற அபத்தத்தைச் சுட்டிக் காட்டியிருக்கிறீர்கள்.

ஓரின உறவு, தண்டனைக்குரிய குற்றம் என்பதை நீக்கினால் தான், அந்த வாழ்க்கைமுறை உள்ளவர்களில் எய்ட்ஸ் தொற்றியவர்கள் பகிரங்கமாக வந்து சிகிச்சை பெற முடியும். எய்ட்ஸ் பரவுவதைத் தடுக்க இது அவசியம் என்று நீங்கள் சொன்னதைத்தான் கண்டுகொள்ளவேண்டாம் என்று நீதிபதியிடம் மத்திய அரசு வக்கீல் சொல்கிறார். இதைக் கண்டித்து நீங்கள் ராஜினாமா செய்வதாக மிரட்டியிருக்க வேண்டாமா? போகட்டும். அமைச்சரவையில் உங்கள் கருத்துக்கு ஆதரவு தருவோரைத் திரட்டிச் சென்று பிரதமரிடம் முறையிடப் போவதாகச் சொல்லியிருக்கிறீர்கள். உங்கள் முயற்சிக்கு வாழ்த்துகள்.எய்ட்ஸ் பரவாமல் தடுக்கவும் பாதிக்கப்பட்ட ஓரின உறவாளர்களைக் காப்பாற்றவும் நீங்கள் பேசியதை உங்கள் கட்சியினரும் தமிழகத்தில் இருக்கும் கலாசாரக் காவல்காரர்களும் இதுவரை எதிர்த்துப் பேசாமல் இருப்பது எனக்கு இன்ப அதிர்ச்சியாக இருக்கிறது. ``தமிழ்நாட்டில் ஓரின உறவாளர்களே கிடையாது. அது சிலப்பதிகார மரபுக்கு விரோதமானது. அப்படி சிலர் இருப்பதாகவும் அவர்களைக் காப்பாற்ற வேண்டும் என்றும் அன்புமணி குரல் கொடுப்பது தமிழ்ப் பண்பாட்டுக்கு விரோதமானது. தமிழகத்து ஆண் சிங்கங்களை இழிவுபடுத்துவதாகும்'' என்று கூக்குரல் எழுப்பி, இத்தனை நேரம் உங்கள் மீது மஞ்சக்குப்பம் முதல் களியாக்காவிளை வரை 144 கோர்ட்டுகளில் வழக்குப் போடாமல் அவர்கள் இருப்பது எத்தனை பெரிய ஆச்சரியம் !

நடிகை குஷ்பு உங்களைப் போலவே எய்ட்ஸ் பரவுவதைத் தடுக்க, பாதுகாப்பான செக்ஸ் வைத்துக் கொள்வதைப் பற்றிக் கருத்து சொல்லப் போய்த்தானே அவருக்கு எதிராக உங்கள் கட்சிக்காரர்களும் கலாச்சாரக் காவலர்களும் பொங்கியெழுந்தார்கள்? இன்னும் அந்த வழக்குகள் அப்படியே இருக்கின்றன.டாக்டர் அன்புமணி அவர்களே, தயவுசெய்து அந்த வழக்குகளை திரும்பப் பெறச் சொல்லுங்கள். குஷ்புவிடம் அவர்களை வருத்தம் தெரிவிக்கச் சொல்லுங்கள். கருத்து ரீதியாக, நீங்களும் குஷ்புவும் ஓரணியில்தான் இருக்கிறீர்கள் என்பதை உங்கள் கட்சியினர் உணரட்டும். ஒரு சமூகத்தில் சிகரெட், மது முதலியவை மட்டுமல்ல, பண்பாடு என்ற பெயரில் பிற்போக்கான மனநிலையில் இருப்பதும் ஒரு போதைதான். எல்லா போதைகளிலிருந்தும் சமூகத்தை மீட்கும் சக்தியும் கடமையும் உங்களுக்கு இருக்கிறது. அந்தக் கடமையை நீங்கள் செய்யும்போதெல்லாம் என்னைப் போன்றவர்கள் நிச்சயம் உங்களை ஆதரிப்போம்..


இந்த வாரப் பூச்செண்டு


இலங்கை ராணுவம் அங்குள்ள தமிழர்கள் மீது குண்டு வீசி நடத்தும் தாக்குதலை நிறுத்த இந்திய அரசைத் தலையிட வைக்கத் தன்னால் முடியாது என்று உணர்ந்து மக்களையே பிரதமருக்கு தந்தி அனுப்பும்படி சொல்லி விட்டதற்காக முதலமைச்சர் கலைஞர் கருணாநிதிக்கு இ.வா.பூ.


இந்த வாரப் பரிதாபம்


மின்சாரத் தட்டுப் பாட்டால் தேர்தலில் தோல்வி ஏற்படுமோ என்ற பயம் உள்ளது. இதை நினைத்தால் இரவில் தூக்கம் வருவதில்லை & அமைச்சர் ஆற்காடு வீராசாமி.




இந்த வாரக் குட்டு


129 பூச்செண்டுகளுடன் நாங்கள் காத்திருந்தும் வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளாமல், பெரியார் எழுத்தையும் கருத்தையும் நாட்டுடைமையாக்கத் தவறிய முதலமைச்சர் கலைஞர் கருணாநிதிக்கு 129 குட்டுகள்.

நன்றி குமுதம்

6 comments:

Anonymous said...

அவருக்கு மருத்துவரிடம் செல்ல பயமோ என்னவோ?

அத்திரி said...

மருத்துவரிடம் செல்ல பயம்தான். அவருதான் வேற வழி இல்லாம தினசரி பல்டி அடிக்கிறாரே!!!!

குப்பன்.யாஹூ said...

குப்பன்_யாஹூ கூறுவது:

நன்றி நண்பரே, குமுதம் வலை தளத்தில் கசட்ப்பட்டு பொய் படித்து கொண்டிருப்பேன். இப்பொழுது அந்த சிரமம் இல்லை.

கூடிய விரைவில் குமுதம் வலை தளம் இலவச சேவையை நிறுத்த போகிறார்கள்.

இந்த மாதிரி பதிவுகள் போட்டால் வெளிநாடு, உள்நாட்டில் இருக்கும் தமிழ்ர்களுக்கு மிகவும் பயன் உண்டு.

நன்றிகளுடன்

குப்பன்_yahoo

அத்திரி said...

நன்றி குப்பன்

Anonymous said...

ஞானியின் கருத்துக்கள் நியாயமானவை. அன்புமணி அவர்களே இளைய தலைமுறையைச் சேர்ந்த நீங்கள் இளைய பாரதத்தை வழி நடத்த 'அச்சம் தவிர்க்க வேண்டும்.'


ஒரு ஈழ‌த்துத் த‌மிழ‌ன்

அத்திரி said...

நன்றி ஈழத்து தமிழரே.