Saturday, November 8, 2008

இவ்வாரம் ஞாநியின் பார்வையில்

தி.மு.க, அ.தி.மு.க இரண்டும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்தான் என்றார் காமராஜர். இதேபோல அமெரிக்காவின் ஜனநாயகக் கட்சியும் குடியரசுக்கட்சியும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்தான் என்று கருதுபவர்கள் அங்கேயும் இருக்கிறார்கள்.அப்படிப்பட்ட மூன்றாம் அணியினர் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுகிறார்கள் என்ற செய்தியைக் கூட இங்கே தமிழ்ப் பத்திரிகைகள் கண்டுகொள்வதில்லை. இந்த இதழ் அச்சாகி வெளிவருவதற்குள் அமெரிக்காவின் முதல் கறுப்பின ஜனாதிபதியாக பாரக் ஒபாமா அமையும் வாய்ப்பு ஏற்பட்டிருக்கலாம். எதிர்பாராத திருப்பமாக அவர் தோற்றும் இருக்கலாம். ஆனால் இன்னொரு கறுப்பின அமெரிக்கர் ஜனாதிபதி பதவிக்குப் போட்டியிட்டது பற்றிய விவரங்கள் தமிழ் வாசகர்களுக்கு சென்று சேர்க்கப்படவில்லை.

அவர்தான் 53 வயதாகும் சிந்தியா மெக்கின்னே. அமெரிக்க மக்களவையில் ஜார்ஜியா பகுதியின் ஜனநாயகக் கட்சிப் பிரதிநிதியாக சுமார் 15 வருடங்களாக இருந்து வரும் சிந்தியா இந்த ஜனாதிபதி தேர்தலில் பசுமைக் கட்சியின் வேட்பாளராகப் போட்டியிட்டார்.சிந்தியா தொடர்ந்து பல பரபரப்பான அரசியல் சர்ச்சைகளை எழுப்பி வருபவர். செப்டம்பர் 11 இரட்டை கோபுரத் தாக்குதல் பற்றி புஷ் அரசுக்கு முன்பே தெரியும் என்று அவர் குற்றம் சாட்டினார். ஒசாமா பின்லேடன் விமானிப் பயிற்சிக்காக ஆட்களை அமெரிக்காவுக்கு அனுப்பி வைத்திருப்பது உளவுத்துறைக்குத் தெரிந்திருந்தது என்றார். பின் லேடனின் கம்பெனியில் புஷ்ஷின் அப்பா முதலீடு செய்திருப்பதாக சிந்தியா தெரிவித்தார்.

அமெரிக்காவைத் தாக்கிய கத்ரீனா சூறாவளி சேதங்களின்போது அரசின் மெத்தனம், காவல் துறையின் அராஜகங்கள் முதலியவற்றுக்கு எதிராக தொடர்ந்து குரல் எழுப்பினார். கத்ரீனா சூறாவளியைப் பயன்படுத்திக் கொண்டு, ராணுவம், 5000 கைதிகளை சுட்டுக் கொன்று ஆற்றில் போட்டதாகக் குற்றஞ்சாட்டினார். இராக்கில் யுத்தம் நடத்தக்கூடாது என்ற சிந்தியா, அதற்காக மக்களவையில் தீர்மானம் கொண்டு வந்தார்.
உலகில் ஜனநாயகம் இல்லாத எந்த நாட்டுக்கும் அமெரிக்கா ஆயுதம் விற்கக்கூடாது என்றும் தீர்மானம் கொண்டு வந்தார்.அதிபர் புஷ், துணை அதிபர் டிக் சேனி இருவரையும் பதவி நீக்கம் செய்யவேண்டுமென்ற தீர்மானத்தையும் அவையில் சிந்தியா தாக்கல் செய்திருக்கிறார்.

கறுப்பினத்தவரின் உரிமைக்காகப் போராடி கொல்லப்பட்ட மார்ட்டின் லூதர்கிங்கின் கொலை விசாரணை விவரங்களை ரகசிய ஆவணங்களாக அரசு வைத்திருப்பதை பகிரங்கப்படுத்த வேன்டுமென்று சிந்தியா போராடி வருகிறார். சிந்தியாவின் அரசியல் நுழைவுக்குக் காரணம் அவர் அப்பா பில்லி. போலீஸ் அதிகாரியாக இருந்த பில்லி, கறுப்பு அதிகாரிகளை வெள்ளை அதிகாரிகள் பாரபட்சமாக நடத்துவதை எதிர்த்து காவல் நிலைய வாசலிலேயே போராட்டம் நடத்தியவர். அவர் பதவியை உதறிவிட்டு அரசியலில் குதித்து, ஜார்ஜியா மாநில சட்டமன்ற உறுப்பினர் தேர்தலில் ஜெயித்தார். அடுத்து மகளையும் அரசியலுக்குக் கொன்டு வந்தார்.
சிந்தியா தொடர்ந்து மனித உரிமைப் பிரச்னைகள், கறுப்பின சம உரிமைகள், சுற்றுச்சூழல் அக்கறைகள் முதலியவற்றில் ஆர்வம் காட்டுபவர். அமெரிக்காவின் பசுமைக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக அவர் 32 மாநிலங்களில் போட்டியிட்டிருக்கிறார்.

பசுமைக்கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக 1996லும் 2000லும் போட்டியிட்ட வேட்பாளர் ரால்ஃப் நாடர் இந்த முறையும் போட்டியிட்டார். 2004ஐப் போலவே இம்முறையும் அவர் சுயேச்சை வேட்பாளர்.நாடரும் குடியரசுக் கட்சி வேட்பாளர் மெக்கேய்னைப் போல எழுபது வயதைக் கடந்தவர் என்றாலும் அமெரிக்க சமூகத்தின் சிந்தனையை மாற்றியமைக்கப் போராடி வரும் சிந்தனையாளர். குடியரசுக் கட்சி, ஜனநாயகக்கட்சி இரண்டுமே பெரிய வர்த்தக நிறுவனங்களின் பிடியில் இருக்கும் அரசியலையே செய்துவருபவை என்ற கருத்தை முதன்முதலில் அமெரிக்க மக்களிடையே பரப்பத் தொடங்கியவர் நாடர்தான்.

பெரு முதலாளிகளின் பிடியில் இருந்து அரசியலை விடுவித்தாலொழிய, அமெரிக்காவில் எந்தப் பெரிய மாற்றமும் சாத்தியமில்லை என்று சொல்லிவரும் நாடர், நுகர்வோர் இயக்கத்தின் தந்தை என்ற புகழுக்குரியவர். ஜெனரல் மோட்டார்ஸ் தயாரிக்கும் கார்கள் ஆபத்தானவை, பாதுகாப்பற்றவை என்பதை நாடர் நிரூபித்துக் காட்டியபிறகுதான், அமெரிக்காவில் கார்களில் சீட் பெல்ட் அறிமுகப்படுத்தப்பட்டு கட்டாயமாக்கப்பட்டது.

தனி மனிதராக வாழ்ந்து வரும் நாடரின் பெற்றோர் பிரான்சிலிருந்து அமெரிக்காவுக்கு வந்து குடியேறிய அரபிய - லெபனீஸ் கத்தோலிக்க கிறித்துவர்கள். நான்கு தேர்தல்களாகத் தொடர்ந்து ஜனாதிபதி பதவிக்குப் போட்டியிட்டுவரும் ரால்ஃப் நாடர், குடியரசு, ஜனநாயகக்கட்சிகளுக்கு மாற்று அரசியலை அமெரிக்கர்கள் சிந்திக்க வேண்டும் என்ற நோக்கத்தில் போட்டியிட்டு வருகிறார். ஐந்து சதவிகிதத்துக்கு மேல் ஓட்டு வாங்கினால், தேர்தல் நிதியை அரசாங்கத்திடமிருந்து பெறலாம் என்ற விதி அமெரிக்காவில் உள்ளது. பசுமைக்கட்சி அந்தத் தகுதியைப் பெற வேண்டும் என்பதற்காக அதன் வேட்பாளராக நாடர் போட்டியிட்டபோதும் ஐந்தை எட்ட முடியவில்லை.நாடர், சிந்தியா போன்றவர்கள் மக்களிடமிருந்து வசூலிக்கும் தேர்தல் நிதிகள் 5 மில்லியன் டாலர்களைக் கூட தாண்டுவதில்லை. ஆனால் ஒபாமா, மெக்கெய்ன் போன்ற பெரிய கட்சி வேட்பாளர்கள் திரட்டும் நிதிகள் பில்லியன் கணக்கை எட்டி விட்டன. அதுவும் இந்த முறை ஒபாமா, தனக்கு அரசு தரும் தேர்தல் நிதி வேண்டாம் என்று சொல்லிவிட்டார். தேசம் முழுவதும் எல்லா தொலைக்காட்சி அலைவரிசைகளிலும் 30 நிமிட நேரம் வாடகைக்கு எடுக்கும் அளவுக்கு ஒபாமாவின் பண பலம் இருந்தது.

அமெரிக்க அரசியலில் பண பலம் இல்லாமல் எதுவும் நடக்காது என்பதுதான் யதார்த்தம். ஆனால் அதற்காக இதை அப்படியே விட்டுவிடுவதா என்ற கேள்வி பல அமெரிக்கர்கள் மனதைக் குடைந்துகொண்டேதான் இருக்கிறது. அதை எதிரொலிக்கும் விதமாகத்தான் ரால்ஃப் நாடர் போன்றவர்கள் தேர்தலில் போட்டியிடுகிறார்கள். நாடர் கூட ஒரு வகையில் ஒரு பிரபலம்தான். நீண்ட காலமாக பல்வேறு நுகர்வோர் இயக்கங்களை நடத்திப் பிரபலமாக இருக்கக் கூடியவர். உண்மையிலேயே ஒரு சாமான்யர் அமெரிக்க தேர்தல் அரசியலில் பங்கேற்க முடியுமா ?
இந்தக் கேள்வி ஒரு பள்ளிக்கூட ஆசிரியைக்கு ஏற்பட்டது. சரியாகச் சொல்வதானால், அவரை நோக்கி வீசப்பட்டது. அமெரிக்காவில் நெவாடா மாநிலத்தில் ரெனோ என்ற ஊரில் அரசுப் பள்ளியில் ஆசிரியையாக இருப்பவர் டியர்னி காஹில். ஜனநாயகம், தேர்தல், அரசு, நிர்வாகம் பற்றியெல்லாம் ஆறாம் வகுப்பு மாணவர்களுக்கு வகுப்பெடுத்துக் கொண்டிருந்தார் டியர்னி.

தேர்தலில் நிற்க வேண்டுமென்றால் மில்லியனராக இருக்க வேண்டும்; அல்லது நிறைய மில்லியனர் நண்பர்கள் இருக்க வேண்டும். என்று ஒரு மாணவி கமெண்ட் அடித்தாள். டியர்னிக்கு அதிர்ச்சியாக இருந்தது, இந்த வயதிலேயே இந்தக் கருத்துக்கு வந்துவிட்டார்களே என்று. அப்படி இல்லை. அமெரிக்க அரசியல் சட்டம் எல்லா குடிமக்களுக்கும் சம உரிமையைக் கொடுத்திருக்கிறது என்றெல்லாம் விளக்கினார் டியர்னி.
அப்படியானால் நீங்கள் போட்டியிட்டுக் காட்டுங்கள் பார்க்கலாம் என்றார்கள் மாணவர்கள். டியர்னி சவாலை ஏற்றுக் கொண்டார். என் பிரசார வேலையை நீங்கள்தான் செய்ய வேண்டும் என்றார். எல்லாருமாக களத்தில் குதித்தார்கள். ஜனநாயகக்கட்சியில் வேட்பாளராகத் தேர்வு செய்யப்படுவதற்குப் போட்டியிட்ட டியர்னியால் திரட்ட முடிந்த தேர்தல் நிதி வெறும் ஏழாயிரம் டாலர்கள்.

ஆனால் அவரை எதிர்த்த சக வேட்பாளரிடம் இருந்தது ஏழு லட்சத்து 50 ஆயிரம் டாலர்கள். ஆனால் மாணவர்களின் பிரசார பலத்தில் டியர்னி ஜனநாயகக்கட்சி வேட்பாளரானார். செனட் தேர்தலில் அவர் ஜெயிக்க முடியவில்லை. ஆனால், பெரும் ஆச்சரியம். மொத்தம் பதிவான வாக்குகளில் 30 சதவிகிதம் அவருக்குக் கிட்டியது. எட்டு வருடங்கள் முன்பு இந்தப் பரிசோதனையில் ஈடுபட்ட டியர்னி இப்போதும் ஆசிரியையாகவே வேலை பார்க்கிறார். அவருடைய அனுபவம் காஹில் ஃபார் காங்கிரஸ் என்ற தலைப்பில் இப்போது புத்தகமாக வந்திருக்கிறது. அடுத்த வருடம் இது `க்ளாஸ் ஆக்ட்' என்ற தலைப்பில் திரைப்படமாக வரவிருக்கிறது. டியர்னிக்கு இருக்கும் நம்பிக்கையில் பாதி கூட இங்கே நம் இடதுசாரித் தலைவர்களுக்கு இல்லை என்பதுதான் வருத்தம்.

அமெரிக்கத் தேர்தல் ஜனநாயகத்தை எனக்கு சுவாரசியமாக்குபவர்கள் நாடர், சிந்தியா, டியர்னி போன்ற மூன்றாம் அணியினர்தான். மற்றபடி அங்கே தேர்தல் பிரசாரப் பரபரப்பு இருக்கும் அளவுக்கு வாக்குப்பதிவு கிடையாது. 50 சதவிகிதத்துக்குக் கீழேதான் பெரும்பாலும் வாக்குப்பதிவு இருக்கிறது. இந்தியாவில் 70, 75 வரை நடக்கிறது. தேர்தலில் பணம் விளையாடுவதில் நம்மை விஞ்சியவர்கள். வாக்காளர் பட்டியல் ஊழல்களிலும் நம்மை விஞ்சியவர்கள். என்னென்ன மாதிரியெல்லாம் வாக்காளர் பட்டியல் ஊழல்கள் நடக்கின்றன என்பது தனிக் கட்டுரைக்கான விஷயம்.ஆனால் எல்லாமே அங்கே எப்படியும் அம்பலத்துக்கு வந்துவிடுகின்றன என்பதுதான் நமக்கும் அவர்களுக்கும் இருக்கும் முக்கியமான வித்தியாசம். போஃபர்ஸ் பீரங்கியிலும், ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டிலும் யாருக்குப் பணம் போயிற்று என்பது எங்கே எந்தக் காலத்தில் தெரியப்போகிறது? ம்ஹூம்..

இந்த வார தமிழ் வளர்ச்சி செய்தி

முத்தமிழ் அறிஞர் கலைஞர் கருணாநிதியின் பேரன் உதயநிதி `ரெட் சன்' என்று தன் பட நிறுவனத்துக்கு `தூய தமிழில்' பெயர் சூட்டியதையடுத்து, இன்னொரு பேரனாகிய தயாநிதிஅழகிரி புதிதாகத் தொடங்கியிருக்கும் பட நிறுவனத்துக்கு `க்ளவுட் நைன்' என்று `தூய தமிழில்' பெயர் சூட்டியுள்ளார். படத் தலைப்புகள் `டமிலில்' இருந்தால் மட்டுமே வரி விலக்கு என்று `கிராண்ட்பா' உத்தரவிட்டிருப்பதால், படத் தலைப்புகள் கொச்சைத்தமிழில் குருவி, வாரணம் ஆயிரம் என்று வைக்கப்பட்டன.

இந்த வார ஆறுதல்

இலங்கையில் போர் நிறுத்தம் உடனே ஏற்பட வேண்டும் என்ற பிரதான கோரிக்கையை கருணாநிதி, பிரணாப் முகர்ஜி, மன்மோகன் சிங் எல்லாருமாக திசை திருப்பி, நிவாரண நிதி வசூலாக மாற்றிய நிலையில், மீண்டும் போர் நிறுத்தக் கோரிக்கையை நோக்கி கவனத்தைத் திருப்ப தென்னிந்திய நடிகர் சங்கத்தின் எட்டு மணி நேர உண்ணாவிரதக் கூட்டம் பயன்பட்டது இந்த வார ஆறுதல்.

நன்றி. குமுதம்

4 comments:

Senthil said...

me the firstu

good post

அத்திரி said...

நன்றி செந்தில்

குப்பன்.யாஹூ said...

இந்த வார மூட நம்பிக்கை ஒழிப்பு


பகுத்தறிவு பகலவனின் பேரன் cloud nine (9 number lucky) என்று ராசி பார்த்து பெயர் வைத்துள்ளதை கூடுதலாக சுட்டி காட்டாத ஞானிக்கு இந்த வார குட்டு.

குப்பன்_யாஹூ

அத்திரி said...

பகுத்தறிவு திமுக தொண்டர்கள் மற்றும் அனைத்து மக்களுக்கும் தானே ஒழிய கலைஞரின் குடும்பத்திற்கு இதில் விதி விலக்கு.

நன்றி குப்பன்.