Saturday, 15 November, 2008

இவ்வாரம் ஞாநியின் பார்வையில்

பாரக் ஹுசேன் ஒபாமா அமெரிக்காவின் முதல் கறுப்பின ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுவிட்டதால், இனி அமெரிக்காவும், உலகமும் அடியோடு மாறிவிடுமா ?


`மாற்றுவோம். நம்மால் முடியும்' என்ற கோஷத்தோடு ஒபாமா தேர்தலைச் சந்தித்து ஜெயித்ததால் மிகப் பெரிய எதிர்பார்ப்புகள் அமெரிக்காவிலும் உலகின் பல பகுதிகளிலும் எதிரொலிக்கின்றன. `அது ஒரு தேர்தல் கோஷம். அவ்வளவுதான்' என்ற யதார்த்த அறிவு இப்போதைக்கு பின்னே தள்ளப்பட்டு, உணர்ச்சி அலைமோதிக் கொண்டிருக்கிறது.

தலித் கே.ஆர்.நாராயணன் இந்திய ஜனாதிபதியானதால், தமிழ்நாட்டில் திண்ணியத்தில் தலித் வாயில் மலம் திணித்த கொடுமை நடக்காமல் போய்விடவில்லை. இஸ்லாமியர் அப்துல்கலாம் இந்திய ஜனாதிபதியாக இருந்தபோதுதான் குஜராத்தில், ஹிந்து பயங்கரவாதி மோடி தலைமையில் முஸ்லிம்களைக் கொன்று குவித்த பயங்கரம் நிகழ்த்தப்பட்டது. ஒரே வித்தியாசம் - இந்திய ஜனாதிபதி பதவி பொம்மைப் பதவி. அமெரிக்க ஜனாதிபதி பதவி அதிகாரம் மிகுந்த பதவி.ஆப்ரிக்க நாடுகளிலிருந்து விலைக்கு வாங்கிக் கொண்டு வரப்பட்ட கறுப்பின அடிமைகளின் உழைப்பில் வாஷிங்டனில் கட்டப்பட்ட வெள்ளை மாளிகையில் ஜனாதிபதியாகப் பொறுப்பேற்க ஒரு கறுப்பினத்தவர் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். 147 வருட நிறவெறிக்கெதிரான போராட்டத்தில் இது மிக முக்கியமான சாதனை என்பதில் சந்தேகமில்லை.

அப்படியானால் அமெரிக்காவில் நிறவெறி ஒழிந்துவிட்டதா? வெள்ளையர்கள் எல்லாரும் மனம் மாறிவிட்டார்களா? இந்தக் கேள்வி களுக்கு ஒற்றை வார்த்தையில் ஆம் என்றோ இல்லை என்றோ சொல்லிவிட முடியாது. நிற வெறி சட்டவிரோதமாக்கப்பட்டுவிட்டது. அது ஒரு குற்றம். ஆனால் இன்னும் குற்றவாளிகள் இருக்கத்தான் செய்கிறார்கள். ஏராளமான வெள்ளையர்கள் நிறவெறிக்கு எதிராகக் கடுமையாக உழைக்கிறார்கள். அவர்கள்தான் ஒபாமாவை தங்கள் வேட்பாளராகவே ஆக்கியவர்கள். இன்னும் ஏராளமான வெள்ளையர்கள் மனம் மாறாதவர்களாகவே இருக்கிறார்கள்.இந்தத் தேர்தல் அந்த மன மாற்ற, சமூக மாற்றப் போராட்டத்தில் அடுத்த படி. ஒபாமாவின் வெற்றிக்குப் பல காரணங்கள் உள்ளன. முழு முதற் காரணம் - புஷ். எட்டாண்டுகள் புஷ் அரசின் பொருளாதாரக் கொள்கை, வெளி உறவுக் கொள்கை இரண்டும் ஏற்படுத்திய சீரழிவுகளிலிருந்து தீர்வு தேடித்தான் அமெரிக்கர்கள் ஒபாமா வைத்தேர்ந்தெடுத்திருக்கிறார்கள்.

அடுத்தபடியாக, ஒபாமாவின் வெற்றிக்கு அவர் கறுப்பர் என்பது உதவியது எவ்வளவு நிஜமோ அதே அளவு அவர் கலப்புப் பின்னணியிலிருந்து வந்தவர் என்பதும் உதவியிருக்கிறது. தங்களில் ஒருவராக கறுப்பின அமெரிக்கர்கள் அவரோடு அடையாளப்படுத்திக் கொண்ட அதே வேளையில், ஒபாமாவின் தாய் வெள்ளையர் என்பதும், ஒபாமா தாய் வழிப் பாட்டியால் வளர்க்கப்பட்டவர் என்பதும், வெள்ளையர்கள் மத்தியில் அவரை சற்றே லகுவாக ஏற்கச் செய்ய சாதகமான அம்சங்களாக விளங்கியிருக்கின்றன. ஒபாமாவும் எப்போதும் தன்னை முற்றிலும் கறுப்பினத்தவராக அடையாளப்படுத்திக் கொள்வதைத் தவிர்த்திருக்கிறார்.
அவருடைய அரசியல் வாழ்க்கை முழுவதிலும் ஒபாமா தன்னை சாதாரண மனிதர்களுடன் அடையாளப்படுத்திக் கொண்டதை விட, அதிகமாக மேட்டுக்குடியினருடனே ஐக்கியப்படுத்திக் கொண்டிருக்கிறார். பணக்காரர்கள் ஆதரவுக் கட்சி என்று பெயரெடுத்திருக்கும் குடியரசுக் கட்சி திரட்டியதை விட, பல மடங்கு அதிக தேர்தல் நிதியை குவித்த முதல் ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஒபாமாதான்.

எல்லாவற்றுக்கும் மேலாக, ஒபாமாவின் தேர்தல் அணுகு முறையில் அவருக்கு வெற்றியைக் குவிக்க உதவிய மிக முக்கியமான அம்சம் இைளய தலைமுறையிடம் நம்பிக்கையை ஏற்படுத்திய பிரசார விஷயங்கள்தான். அமெரிக்காவில் 1972-ல்தான் வாக்காளர் தகுதி வயது 18 ஆக்கப்பட்டது. அதன் பின்னர் இப்போதுதான் முதல் முறையாக மிக அதிக அளவில் இளைஞர்கள் வாக்களித்திருக்கிறார்கள். எதிர் வேட்பாளரை விட மிக அதிக வித்தியாசத்தில் இளைஞர்கள் ஓட்டுகளை ஒபாமா அடைந்திருக்கிறார். சுமார் 66 சதவிகிதம் ! இந்த அளவு இளைஞர்கள் 2004லும் 2000-த்திலும் அல்கோருக்கோ, ஜான் கெரிக்கோ வாக்களித்திருந்தால், புஷ் ஜனாதிபதியாகியிருக்கவே முடியாது !

பல வெள்ளையர்கள் வீடுகளில் பழைய தலைமுறை இன்னும் நிறவெறி மனப்பான்மையிலிருந்து வெளிவரவில்லை. இன்றைய தலைமுறை வந்துவிட்டது. `நான் ஒபாமாவுக்கு ஓட்டுப் போடப் போகிறேன்' என்று மகள் சொன்னதும், `அந்த.............னுக்கா?' என்று தாத்தா எரிச்சலடைந்ததும் இருவரும் வாதிட்டதும் நடந்திருக்கின்றன. இருபது வருடம் முன்னால் இப்படி ஒரு வாதமே கூட வீட்டில் நடந்திருக்க முடியாது என்கிறார் மகள்.
இன்னொரு பக்கம் பல மூத்த வெள்ளையர்கள் வெளியே `நான் மெக்கெய்னுக்குத்தான் வாக்களிப்பேன்' என்று சொல்லிவிட்டு ரகசியமாக ஒபாமாவுக்கு வாக்களித்ததும் நடந்திருப்பதாகக் கருதப்படுகிறது.

ஒபாமாவுக்கு வெற்றியைக் குவித்த முக்கியக் காரணம் அமெரிக்க பொருளாதாரத்தின் வீழ்ச்சி அடிமட்டம் வரை அன்றாட வாழ்க்கையை பாதித்திருப்பதாகும். ஷேர் மார்க்கெட் வீழ்ச்சி குடும்ப பென்ஷன்களைக் கடுமையாக பாதித்திருக்கிறது. இதிலிருந்தெல்லாம் விடிவு ஒபாமாவால் தரமுடியும் என்ற எதிர்பார்ப்பு ஏற்படக் காரணம், தான் ஆட்சிக்கு வந்தால், ஒளிவு மறைவற்ற ஆட்சி நடத்துவேன்; ஒவ்வொரு விஷயத்தையும் மக்கள் முன்பு வைத்து விவாதித்துதான் முடிவு எடுப்பேன் என்று அவர் திரும்பத் திரும்பச் சொன்னதாகும். இதை எந்த அளவு செய்வார் என்பது போகப் போகத்தான் தெரியும்.

ஒபாமாவின் தேர்தல் உத்திகள், அணுகுமுறைகளிலிருந்து இங்கே நாம் கற்க நிறைய இருக்கிறது. முதல் விஷயம் புதிய வாக்காளர்கள், இைளஞர்கள் மீது நம்பிக்கை வைத்து அவர்களைத் திரட்ட முயற்சித்ததாகும். இரண்டாவது புதிய தகவல் தொழில்நுட்பத்தை பிரசாரத்துக்குப் பயன்படுத்திய முறை. மின்னஞ்சல் வழியே மட்டும் ஒரு கோடிப் பேரை ஒபாமாவின் பிரசாரகர்கள் தொடர்ந்து தொடர்பு கொண்டிருக்கிறார்கள். (இந்த முயற்சியின் வெற்றி குடியரசுக் கட்சியை இப்போதே 2012 தேர்தலை மனதில் கொன்டு தாங்களும் ஈ மெயில் நெட் ஒர்க்கை கட்ட வேண்டுமென்று உந்தியதில், அவர்களும் ஆரம்பித்திருக்கிறார்கள்.)ஒபாமா மின்னஞ்சலில் தொடர்பு கொண்ட ஒரு கோடிப் பேரிடமும் பல்வேறு சமூக, அரசியல், பொருளாதாரப் பிரச்னைகளில் அவர்களுடைய நிலை என்ன என்று கருத்துத் திரட்டியிருக்கிறார். அவர்களிடம் தேர்தல் நிதியும் கணிசமாக வசூலாகியிருக்கிறது.

`தேர்தல் முடிந்தபிறகு உங்களுடன் தொடர்பு முடிந்து விடாது. ஆட்சி நடத்தும்போதும் தொடர்ந்து கருத்துப் பரிமாறுவோம்' என்று ஒபாமா மின்னஞ்சலில் சொல்லியிருக்கிறார். அவருடைய இணையதளத்தில் இதற்கான வலைப்பூ ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. இந்த ஏற்பாடுகள் ஒபாமாவின் அரசியலுக்குத் தொடர்ந்து பயன் தரக்கூடியவை. அமெரிக்க ஆட்சி முறையில் ஜனாதிபதி கொண்டு வரும் சட்டங்களைக் கூட நாடாளுமன்றம், மாநில சட்டமன்றங்கள் நிராக ரித்துவிடமுடியும். அவற்றின் உறுப்பினர்களை ஆதரவு தரும்படி நிர்ப்பந்திக்கும்படி நேரடியாக வாக்காளர்களிடம் ஒபாமா மின்னஞ்சல் நெட் ஒர்க் மூலம் அழுத்தம் தரமுடியும்.இதன் மறுபக்கம் - வாக்காளர்களுக்கும் உதவிகரமானது. ஒபாமா ஆட்சியின் நடவடிக்கைக்கு எதிராகத் தங்கள் கருத்தையும் வாக்காளர்கள் மின்னஞ்சல்கள் வாயிலாகத் தெரிவித்து எதிர் அழுத்தமும் கொடுக்க முடியும்.

ஒபாமாவின் தேர்தல் உத்தியில் இங்கே கற்கவேண்டிய மற்றொரு முக்கியமான விஷயம், ஓட்டுப்பதிவில் தில்லுமுல்லுகள் நடக்காமல் வெற்றிகரமாக தடுத்ததாகும். அல்கோருக்கு எதிராக புஷ் ஜெயித்த தேர்தல் தில்லுமுல்லுத் தேர்தல் என்பது பகிரங்க உண்மை. இந்த முறை புஷ் உத்திகள் எதையும் குடியரசுக் கட்சி செய்துவிடமுடியாமல் திறமையாக ஒபாமாவின் அணி கண்காணித்துக் கொண்டது. குறிப்பாக, மாணவர்களை ஓட்டுப் போட விடாமல் தடுக்க பல உத்திகளை குடியரசுக் கட்சியினர் கையாண்டார்கள். அவற்றையெல்லாம் ஒபாமா அணி முறியடித்தது.
எல்லா விஷயங்களைப் பற்றியும் நேர்மையாகக் கருத்துச் சொல்லக் கூடியவர் என்ற பிம்பத்தைக் கட்டமைத்தது முதல், பண பலம், ஆள் பலம், செயல் திறன் பலம் என்று பெரிய வியூகம் அமைத்து ஒபாமா வென்றிருக்கிறார்.இனிமேல்தான் அவர் மீதான ஒவ்வொரு எதிர்பார்ப்புக்கும் சோதனைகள் ஆரம்பம். புஷ் செய்துவைத்திருக்கும் பொருளாதார குழப்பத்தை 4 வருடத்துக்குள் தீர்க்க முடியாது என்று இப்போதே ஒபாமா சொல்லிவிட்டார்.

ஒபாமாவிடம் இந்தியா என்ன எதிர்பார்க்கலாம் ?

அமெரிக்காவுக்கு எது நல்லதோ அதையேதான் புஷ் முதல் ஒபாமா வரை எல்லாரும் செய்வார்கள் என்பதை மறக்கவேண்டாம். இங்கிருந்து அமெரிக்காவுக்கு வேலை தேடிப் போவோரின் எண்ணிக்கையை ஒபாமா அதிகரிக்கவும் மாட்டார்; இப்போது வழங்கும் விசா எண்ணிக்கையை குறைக்கவும் மாட்டார். அணு ஒப்பந்தத்தைப் பொறுத்த மட்டில், என்னைப் போன்ற அணு எதிர்ப்பாளர்களுக்கு ஒபாமா சாதகமாக இருப்பார். முற்றாகக் கைவிடப்படாவிட்டாலும் புஷ் ஆட்சியில் போன வேகத்தில் அது இனி நகராது. பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் பகுதிகளில் ஒபாமா எடுக்கக்கூடிய நடவடிக்கைகள் இந்தியாவுக்கு எதிரானவையாக இராது என்று எதிர்பார்க்கலாம். காஷ்மீர் பிரச்னையில் இந்திய அரசுக்கு (மக்களுக்கு அல்ல) ஒபாமா கொஞ்சம் தலைவலி தரலாம்.உலகத்தைப் பொறுத்தமட்டில் ஒபாமா இராக் ஆக்ரமிப்பை நிறுத்திக் கொண்டு படைகளைத் திரும்பப் பெறுவார் என்ற எதிர்பார்ப்பு மெய்யாகும் வாய்ப்பு வரவேற்கக்கூடிய விஷயம். இரானில் யுத்தத்தை ஆரம்பிக்க மாட்டார் என்பது இன்னொரு ஆறுதல். மற்றபடி இஸ்ரேல் ஆதரவு பாலஸ்தீன எதிர்ப்பு என்பதில் அவர் புஷ்ஷிலிருந்து வேறுபட்டவர் அல்ல. ஒபாமாவின் வெற்றியில் மிக முக்கியமான அம்சம் நிறவெறிக்கு எதிரான மனித சமத்துவப் போராட்டத்தில் அடுத்த கட்டத்துக்கு நாம் செல்ல அவருடைய வெற்றி உதவுகிறது என்பதுதான்.

இதிலிருந்து இங்கே நம் சூழலுக்குப் பொருத்தமாக நாம் செய்ய வேண்டியது என்ன ?

குறைந்தபட்சம் தமிழ்நாட்டில் ஒரு தலித் முதலமைச்சர் ; டெல்லியில் ஒரு முஸ்லிம் பிரதமர். (நிச்சயம் ராசா, கலாம் போன்ற பொம்மைப் பிரதிநிதிகள் அல்ல.) அதை நோக்கி நம் அரசியலை நம் மன நிலையை வளர்ப்பதுதான் நாம் செய்ய வேண்டியது..

இந்த வார ஆச்சரியம்

டெல்லி மாநில முதலமைச்சராக பத்தாண்டுகளாக இருந்து வரும் காங்கிரஸ் பிரமுகர் ஷீலா தீட்சித் இப்போது மீண்டும் தேர்தலில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்தபோது கொடுத்த சொத்துக் கணக்கின்படி, அவருடைய மொத்த சொத்து மதிப்பு வெறும் ஒரு கோடி 25 லட்சம்தானாம் ! அவருக்குச் சொந்தமாக ஒரு கார் கூட இல்லை !

இந்த வாரக் கேள்வி

முதல் முயற்சியிலேயே நிலவுக்கு விண்கலத்தை வெற்றிகரமாக அனுப்பும் அளவுக்கு அறிவியல் வளர்ச்சியும் தொழில்நுட்ப ஆற்றலும் உடைய இந்தியாவில் ஏன் இன்னமும் மலக் கழிவுகளை எளிதாகவும் பாதுகாப்பாகவும் அகற்றுவதற்கான தொழில் நுட்பம் உருவாக்கப்பட்டு நடை முறைப்படுத்தப்பட வில்லை? இந்த வாரம் கூட சென்னை தாம்பரத்தில் இரு தொழிலாளர்கள் கழிவுத் தொட்டியை சுத்தப்படுத்து கையில் விஷவாயு தாக்கி இறந்திருக்கிறார்கள். அணுக்கதிர்க் கழிவுகளையெல்லாம் பத்திரமாக வைத்திருக்கிறோம் என்று சொல்லும் விஞ்ஞானிகள் உள்ள தேசத்தில் மலக்கழிவுகளால் மனிதர்கள் சாவது ஒரு தேசிய அவமானம் இல்லையா?

நன்றி குமுதம்

4 comments:

SUREஷ் said...

ஏராளமான வெள்ளையர்கள் நிறவெறிக்கு எதிராகக் கடுமையாக உழைக்கிறார்கள். அவர்கள்தான் ஒபாமாவை தங்கள் வேட்பாளராகவே ஆக்கியவர்கள். இன்னும் ஏராளமான வெள்ளையர்கள் மனம் மாறாதவர்களாகவே இருக்கிறார்கள்.

உண்மை.........

SUREஷ் said...

. புஷ் செய்துவைத்திருக்கும் பொருளாதார குழப்பத்தை 4 வருடத்துக்குள் தீர்க்க முடியாது என்று இப்போதே ஒபாமா சொல்லிவிட்டார்.

நம்ம புத்தகமெல்லாம் படிப்பாராம்.......

SUREஷ் said...

ஒவ்வொரு விஷயத்தையும் மக்கள் முன்பு வைத்து விவாதித்துதான் முடிவு எடுப்பேன் என்று அவர் திரும்பத் திரும்பச் சொன்னதாகும். இதை எந்த அளவு செய்வார் என்பது போகப் போகத்தான் தெரியும்//////////////////////////////////////////////////////////////

அப்ப எப்ப முடிவெடுப்பார்...........

அத்திரி said...

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சுரேஷ். ஒபாமா அவ்ங்க ஊர் ஸ்டைலில் சொல்லியிருக்கிறார்.

நம்ம ஊர் ஸ்டைல் எப்படி இருக்கும்????????????