Saturday, November 22, 2008

இவ்வாரம் ஞாநியின் பார்வையில்

இணையதளத்தில் பல விஷயங்களை சுதந்திரமாக உடைத்து எழுதும் வசதி இன் னும் பத்திரிகையுலகுக்கு வந்து சேரவில்லை. அப்படிப்பட்ட விஷயங் களில் ஒன்று, சட்டக் கல்லூரி வன்முறை.


* மாணவர் மனங்களில் இப்படிப் பட்ட துவேஷம் எங்கிருந்து உருவாகிறது
இது அவர்கள் கண்டுபிடித்த புதிய துவேஷம் அல்ல. பல தலை முறைகளாக கிராமங்களில் தாய்ப் பாலோடு சேர்த்து ஊட்டப்பட்டு வரும் ஜாதி உணர்ச்சியின் விளைவே இந்த மோதல்.

* அப்படியானால் இவ்வளவு துவேஷமுள்ள மாணவர்கள் மோதிக்கொண்டு சாகட்டும் என்று சொல்வீர்களா?

ஒருபோதும் இல்லை. எல்லா வன்முறையும் அருவருக்கத்தக்கதுதான். யார் யாரை அடிக்கிறார்கள் என்ற வேறுபாடுகள் ஒரு கட்டத்துக்கு மேல் அர்த்த மற்றவை. துளியும் மனிதத் தன்மை அற்ற மனநிலையில்தான் இப்படிப்பட்ட வன்முறை சாத்தியம். அந்த மனநிலைக்கு இளம் உள்ளங்கள் தள்ளப்பட்டுவிட்டது பெரும் வேதனையாக எனக்குப் படுகிறது. இன்னொரு மனிதனை கம்பாலும் இரும்புக் குழாயாலும் நையப் புடைத்த கைகளை விட, கத்தியால் வெட்டித் தள்ளத் துடித்த கைகளை விட அதிகம் ஆபத்தானவை அந்தக் கைகளை இயக்கிய மனங்கள்தான்.

* அந்த மனங்களை உருவாக்கியது யார் ?

நாம்தான். நம் சமூகத்தின் மிக முக்கிய சக்திகளான நான்கு சக்திகளும் இதற்குப் பொறுப்பு. ஒன்று அரசியல். இரண்டாவது சினிமா. மூன்றாவது ஜாதி. நான்காவது குடும்பம்.

* நான்கும் எப்படிப் பொறுப்பு என்று விளக்க முடியுமா?

ஜாதி அமைப்பு, அடுக்கு முறையில் மேலிருந்து கீழ் வரை ஒவ்வொருவரும் அடுத்திருப்பவரை நசுக்கும் அமைப்பு. மிகச் சிறிய வயதிலேயே இந்த ஜாதி வேறுபாட்டையும் ஒடுக்குவதையும் ஒடுக்கப்படுவதையும் தம் இயல்புகளாக ஏற்றுக் கொள்ள, பிஞ்சு மனங்களை நம் குடும்பம் பயிற்றுவிக்கிறது. நீ இன்ன ஜாதியில் பிறந்திருக்கிறாய். அதன் விதிகளுக்கேற்ப நடந்துகொள் என்று குழந்தையிலிருந்தே மௌனமாகவும் பிராக்டிகலாகவும் குடும்பம் நமக்கு போதிக்கிறது. எந்த ஜாதி என்பதைப் பொறுத்துத் தனக்குக் கிடைக்கும் மரியாதைகளையோ அவமானங்களையோ சகஜமாக கேள்வியேதும் கேட்காமல் ஏற்றுக் கொள்ளும் இயல்பைக் குடும்பம் குழந்தைகளுக்கு ஏற்படுத்தி விடுகிறது. அவரவர் ஜாதி `அந்தஸ்து'க்குரிய திமிரோ, பெருமிதமோ, கூச்சமோ, அடிமைத்தனமோ இயல்பாக்கப்படுகிறது.

இதிலிருந்தெல்லாம் நம்மை விடுவிக்க வேண்டிய பொறுப்பு யாருடையது ?

அந்தப் பொறுப்பு அரசியலுக்கும் கல்விக்கும் கலைக்கும் உரியது. கல்வி முதல் காவல் துறை வரை அனைத்தையும் கட்டுப்படுத்துவது அரசியல்தான். ஆனால் இங்கே இருக்கும் அரசியல் கட்சிகள், தலைமைகள் எல்லாம், ஒரு சில விதி விலக்குகள் தவிர, கேவலமானவை. பதவிசுகம், சுயநலம், இதற்குத் தேவைப்படும் ஓட்டுக்காக எதையும் செய்யத் தயாராயிருப்பவை. நமக்கு உழைப்பதற்காகவே பதவிக்கு வருவதாக நம்மை சாமர்த்தியமாக ஏமாற்றும் தந்திரசாலிகள். முழுப் பொய்களைச் சொல்லவே மாட்டார்கள். எப்போதும் அரை உண்மைகளையே பேசுவார்கள்.

* ஜாதி வெறி உணர்ச்சியை வளர்ப்பதில் கட்சிகளின் பங்கு என்ன ?

ஓட்டுக்காக ஒவ்வொரு சமயம் ஒவ்வொரு ஜாதியின் அபிமானத்தைப் பெறுவதற்காக பல வேலைகளைச் செய்கிறார்கள். வெவ்வேறு ஜாதிச் சங்கங்கள் தங்களை அரசியல் கட்சிகளாகவே மாற்றிக் கொள்கின்றன. ஜாதிகளுக்கு அப்பாற்பட்டு மக்கள் ஆதரவைத் திரட்டும் வலிமையை இழந்து வரும் பெரிய கட்சிகள், ஓட்டுக்காக ஜாதிக் கட்சிகளுடன் கூட்டு சேர்ந்து அவற்றை வளர்த்துவிடுகின்றன.

பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்குத் தனி விடுதிகள், தலித் மாணவர்களுக்குத் தனி விடுதிகள் என்று அரசு ஏற்படுத்தியதே மிகப் பெரிய வரலாற்றுப் பிழை. கிராமத்தில் ஊர், சேரி (காலனி) என்று பிரித்ததன் தொடர்ச்சியே இது. சேரன்மாதேவி குருகுலத்தின் தீண்டாமையை எதிர்த்த பெரியாரின் பாரம்பரியத்துக்கு, திராவிட இயக்க ஆட்சி துரோகம் செய்துவிட்டது என்றே சொல்லலாம். ( இந்த விடுதிகளின் படு அவலமான நிலை தனிக்கதை. மனித ஜீவிதத்தையே கேவலப்படுத்தும் விதத்தில் இவற்றை நடத்திவரும் அதிகாரிகள், ஆட்சியாளர்களுக்கெல்லாம் அந்தமான் சிறையில் ஆயுள் தண்டனை விதிக்கலாம்.)

பொது விடுதிகளில்தான் எல்லா மாணவர்களும் இருக்க வேண்டும். அங்கேதான் எல்லாருக்கும் சமத்துவம் கற்பிக்கப்படவேண்டும். தனியார் கல்லூரிகளில் பெருமளவு சாத்தியமாகும் இதனை, அரசுத் துறையில் செய்யத் தவறிவிட்டதற்கு அரசியல் கட்சிகளே பொறுப்பு.

* பொறுப்பு தவறியதில், கலையின் பங்கு என்ன ?

இங்கே பெருமளவு ஆதிக்கம் செலுத்தும் கலை சினிமா. நிலப் பிரபுத்துவ காலத்து ஜாதிப் பெருமைகளை தமிழ் சினிமா கடந்த 20 வருடங்களில் அதிகமாகப் பேசியிருக்கிறது. இன்னொரு பக்கம் கண் மூடித்தனமான வன்முறைக் காட்சிகள். இந்தப் படங்களை மண்ணின் மணம் கமழ்பவை, தமிழ்ப் பண்பாட்டை சித்திரிப்பவை என்று பொய்யாகப் புகழ்வது, வன்முறைக் கலாசாரத்தை கௌரவப்படுத்தியிருக்கிறது. புதிதாக வரும் ஒவ்வொரு இளம் நடிகனும் மென்மையாக நடித்துப் பெயரெடுத்த அடுத்த நொடியே ரவுடி, பொறுக்கியாக மட்டுமே நடிக்க விரும்புகிறான். அதுதான் அவன் ரேட்டை லட்சத்திலிருந்து கோடிகளுக்கு உயர்த்துமாம்.

* இதெல்லாம் பொழுதுபோக்குதானே? படத்தைப் பார்த்து வன்முறை பெருகிவிடாது; வாழ்க்கையில் இருக்கும் வன்முறையைத்தான் நாங்கள் காட்டுகிறோம் என்று சினிமாக்காரர்கள் சொல்கிறார்களே ?அருவருக்கத்தக்க வன்முறையை ரசிக்கத்தக்கதாக மாற்றுவதுதான் இவர்களுடைய கலை செய்யும் ஆபத்து. பொறுக்கியை கண்டிப்பதற்கு பதிலாக ரசிப்பது சீரழிவுக்கே வழி. மிகக் கொடூரமான வன்முறையை விவரமாகக் காட்டும்போது, இளம் மனங்கள் அதற்குப் பழகிப் போகின்றன. நிறையப் பார்க்கப் பார்க்க, மரத்துப் போகின்றன. இதனால் நேரில் ரத்தம் கொட்டுவதைப் பார்க்கும்போது பதற்ற உணர்ச்சி இல்லாமற் போய்விடுகிறது. வன்முறை பற்றி மனம் மரத்துப் போவது தான் மிக ஆபத்தானது.

* சட்டக்கல்லூரியில் போலீஸ் வாய்மூடியிருந்ததும் அப்படிப்பட்ட வன்முறைதானே ?

ஆம். எந்த விதத்திலும் நியாயப்படுத்த முடியாத அநீதி அது. மேலிருந்து அரசியல் உத்தரவு வந்திருந்தால், அதை போலீசார் விசாரணைக் கமிஷன் முன்பு பகிரங் கப்படுத்த வேண்டும். கல்லூரிக்குள் நுழைய பிரின்சிபால் அனுமதியோ அழைப்போ வேண்டும் என்பது சட்ட விதியே அல்ல. காவல் அதிகாரிகள் பிரின்சிபாலிடம் போய் `இப்போது எங்களை உள்ளே வரும்படி அழை; இல்லாவிட்டால் வன்முறைக்கு உடந்தை என்று உங்களையும் கைது செய்வோம்' என்று சொல்லியிருக்கலாம். மோதல் பற்றி உளவுத் தகவல் முன்கூட்டி கிடைத்தபோதும் செயல்படாதது பெருந்தவறு.

* ஜாதி மோதல்களிலிருந்து விடிவே வராதா?

வரும். வந்தே தீரும். பல காலமாக ஒடுக்கப்பட்ட ஜாதியினரிடம் இப்போது விழிப்பு ஏற்படும்போது, அது பூமிப் பந்தின் உள்தகடுகள் அசைந்தால் நில நடுக்கம் ஏற்படுவது போல சமூக அதிர்வுகளை ஏற்படுத்துகிறது. அரசியல் தலைமைகள் செய்யத் தவறுகிற `எல்லாருக்கும் சமமான கட்டாயக் கல்வி` என்பது முதல் தேவை. ஜாதி, மதம் முதலியவற்றின் அடிப்படையில் யார் எங்கே எந்த மனித உரிமையை மீறினாலும், பாரபட்சமில்லாமல் நடவடிக்கை எடுக்கும் அரசியல் உறுதி வேண்டும். எந்த ஜாதி அமைப்பு தொடர்பான நிகழ்ச்சியிலும் எந்த அரசியல், கலை, கல்வித்துறைப் பிரமுகர்கள் பங்கேற்கக்கூடாது. ஜாதி மறுத்து நடக்கும் கலப்புத் திருமணத் தம்பதியினருக்கு வேலையில் இட ஒதுக்கீடு, பொருள் உதவி முதலியன தரப்படவேண்டும். தேர்தல் ஆணையம் போல காவல் துறை சுயாட்சி அமைப்பாக்கப்பட வேண்டும். இப்படி நிறைய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டால்தான் சமூக மாற்றம், சமத்துவம் ஏற்படமுடியும்.

* கடைசியாக ?

கத்தியைத் தூக்கிய பாரதி கண்ணன்களுக்கும் கம்புகளைத் தூக்கிய சித்திரைச் செல்வன்களுக்கும் ஒரு ஸ்வீகாரத் தந்தையாக சில வார்த்தைகள் சொல்ல விரும்புகிறேன். அரசியலுக்கு வாருங்கள். ஆனால் சரியான கொள்கைகளையும் லட்சியங்களையும் தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள். ஜாதி அமைப்புகளில் இன்று ஒரு நல்லகண்ணு, ஒரு கே.ஆர்.நாராயணன் போன்ற மாமனிதர்களை உருவாக்கும் தலைமைகள் இல்லை. கத்திக்கும் கம்புக்கும் பதிலாக பேனாவையும் கம்ப்யூட்டரையும் உங்கள் கைகளில் தரக்கூடிய தலைமைகளைத் தேடுங்கள்.

ஒரு நிமிடம் யோசியுங்கள். நீங்கள் எந்த ஜாதியில், எந்த வீட்டில், எந்த நாட்டில் பிறந்தீர்கள் என்பதெல்லாம் தற்செயலாக இயற்கையில் நடந்த ஒரு விபத்து. வீடு மாறிப் பிறந்திருந்தால், உங்களில் யார் எந்தத் தலைவருக்காக ஆயுதம் தூக்கியிருப்பீர்கள் என்று யோசித்துப் பார்த்தால், இதன் அபத்தம் புரியும். ஜாதிப் பெருமையோ சிறுமையோ உங்கள் மீது பிறப்பால் திணிக்கப்பட்டது. நீங்கள் தேர்ந்தெடுத்தது அல்ல. அதைத் தூக்கி எறியுங்கள். ஒரு புல்லாக, ஒரு பூச்சி யாக, ஒரு புழுவாகப் பிறக்காமல், ஒரு மனிதக் குழந்தையாகப் பிறந்திருப்பதன் பயனை முழுமையாக அனுபவிக்க உங்களுக்குத் தேவை அன்பு; ஆயுதம் அல்ல..

வேதனைக்கு நடுவே இந்த வாரச் சிரிப்பு

அ.இ.அ.தி.மு.க நடத்தும் பொதுக் கூட்டங்களில் இனி தனி நபர்களைப் பாராட்டிப் பேசக்கூடாது என்று கட்சிப் பொதுச் செயலாளர் ஜெயலலிதா உத்தர விட்டுள்ளார்.

12 comments:

gnani said...

குமுதத்தில் வெளியிடப்படாத பகுதிகளுடன் முழுமையான கட்டுரையை என் இணைய தளத்தில்காணலாம். ஞாநி www.gnani.net

அத்திரி said...

வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி ஐயா.

narsim said...

அத்திரி.. கலக்கல்.. அந்த கடைசி காமெடி ரசித்தேன்

அத்திரி said...

நன்றி நர்சிம். அம்மா எந்த ஞாபகத்துல இதை சொன்னாங்கன்னு தெரியலையே...

பிச்சைப்பாத்திரம் said...

தெளிவான பார்வையில் தெளிவான மொழியில் எழுதப்பட்ட இந்தக் கட்டுரையுடன் பெரிதும் உடன்படுகிறேன். பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

அத்திரி said...

வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி சுரேஷ்

குப்பன்.யாஹூ said...

அத்திரி நன்றி.

ஞானி சார் நன்றி, தங்களின் முழு கட்டுரை அருமை.

ஞானி சொல்வது போல இங்கே மாவட்ட செயலாளர், ஒன்றிய செயலாளர்கள் ஜாதி பார்த்து தானே நியமிக்கப் படுகிறார்கள்.

குப்பன்_யாஹூ

thamizhparavai said...

இந்த வாரச் சிரிப்பு அல்ல அது இந்த வார சிரிப்போ சிரிப்பு...
இப்படி அறிவிச்சதுக்காக இந்த மாதம் முழுக்க அம்மாவுக்குப் பாராட்டுவிழான்னு கேள்விப்பட்டேன் உண்மையா...?!

அத்திரி said...

வாங்க குப்பன். சரியாச் சொன்னீங்க. நன்றி

அத்திரி said...

வாங்க தமிழ்ப்பறவை. அதிமுக பேச்சாளர்கள் அம்மாவைத்தான் அதிகமா புகழ்வாங்க. இனிமே அவங்க தான் பேசுரதுக்கு விசயத்தை தேடவேண்டியிருக்கும்

ஆ! இதழ்கள் said...

தாங்கள் விரும்பி படித்து பகிரும் ஞாநியின் வருகை உங்களுக்கு மகிழ்ச்சியைக் கொடுத்திருக்கும் என்று நம்புகிறோம். வாழ்த்துக்கள். தொடரட்டும் உங்கள் பணி.

அத்திரி said...

//தாங்கள் விரும்பி படித்து பகிரும் ஞாநியின் வருகை உங்களுக்கு மகிழ்ச்சியைக் கொடுத்திருக்கும் //

சந்தோசம்தான்

நன்றி ஆ இதழ்கள்