ஒவ்வொரு முறை மும்பை செல்லும்போதும் மூன்று காரணங்களுக்காக மும்பையிலேயே நிரந்தரமாகத் தங்கிவிடும் ஆசை வந்து போகும்.
ஒரு காரணம் சினிமா. இரண்டாவது காரணம் நாடகம். மூன்றாவது ஆட்டோ. சென்னையில் 200 ரூபாய் கொடுக்கும் தொலைவுகளுக்கு மும்பையில் 70 ரூபாய்தான் ஆட்டோ கட்டணம். சென்னையில் 20 ரூபாய் வாங்கும் இடத்துக்கு அங்கே ஒன்பது ரூபாய். நானும் எனக்குத் தெரிந்த பல ஆட்டோ டிரைவர் தோழர்களையும் யூனியன் நண்பர்களையும் என் செலவில் மும்பை வந்து, இங்கே மட்டும் இது எப்படி சாத்தியமாகிறது, சென்னையில் இது சாத்தியமாக விடாமல் தடுக்கும் அம்சங்கள் என்ன என்பதை ஆராயும்படி கேட்டுக் கேட்டு அலுத்துப் போய்விட்டேன்.
ஹிந்தி சினிமாவில் அரிவாள், துப்பாக்கி, வெட்டு குத்து, பழி வாங்கல் ஃபார்முலாவுக்கு டாப் ஹீரோக்கள் விடை கொடுத்துவிட்டார்கள். தமிழ் இயக்குநர் முருகதாசும் தெலுங்குத் தயாரிப்பாளர்களும் சேர்ந்து உருவாக்கியிருக்கும் ஹிந்திப் படமான `கஜினி' ஒரு விதிவிலக்கு.
அதில் கூட ஹீரோ அமீர்கான், இது என் பாணிப் படமல்ல என்று பேட்டிகளில் எச்சரிக்கையாக சொல்லிக் கொண்டிருக்கிறார். படத்தின் கடைசிக் காட்சி தமிழைப் போல வன்முறையில் முடியக்கூடாது என்று மாற்றியமைத்திருக்கிறார். வன்முறையில்லாத கிறிஸ்துமஸைக் கொண்டாடுங்கள் என்று அக்ஷய் குமார் குரல் கொடுத்திருக்கும் அனிமேஷன் படமான ஜம்போ விளம்பரத்தில் கஜினியை மறைமுகமாக கிண்டலடித்திருக்கிறார்கள்.
அமீர்கான், ஷாருக்கான், சல்மான் கான், சஞ்சய் தத், அக்ஷய், அபிஷேக் பச்சன், ஜான் ஆப்ரஹாம் என்று அத்தனை ஹீரோக்களும் ரொமான்ஸ், காமெடி, திக்கான கதைப்படங்கள், வன்முறையில்லாத த்ரில்லர்கள் என்று இறங்கி ஏழெட்டு வருடங்களாகின்றன. தமிழிலோ பிரசன்னா, நரேன், ஷ்ரீகாந்த் போன்றவர்கள் கூட அரை டிராயர், லுங்கி, அரிவாளுடன் கதை சொல்லும்படி புது இயக்குநர்களை டார்ச்சர் செய்துகொண்டிருக்கிறார்களாம்.தஸ்விதான்யா என்று ஒரு படம் பார்த்தேன். லோ பட்ஜெட் படம். பெரிய பட்ஜெட் படங்களுக்கு மத்தியில் இதுவும் லாபகரமாகவே ஓடியிருக்கிறது. கதாநாயகன் வினய் பதக், பெரிய படங்களில் ஹீரோவின் நண்பன் வேடங்களில் வரக்கூடிய குணச்சித்திர நடிகர்.
தனியார் அலுவலக ஊழியர் பாத்திரம். 35 வயதாகியும் திருமணம் செய்யாமல், காது கேட்காத அம்மாவைப் பார்த்துக் கொண்டு விஸ்வாசமாக ஆபீஸுக்கு உழைக்கும் பாத்திரம். குடல் புற்று நோயால் இன்னும் ஓரிரு மாதங்களில் இறந்துவிடுவோம் என்பது தெரிந்ததும், பத்து ஆசைகளைப் பட்டியல் போட்டு வைத்துக் கொண்டு ஒவ்வொன்றாக நிறைவேற்றிக் கொள்வதுதான் கதை. சிவப்பு கார் வாங்குவது, வெளி நாடு செல்வது, பள்ளியில் தனக்குப் பிடித்த வகுப்புத் தோழியை தேடிப் பிடித்து சந்திப்பது போன்ற பத்து ஆசைகள். நகைச்சுவையும் மெல்லிய சோகமும் கலந்து இயல்பாக சொல்லப்பட்டிருக்கும் படம்.
பார்த்த இன்னொரு படம் மகாரதி. குஜராத்தி மொழியில் 21 வருடங்களாக மேடை நாடகமாக நடிகர் பரேஷ் ரவால் நடத்தி வந்த நாடகம் படமாகியிருக்கிறது. தன் சொத்துக்கு ஆசைப்படும் இளம் மனைவியை எரிச்சலூட்டுவதற்காக குடிகார பணக்காரக் கணவன், தான் தற்கொலை செய்துகொண்டால் அவளுக்கு இன்சூரன்ஸ் பணம் கிடைக்காது என்று மிரட்டுகிறான். தன் தற்கொலையை கொலை என்று நிரூபித்து பணத்தை அடையும்படி சொல்லிவிட்டு, தன்னைத்தானே சுட்டுக் கொண்டு செத்துப் போகிறான். பணத்துக்காக அவளும் ஒரு குட்டித் திருடனும், வக்கீலும் போடும் திட்டங்கள், முடிவில் யார் ஜெயிக்கிறார்கள் என்ற சஸ்பென்ஸ் எல்லாம்தான் படம். நசிரூதீன் ஷா, ஓம் பூரி, போமன் இரானி, பரேஷ் ரவால் என்று திறமையான நடிகர்களின் நடிப்புதான் படத்தின் சிறப்பு
ஹிந்தி சினிமாவில் இப்படி வித்தியாசமான முயற்சிகள் சிறிய பட்ஜெட்டில் சகஜமாக நடக்கின்றன. இன்னொரு பக்கம் அபிஷேக், ஜான் ஆப்ரஹாம் போன்ற ஹீரோக்கள் கூட தயக்கம் இல்லாமல் ஹோமோசெக்ஷுவல் பாத்திரங்களில் `தோஸ்தானா' போன்ற படங்களில் நடிக்கிறார்கள்.
தமிழ் சினிமாவில் இப்படிப்பட்ட சூழலே இல்லை.
ஒரு வித்தியாசமான முயற்சி இங்கே எவ்வளவு கடினமானது என்பதற்கு சென்ற வருடம் இதே டிசம்பர் மாதம் நான் பிரமிட் சாய்மீரா நிறுவன உதவியுடன் ஆரம்பித்த ஒற்றை ரீல் இயக்க அனுபவமே ஓர் உதாரணம். நல்ல சிறுகதைகள், வித்தியாசமான முயற்சிகள், புதிய திறமைசாலிகள் ஆகியோரை அறிமுகப்படுத்தி வளர்ப்பதே இதன் நோக்கம். படத்தின் நீளம் ஒரே ரீல். அதாவது பத்து நிமிடம். மெயின் படம் ஆரம்பிப்பதற்கு முன்பு தியேட்டரில் இதை இலவசமாகப் போட்டுக் காண்பிப்பதே திட்டம்.
எழுத்தாளர் திலீப்குமாரின் சிறுகதையை அடிப்படையாகக் கொண்டு, இரண்டே பாத்திரங்கள் கொண்ட ஒரு படத்தை உருவாக்கினேன். நடிகை ரோஹிணியும் எங்கள் நாடகக்குழு நடிகர் நீல்சன்னும் நடித்த `திருமதி ஜேம்ஸ் இப்போது என்ன செய்யவேண்டும்?' என்ற இந்த முதல் படத்தை கடந்த டிசம்பரில் 40 அரங்குகளில் பிரமிட் சாய்மீரா திரையிட்டது. லூமியர் பிரதர்ஸ் முதல் சினிமாவைக் காட்டிய அதே நாளில், 40 ஊர்களில் 40 தமிழ் எழுத்தாளர்கள் இதைத் தொடங்கி வைத்தார்கள். அஜீத் நடித்த `பில்லா' படத்துக்கு முன்பாக காட்டப்பட்ட படம் இரு மாதங்கள் அரங்குகளில் இருந்து பெருமளவு வரவேற்பு பெற்றது.
மொத்தமாக நான் ஆறு படங்கள் செய்வதாக திட்டம். புது திறமையாளர்கள் அனுப்பும் விண்ணப்பங்களிலிருந்து தேர்வு செய்து மேலும் ஆறு படங்களை உருவாக்கத் திட்டமிட்டிருந்தோம். சுமார் 80 பேர் விண்ணப்பித்தனர். அவற்றில் நடிகை ரோஹிணியின் ஸ்க்ரிப்ட் உட்பட 10 கதைகள் தயாரிப்புக்குத் தகுதியானவையாக இருந்தன.
முதல் பட வெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட நடிகர் சத்யராஜ் இப்படிப்பட்ட முயற்சிகளில் தான் இலவசமாகக் கூட நடித்துத் தரத் தயார் என்று அறிவித்தார். அடுத்த படத்துக்கே அவரைக் கேட்டேன். (இலவசமாக அல்ல. டோக்கன் சம்பளத்துக்குத்தான்.) எழுத்தாளர் அன்பாதவன் எழுதிய சிறுகதை. சத்யராஜுக்கு மிகவும் பிடித்திருந்தது. உடை அளவு எல்லாம் எடுத்தாகிவிட்டது. இன்னும் இரு தினங்களில் படப்பிடிப்பு. சத்யராஜ் விலகிக் கொண்டார். காரணம், அவருடைய அடுத்த இரு படத் தயாரிப்பாளர்கள், ஒற்றை ரீலில் அவர் நடித்தால் அவர் மார்க்கெட் அடிபடும் என்று பயப்படு(த்து)கிறார்களாம்.
நிச்சயித்த படப்பிடிப்பு தினத்தன்று, நண்பர் நடிகர் தலைவாசல் விஜய் அந்தப் பாத்திரத்தில் நடித்துக் கொடுத்தார். `உள்ளேன் அய்யா' என்ற அந்தப் படம் முடிந்து தணிக்கையெல்லாம் ஆகி பத்து மாதங்களாகிவிட்டன. இன்னும் தியேட்டருக்கு வரவில்லை. காரணம், பிரமிட் சாய்மீராவின் மார்க்கெட்டிங் டிவிஷன் இன்னும் படத்துக்கு ஸ்பான்சர் தேடிக் கொண்டிருக்கிறது.ஒற்றை ரீல் இயக்கத்தை ஆரம்பிக்கும்போதே அவர்களிடம் சொன்னேன். படத் தயாரிப்புச் செலவு மூன்று லட்சம் ரூபாய். 40 பிரிண்ட், விநியோகச் செலவெல்லாம் இன்னொரு மூன்று லட்சம். மொத்தம் ஆறு லட்சம் ரூபாய் செலவுக்கு, படத்தின் ஆரம்பத்தில் 30 செகண்ட், முடிவில் 30 செகண்ட் விளம்பரதாரர் கிடைத்தால் போதும். லாபம் நஷ்டம் இல்லாத புராஜெக்ட்டாக இதைச் செய்யமுடியும்.
பல தொலைக்காட்சிகளில் பல தொடர்களைத் தயாரித்து ஒளிபரப்பும் நிறுவனத்துக்கு விளம்பரதாரர்கள் கிடைப்பது பெரிய சிக்கலாக இருக்கக்கூடாது. விளம்பரதாரர்கள் கிடைக்கவே இல்லையென்று வைத்துக் கொண்டாலும் கூட, வருடத்தில் 12 ஒற்றை ரீல் படங்களுக்கு ஆகப் போகும் மொத்தச் செலவு வெறும் 72 லட்சம் ரூபாய்கள்தான்.`குசேலன்' படத்தில் மட்டும் அவர்கள் அடைந்த நஷ்டம் 20 கோடி ரூபாய்க்கும் மேல். அதே சமயம் ஒற்றை ரீல் போன்ற முயற்சிகளில் ஒரு கம்பெனிக்குக் கிடைக்கும் நன் மதிப்பு விலைமதிப்பற்றது.
ஆனால் இப்படிப்பட்ட வித்தியாசமான முயற்சிகள், எங்கேயும் எப்போதுமே வணிக முயற்சிகள் நகரும் வேகத்தில் நகர்வதில்லை. ஒரு நிறுவனத்தின் தலை முதல் வேர் வரை எல்லாருக்கும் ஈடுபாடு இருந்தாலொழிய இவை வெற்றி பெறமுடியாது. மேல் மட்டத்தில் மூன்று நான்கு பேர் மட்டும் காட்டும் அக்கறை போதுமானதல்ல. இதை நிர்வாக இயக்குநர் சாமிநாதனும் நானும் இந்த ஓராண்டில் பல விஷயங்களில் புரிந்துகொண்டோம்.இப்படிப்பட்ட சூழலில் சென்ற வருடத்தை விட இந்த வருடம் ஓரடி முன்னே போயிருந்தாலே ஆறுதல்தான் என்றே கருதவேண்டும். போன டிசம்பரில் என்வசம் இல்லாத இரு குறும்படங்கள் இந்த டிசம்பரில் உள்ளன. ஓரடி முன்னே ?!
ஒற்றை ரீல் இயக்கம் போன்ற வணிக சினிமாவுக்கு நேரடித் தொடர்பு இல்லாத முயற்சிகளே தமிழ்ச் சூழலில் சிரமமானவை என்கிறபோது, வணிக சினிமாவுக்குள் மாற்று முயற்சிகள் மேலும் கடினமானவை.
மும்பையில் என்னை ஈர்க்கும் இன்னொரு அம்சம் நாடகம். இரவு 9 மணிக் காட்சிக்கு ஜுஹு பிருதிவி அரங்கம் நிரம்பி வழிவது மனம் நிறைக்கும் காட்சி. பயங்கரவாதத் தாக்குதல் முடிந்த சில தினங்களிலேயே நாடக அரங்குகளுக்கு வழக்கம் போல மும்பைவாசிகள் வந்துவிட்டார்கள்.
தமிழ் சினிமா ரசிகர்கள் கொடூரமான போலீஸ் அதிகாரி, அரசியல்வாதி பாத்திரங்களில் பார்த்து `ரசிக்கும்` நடிகர் அஷீஷ் வித்யார்த்தியை பிருதிவி அரங்கில் முற்றிலும் வித்தியாசமான பாத்திரத்தில் பார்த்தேன். நாடகத்தில் அவர் ஒரே ஒரு நடிகர் மட்டும்தான். 90 நிமிடம் இடைவெளி இல்லாமல் பேசி நடித்தார். நதீரா பாபர் இயக்கிய இந்த நாடகம் கிராமத்திலிருந்து சினிமா ஆசையுடன் மும்பைக்கு வந்து வாழ்க்கை அனுபவங்களில் அடிபட்டு மன நிலை சிதைந்து நடிகனாகாமலே இறந்து போகும் ஒரு இளைஞனைப் பற்றியது. அஷீஷ் வித்யார்த்தி போன்று தேசிய நாடகப் பள்ளியில் படித்துத் தேர்ந்த ஒரு திறமையான நடிகரையெல்லாம் தமிழ் சினிமா எப்படி வீண்படுத்துகிறது என்ற வருத்தம் ஏற்பட்டது. அதே சமயம் தெலுங்கு, தமிழ் என்று பிஸியான சினிமா வேலைக்கு நடுவில், இப்படி தாய்மொழியில் நாடகம் நடிப்பதற்கு அஷீஷ் போன்றவர்கள் காட்டும் அக்கறை அவர் மீது மதிப்பேற்படுத்தியது. ஒரு தமிழ் நடிகர் நாடகம் நடிப்பது பற்றி பத்து வருடமாகப் பேசிக் கொண்டே இருக்கிறார்.
வஜினா மோனோலாக்ஸ் (யோனி பேசுகிறது) என்ற நாடகம் மும்பையில் ஆங்கிலத்திலும் ஹிந்தியிலும் அடிக்கடி நிகழ்த்தப்படுகிறது. இதே நாடகக் குழுவினர் சென்னையில் இதை ஆங்கிலத்தில் நடத்த கடந்த மூன்று வருடங்களில் இரு முறை வந்தபோது, ஒவ்வொரு முறையும் கடைசி நிமிடத்தில் சென்னைக் காவல் துறையால் அனுமதி மறுக்கப்பட்டுவிட்டனர். நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்த டைம்ஸ் ஆஃப் இந்தியா பத்திரிகை கூட எதிர்ப்புக் குரல் எழுப்பவில்லை. மும்பையாக இருந்திருந்தால் அதுவே ஓ என்று சத்தம் போட்டிருக்கும். சென்னையில் இருக்கும்போது சென்னைவாசி போல நடந்துகொள்கிறது.ஒவ்வொரு முறை சென்னை திரும்பும்போதும் அடுத்த முறை மும்பைக்கு வரத் தேவை இருக்கக் கூடாது என்றே நினைத்துக் கொள்கிறேன். காரணம், தாய்மொழி மீது இருக்கும் அன்புதான். ஆனால் சென்னையின் ஆட்டோ,சினிமா, நாடகச் சூழல் என்னை அவ்வப்போது இளைப்பாற மும்பைக்குத் துரத்திவிடுகின்றன..
நன்றி. குமுதம்...
யோகி இணைய ஒலி 24x7
14 years ago
9 comments:
\\ஒற்றை ரீல் இயக்கம் போன்ற வணிக சினிமாவுக்கு நேரடித் தொடர்பு இல்லாத முயற்சிகளே தமிழ்ச் சூழலில் சிரமமானவை என்கிறபோது, வணிக சினிமாவுக்குள் மாற்று முயற்சிகள் மேலும் கடினமானவை.\\
நிதர்சணம்
ஒரு விஷயத்தை நாம் யோசிக்க வேண்டும்.
ஹிந்தி படங்களுக்கு இருக்கும் Marketing மிக பெரியது அதனால் அவர்கள் RISK எடுக்க தயங்குவது இல்லை. இதே போல் ஓர் நிலை கண்டிப்பாக மற்ற மொழிகளிலும் வரும். இந்த ஒரு காரணத்தினால் தான் மலையாளத்தில் கூட இப்பொது எல்லாம் commercial films அதிகமாக வருகிறது.
புத்தாண்டு வாழ்த்துக்கள் நண்பா.
உங்க வலை நல்லாயிருக்கு..
புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்..
நல்ல சினிமா பற்றிய எனது வலை.
வந்து நிறை/ குறை சொல்லுங்கள்..
butterflysurya.blogspot.com
புத்தாண்டு வாழ்த்துகள் அத்திரி..
நன்றி அதிரை ஜமால்
நன்றி வினோத்
நன்றி ஆனந்த்
நன்றி வண்ணத்துப்பூச்சியார்
நன்றி கேபிள் சார்
புத்தாண்டு வாழ்த்துக்கள்! :)
நல்ல அலசல், புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்
நன்றி ஊர்சுற்றி
நன்றி நசரேயன்
Post a Comment